புதன், 18 ஆகஸ்ட், 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்—தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை

உமாசங்கர்..நியாயமான ஒரு அதிகாரி.. அவருக்கு கொடுத்த அனைத்து வேலைகளும் திறம்பட செய்த ஒரு அதிகாரி என்பதை இன்றைய கலைஞர் அரசே அவரை அங்கீகரித்து பல்வேறு பொறுப்புகளை கொடுத்ததில் இருந்து அறிந்து கொள்ளலாம்..

இன்று அவரை இடைநீக்கம் செய்தது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.. அதுவும் எந்த ஊழல் புகாரும் இன்றி. 18 வருடங்களாக தெரிந்திராத விஷயத்தை இன்று தான் கண்டுபிடித்ததாக ஒரு கதை..ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா சிக்கிய பொது ஒரு தலித் என்ற கேடயத்தை இதே முதல்வர் பயன்படுத்தியது அனைவருக்கும் தெரியும்..

இன்று நாங்கள் கேட்கிறோம்..தலித் என்பதாலா? அல்ல தன் குடும்ப விஷயங்களில் தலையிட்டதாலா?

தி.மு.க அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கண்டனத்தி இங்கு பதிவு செய்கிறேன்.

( இணையத்தின் மூலமாக , வலைப்பதிவர்கள் மூலமாக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ள அய்யா தருமி, நண்பர் வால்பையனுக்கும் நன்றிகள்)

அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நடிகர் திலகம்-இன்றைய இளைஞர்களுக்காக

சிவாஜி பற்றி சில வரிகள்

எதை எழுதுவது எதை விடுவது ?
இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக்
காட்டும் உன்னத நடிப்பைச்சொல்வேனா ?.. கவியரசர் கண்ணதாசன்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு வலையுலக நண்பர் நடிகர் திலகம் பற்றி இளைஞர்கள் பார்வை என்ற ஒரு கட்டுரை எழுதி இருந்தார்..சிவாஜியின் முகபாவனைகள் யதார்த்த்தை காண்பிப்பதில்லை என்று.(?) அந்த நண்பர் மீது குற்றம் சொலவதற்கோ, பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதோ என் நோக்கம் இல்லை.ஏனென்றால் என் மகன்களும் அதே தான் சொல்கிறார்கள்..இது அவருக்காக எழுதியது இல்லை..என் மகன்களைப் போன்று உள்ள எண்ணற்ற இளைஞர்கள் நடிகர் திலகத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் , அனைத்து இளைஞர்களுக்குமான கட்டுரை..


சிவாஜி என்பது ஒரு சரித்திரம்..அதன் சில பக்கங்களை மட்டும் புரட்டிவிட்டு விமர்சனம் செய்வது. அந்த மகா கலைஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்காது..


இன்றைய இளைஞர்கள் சிவாஜியை , யானையை பார்த்த குருடர்கள் கதையில் வருவது போல பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வது போல் சொல்வது எந்த வகையிலும் ஒரு உயர்ந்த மனிதனுக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியாது.. அவர் யாதர்த்தமான படங்கள் அதிகம் கொடுக்கவில்லை என்றும் உங்களால் ஈடுபாட்டுடன் பார்க்க முடியாத படங்களில் அதிகம் நடித்துள்ளார் என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கலாம்.ஏனென்றால் அந்தக் காலம் வேறு..இன்று SMS காலம்..இந்தக் காலக் கண்ணோட்டத்தில் பழைய 50 வருஷங்களுக்கு முன்னர் வந்த படங்களை பார்க்காதீர்கள்..


பராசக்தியில் தொடங்குகிறது அந்த மகா கலைஞனின் திரைப்பிரவேசம். கமல் சொல்வது மாதிரி அன்றே முடிவு செய்து கொள்கிறார்..தாம் வளர வேண்டிய கலைஞன் அல்ல..நாம் செய்யவேண்டியது தனது திறமைகளை வெளிப்படுத்துவது மட்டும் தான் என்று முடிவெடுத்துக் கொண்டு தான் பல்வேறு கதாபாத்திரங்களை தெரிந்தெடுத்து 150 படங்கள் தொடர்ந்து வித்தியாசமான தோற்றத்தில் ,வித்தியாசமான உடல்மொழியில் ,திரையில் வாழந்து காட்டியுள்ளார்..


எனக்கு படத்துணுக்குகளை இணைக்கத் தெரியாது..இல்லை என்றால் அதை உங்கள் பார்வைக்கு வைத்து இருப்பேன்.. இருந்தாலும் சில படங்களில் சில காட்சிகளை இங்கு தருகிறேன்..


முதல் படம்..பராசக்தி..எல்லொருக்கும் பராசக்தி என்றால் கோர்ட் சீன் தான் ஞாபகத்திற்கு வரும்..அதே பட்த்தில் தான் “நானே ராஜா,நானே மந்திரி ‘ என்று ஒரு காட்சி பைத்தியமாக பண்ணியிருப்பார்.. மற்றொரு காட்சி..பிளாட்பாரத்தில் தூங்குபவரை எழுப்பி, ஏன் முழிக்கிறாய்? என்ற காவல்காரனின் கேள்விக்கு தூங்குபவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான் என்பார்...இந்தக் காட்சியினைப் பாருங்கள்..முதல் பட நடிகனா? முந்நூறு படங்களில் நடித்தவரா என்ற கேள்வி உங்களுக்கு கண்டிப்பாய் வந்துவிடும்..


காட்சிக்கு தேவையானதை . இயக்குநர் கேட்பதை மட்டும்செய்து கொடுப்பவன் நடிகன்.. எம்.ஆர்.ராதா, சிவாஜி இருவரும் கலைஞர்கள்.. இருவரும் சின்னஞ் சிறிய நகாசு வேலைகள் செய்து அந்த ஒரு சில நொடி வரும் காட்சியினை ஆயுளுக்கும் மறக்க முடியாமல் செய்து விடுவார்கள் ..

அந்த வரிசையில்..

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரக்கச்சேரி நடந்து கொண்டு இருக்கும். வாசித்துக்கொண்டு இருப்பார். அந்த சமயம் அழகான பெண் வந்து கூட்டத்தில் அமரவே பக்கதில் இருக்கும பாலையா அண்ணனைப் பார்த்து ஒரு கண் அடிப்பார் பாருங்கள்.. அங்கே தான் சிவாஜி என்ற கலைஞன் உயிர்போடு இருப்பான்..

இதே படத்தில் ரெயிலில் பயணம் செய்யும் போது பத்மினியும் அவரும் கண்களால் பேசிக் கொள்வது மிகை நடிப்பாகுமா என்ன?


ஆண்டவன் கட்டளையில்..ஆறுமனமே ஆறு என்ற பாடல்.. அறுபடை வீடுக்கும் சென்றுவிட்டு பாட்டு முடியும் போது ஒரு சின்ன பிட் மியுசிக் வரும்..அதுக்கு எந்த நடன இயக்குநரும் நடகர் திலகத்திற்கு தேவை இல்லை..கையில் நிலக்கடலையை வைத்து கொண்டு அதை ஊதிக் கொண்டே ஒரு ஆண்டிப்பண்டார நடை நடப்பதை பாருங்கள்.அப்ப தெரியும் அவன் ஒரு யுகக் கலைஞன் என்று..

உத்தமபுத்திரன் ..யாரடீ நீ மோகினி பாடல் பாருங்கள் இன்றைய சூப்பர் ஸ்டார் நடக்கும் side walk க்கை அன்றே நடந்திருப்பது ஆச்சர்யத்தை தரும்.


பாகப்பிரிவினை படத்தில் சரோஜாதேவி தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டவுடன், தான் ஊனமானவன், தன்னை நன்றாக பார்த்துச் சொல் என்று சொல்லிக் கொண்டு அவர் முன் வலமும் இடமுமாக காலை இழுத்துக் கொண்டு ஒரு ஊன நடையை நடந்து காட்டுவதை அவதானியுங்கள்


பாசமலர்..முதலிரவுக்காட்சி..ஆண் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து வெட்கப்பட்டு, அந்தப் புகைப்படத்தை திருப்பிவைக்கும் போது அவர் முக பாவங்களை கவனியுங்கள்..


நவராத்திரி ..நவரசங்களையும் காட்டும் மாதிரி ஒன்பது வகையான பாத்திரங்கள். ஒவ்வொரு வேடத்திற்கும் வேறு வேறு உடல் மொழி..அதில் ஒன்று தான் மனநோய் மருத்துவர்.. சாவித்திரியை வார்டுக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லிவிட்டு, ஒரு நடை நடந்து கதவு வரை சென்றவர் , திரும்பி வந்து மறந்து போன ஸ்டெத் தை எடுத்து திரும்பிச் செல்வார் ..அந்தக் காட்சியைப் பாருங்கள்..


பாலும் பழமும் படத்தில் மருத்துவருக்குரிய வெள்ளை உடை அணிந்து மருத்துவமனையில் ஒரு நடை நடந்து வருவார் .அதைப் பார்த்து டாக்டராக வேண்டும் என்று டாக்டராக ஆனவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியும்


திருவருட்செல்வரில் அப்பராக..காற்றில் பறக்கும் காவி உடையை கையில் பிடித்துக் கொண்டு அவர் எழுந்து வருவதாக ஒரு காட்சி ..பாருங்கள்..


உயர்ந்த மனிதன் பாருங்கள். அதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத உயர்ந்த மனிதனுக்குரிய வித்தியாசமான உடல் மொழி கையாண்டு இருப்பார்..


ஞானஒளி படத்தில் இடைவேளைக்கு முன்னர் மணி அடிக்கும் ஆண்டனியாகவும், பின்னால் பணக்கார்ராகவும் இரண்டு வேடங்களுக்கும் ஒட்டுமொத்த வித்தியாசம் காண்பித்து இருப்பதை கவனியுங்கள்..


பார்த்தால் பசிதிரூம் படம் பாசமலர் வந்து வெற்றி பெற்றவுடன் அதே குழுவினர் பங்கேற்று வெளிவந்த படம்.. பாசமலர் பார்த்துவிட்டு பா.பசிதீரும் பாருங்கள்.. பாசமலருக்கும் இப்படத்திற்கும் 100 விழுக்காடு வித்தியாசம் காட்டி இருப்பார்.ஒரு காலை விந்தி விந்தி அப்படம் முழுக்க ஒரு புதிய உடல் மொழி காட்டி இருப்பார். படம் பார்க்க நேரம் இல்லை என்றால்..உள்ளம் என்பது ஆமை.என்ற பாடலாவது கேட்டுப் பாருங்கள்...அந்த இமயத்தின் சில கூறுகளை அறிந்து கொள்வீர்கள்

புதியபறவை கிளைமாக்ஸ் காட்சியை தமிழ் திரைப்பட வரலாற்றில் மறைக்க முடியாத காட்சியாக மாற்றி அமைத்து அவரின் அபார நடிப்புத் திறமைதானே..


இது மாதிரி அவர் படங்கள் முழுதும் சின்னச் சின்ன மறக்க முடியாத காலத்தால் அழியா காட்சிகள் இருக்கும்..


இப்படிப் பட்ட அற்புத திறமைக்காகத் தான் அவரை பல்கலைக் கழகம் என்றார்கள்..


மிகை நடிப்பு என்று சொல்லப்பட்ட பாசமலரில் தான் ஜெமினியோடு ஒரு ஆக்ரோசமான விவாத்த்திற்குப் பிறகு வசனமே பேசாமல் ” கெட் அவுட்” என்று சொல்வார்..


எந்தவித முன்னுதாரணங்களும் இல்லாமல், தான் பார்த்த, பழகிய நபர்களின் ஆளுமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, திரைவடிவமாக்கியவர்..


கப்பலோட்டிய தமிழன் பாருங்கள்.. கொஞ்சம் கூட மிகை நடிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் அபார வெற்றிக்குப் பிறகு அதே நிறுவனம், அதே விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்..கட்டபொம்மனில் கர்ஜித்தவர் , அந்த வெற்றியைச் சுவைத்தவர், அதே மாதிரி க.தமிழனிலும் கர்ஜித்திருக்கலாம்.. செய்யவில்லை..அடக்கமான, சாந்தமான முகத்துடன் வ.உ.சியாக வாழ்ந்து காட்டி இருப்பார்.

வாழும் மனிதர்களை மட்டுமா திரையில் காண்பித்தார்?

புராண கதாபாத்திரங்களான சிவன், நக்கீரன், நாரதர்,கர்ணன், பரதன், அரிச்சந்திரா எனப் பல்வேறு பாத்திரங்கள்..


உங்கள் பார்வைக்கு என்னால் நடிகர் திலகம் நடித்த 50 படங்களாவது வரிசைப்படுத்த முடியும்
பாருங்கள்..நடிகர் திலகத்தை திறந்த கண்ணோடு பாருங்கள்.. வேண்டுமென்றால் எனக்கு மின்ன்ஞ்சல் அனுப்பவும். நல்ல படங்கள் அல்ல.. அவர் நடித்த நடிகர்களுக்கான பாடங்கள் வரிசை தருகிறேன்..

இதையும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=da89d7irDO0&feature=related

அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

சனி, 31 ஜூலை, 2010

நட்பு

(இன்று நண்பர்கள் தினம்..அதற்காக எழுதப் பட்ட கவிதை)

அண்ணன் தம்பி அக்கா தங்கையென
எண்ணற்ற உறவுகள் ஏராளம் இங்குண்டு
கண்ணில் பயிராகும் காதலும் ஒரு உறவுதான்

அத்தனை உறவுக்கும் ஆதாரம்
சொந்தம் என்றொரு தொடர்புண்டு

ஆதாரம் எதுவுமின்றி ஆகாயம் வரும்
சூரியனைப் போன்றதொரு தூய உறவுண்டு

ஆதாயம் எதுவுமின்றி அதுவாய்ச் சுரக்கும்
தாயின் பாலும்
சேயின் சிரிப்பும்
பூவின் தேனும்
புதுப் புனல் நீரும்

தூய்மையாய் இருப்பது போல்-நட்பும்
வாய்மையாய் இருந்திட்டால் வாழ்க்கை வசமாகும்

அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 30 ஜூலை, 2010

நியூமராலஜி- விவாதத்திற்கான அழைப்பு

“நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகருக்கும் கடவுள் உண்டு
காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு”
கண்ணதாசன்

1992- ல் நான் சவூதி வந்து இறங்கிய வரையில் நான் எந்த ராசி என்ன நட்சத்திரம் என்று கூடத் தெரியாது. முழு நாத்திகன்.இங்கு வந்து நான் பட்ட கஷ்டங்கள்..அது எனக்கு ஒரு மோசமான காலம்..1994-ல் அப்பா முடியாமல் மருத்தவமனையில் சேர்த்திருக்க, மருத்துவர்கள் கை விரிக்க., அண்ணன் தகவல் சொன்னதும் . exit-entry visa formalities எல்லாம் முடித்து விமான தளத்திற்குச் சென்றால்.. இந்தியா செல்லும் எல்லா விமானங்களும் ரத்தான செய்தி.. இந்தியவில் பிளேக் நோய் என்று காரணம் காட்டி எல்லா இந்தியாவுக்கும் சவூதிக்குமான எல்லா விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது அன்று முதல். அன்று இரவு வரை விமான தளத்தில் இருந்துவிட்டு, இன்னொருவர் சொன்ன யோசனையின் படி ,காலையில் ஸ்ரீலங்கா விமானம் பிடித்து , கொழும்பு சென்று அதன் பின் சென்னை அல்லது திருச்சி செல்லலாம் என்று வீட்டுக்கு திரும்பி படுத்தவனை, எழுப்பியது “ அப்பா இறந்துவிட்டார்” என்ற தொலைபேசியே.. அப்பத்தான் என் மனைவி ஜாதகம் பாக்கணுங்க என்று சொல்லி , 1994க்குப் பிறகு தான் என் ராசி , நட்சத்திரம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று வரையில் ஜாதகம் மேல் நம்பிக்கை இல்லை.. ஜாதகம் என்பதே நமக்கு சாதகமாகச் சொல்வது என்ற நம்பிக்கையைத் தவிர அதில் வேறு ஒன்றுமில்லை.


ஆனால் பிறந்த தேதிமேல் எனக்கு ஒரு ஆர்வம் சின்ன வயசுலெயே இருந்து இருக்கிறது..ஜூலை 15- காமராஜ், ஆகஸ்ட 15- சுதந்திர தினம் செப் 15-அண்ணா,அக்டோபர் 15- நான் என்ற மிதப்புலேயே வளர்ந்தவன். பின்னாளில் கண்ணதாசன் 24-ந்தேதி பிறந்தவர் என்றும் நான் 15 – ரெண்டுபேருக்கும் பிறந்த எண் கூட்டுத் தொகை 6 – என்றதுடன் நானும் கண்ணதாசன் மாதிரி வாழ்வேன் ,ஒருகையில் மதுவும் ஒரு கையில் மாதுவுடனும் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.கல்லூரிக் காலங்களில் கவியரங்களில் கலந்து கொண்டதும் இது அதிகமானது.


அதிலிருந்து பிறந்த தேதி மட்டும் நான் கேட்பதுண்டு..


இன்று யதேச்சையாக மண்ணின் மைந்தர் முத்தையாவின் பிறந்த தேதி பார்த்தேன்..ஆகஸ்ட் 1 என்று இருந்தது.பார்த்தவுடன் மனசு குளிர்ந்தது..எனக்கு மிகவும் நெருக்கமானவர் சிவாஜியும் 1 ந்தேதி..2-ந் தேதி பிறந்தவர்கள் தனித்த சிந்தனைக்கு உரியவர்கள் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.. காந்தி, பாரதி, பாரதி தாசன்.2-ந் தேதி.. 5-ந் தேதி பிறந்த வாஜ்பாயும் டாகடர் ராதாகிருஷ்ணனும், நேருவும் சபலத்திற்கு சொந்தக்காரர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.. 5 ந் தேதியும் கவிஞர்களுக்கு உரியது. 3 ந் தேதி நினைத்ததை சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. கலைஞர், ரஜினி 3-ந் தேதி பிறந்தவர்கள். இந்த பிறந்த எண் விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிரியத்துக்கு உரியதாக இருந்து வந்து உள்ளது.மூட நம்பிக்கை என்று தெரிந்தும்..


ஆனாலும் என் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது , இந்த மாதிரி மூட நம்பிக்கை எல்லாம் தலையிடவிடாமல், திலீபன் என்ற போராளி பெயரும், கல்லூரிக் கால என் புனைபெயரான உதயநிலவன் என்று இரண்டாவது மகனுக்கும் பெயரிட்டேன்.

நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவலாக உள்ளது

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 23 ஜூலை, 2010

பத்திரிக்கைகளின் நண்பர் எழுத்தாளர் கருணாநிதி????????

22-நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூட தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர் ஆட்சியில் தான் எழுத்தாளர்களுக்கு போதாத காலம் போலத் தெரிகிறது.

மதுரையில் தினபூமி என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கிரானைட் வியாபாத்தில் ஊழல் நடந்துள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக..செய்தி வெளியிட்டால் கைதா.?. மான நஷ்ட வழக்குதானே தொடுப்பார்கள்.. சட்டத்தின் வழி ஆட்சி செய்வதாகச் சொல்லும் தி.மு.க அரசு..தான் இந்தக் கொடுமையைச் செய்துள்ளது..

இன்னொரு கொடுமை... பதிவுலகில் பரபரப்பான விஷயங்களை, முக்கியமாக காவல்துறையின் ஊழல்களை, அடாவடிகளை , துறை சார்ந்த அதிகாரிகளின் மூலமே பெறப்பட்டு வெளியிடப்பட்டிருக்குமோ என்று நம்பிக்கையை தோற்றுவிக்கும் தொடர் பதிவுகள் வெளியிட்டுக் கொண்டு இருந்த சவுக்கு வலைத்தளத்தின் ‘சவுக்கு” சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கொடுமை என்னவென்றால் கைது செய்யப்பட்ட்து இந்தக் கட்டுரைக்காக அல்ல.. ஏதோ பொய்க்குற்றம் சுமத்தி ஜாமினீல் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டுள்ளார்கள்.. கஞ்சா கேஸ் புகழ் ஜெயல்லிதா ஆட்சிக்கும் , பொய்க் கேஸ் புகழ் தி.மு.க ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?


காமராஜர் அன்று சொன்னது.. ”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”

ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னது ..”விநாச காலே விபரீத புத்தி”

பதிவர் சங்கர் கைதுக்கு கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 16 ஜூலை, 2010

கவிதாயினி தேனம்மை லக்‌ஷ்மணன்

2009 – செப்டம்பர் மாதம் துபாய்க்கு சென்றிருந்தேன்..அங்கு என்னுடன் கூட இருந்த என் அண்ணன் மகன், சித்தப்பா ,முகப்புத்தகம் என்று ஒரு தளம் உள்ளது..அதில் தங்களை இணைத்துக் கொண்டு அதில் துபாயில் எடுத்த புகைப்படங்களைப் போட்டீர்கள் என்றால், எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம் என்று யதேச்சையாகச் சொல்லப்போக, சவூதி வந்தவுடன் முகப்புத்த்கத்தில் இணைத்துக் கொண்டு என் புகைபடங்களை வெளியிட்டேன். அந்தத் தளத்தின் செயல்பாடு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.எல்லாவற்றையும் பற்றி எழுதலாம். எல்லோரையும் சென்றடைய மிக எளிதான வழியாகத் தெரிந்தது.


அப்படி ஒரு நாள் செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு முகப்புத்தகத்தில் நண்பராக அறிமுகனானவர் தான் கவிஞர் தேனம்மை.அவரது வலைத்தளம் (சும்மா) சென்று பார்த்த பொழுது அது சமயம், வரிசையாக பல்வேறு பூக்களின் தலைப்புகளை வைத்து, அந்தப்பூக்களின் தன்மையை, ஒவ்வொரு பூக்களுக்கும் உள்ள அதனதன் சிறப்புத்தன்மையை எடுத்துக் கொண்டு. வாழ்வியல் தத்துவங்களோடு இணைத்து தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தார்..ஒரு 30 பூக்களாவது கவிதைகளாகி இருக்கும்.கல்லூரி மாணவப் பருவத்திற்கு அப்புறம் நீண்ட இடைவெளி விட்டு 20 வருடஙக்ளுக்குப் பிறகு எழுதுவதாகவும் , தன் வாழ்வில் இது இரண்டாம் வசந்தம் என்றும் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.. உண்மையிலேயெ அதை நம்ப முடியவில்லை. கவிதைகள் எழுதாமல் இருந்தாலும், ஒரு கவி மனத்துடன் , கவிதை எழுதுவதை ஒரு தியானம் மாதிரி பழகி இருந்தால் மட்டுமே , இப்படி அடைமழை போல் கவிதை வரும் என்பது ஒரு சின்ன எழுத்தாளன் ஆன எனக்கு நன்கு தெரிந்து இருந்த்து. அந்த பூக்களின் தொடர் இடுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்..


மின்னலைப் போல அவ்வப்போது அற்புதமான வரிகளும், கணங்களும் இவர் கவிதைகளில் தென்படும்..சில கவிதைகளில் இந்தமாதிரி அற்புதமான வரிகள் அங்கங்கே காணப்படும்..அதே சமயம், பல கவிதைகள் வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதவில்லை என்றால் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசரத்தில் எழுதியவைகளாக, படிப்பவரின் மனதில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல்,வெறும் வரிகளாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளுக்கு அவர் சரியான பங்களிப்பைத் தரவில்லை, அக்கவிதை வேண்டி நிற்கும் வரிகளை தேட நேரம் இல்லாமல் எழுதியதாக இருக்கும்


இன்று அவர் வலைத்தலத்திற்கு இரண்டாம் ஆண்டு தொடக்கம்.. போய்ப்பாருங்கள்.. அவர் வலைத்தள முகவரி http://honeylaksh.blogspot.com


இந்தக் கவிதை நல்லது , இது சரியல்ல என்று சொல்லி உங்கள் அனுபவங்களுக்கு நான் இடையூறாக இருக்க்கூடாது என்பதால், எந்த வரியையும் எடுத்துப்போடவில்லை..எனக்குப் பிடித்த கவிதைகள் சிலவும், வரிகள் பலவும் உண்டு.


இந்த ஒரு வருட காலத்தில் 183 பின்பற்றுபவர்களையும்( ரசிகர்கள்) 220 இடுகைகளும் 18000 விருந்தினர்களும் என – இது ஒரு பெரிய புலிப்பாய்ச்சலாகத் தான் தெரிகிறது.

வலைத்தளப் பதிவர்களில் இக்கவிஞர் மிக முக்கியமானவராக அறியப்பட்டுள்ளார்.

மகளிர் தினத்திற்காக இவர் எழுதிய கவிதை ஒன்று, திரைப்பட இயக்குநர் திரு.செல்வகுமார் அவர்களால் கவனம் பெறப்பட்டு எந்த வித மாற்றங்களும் இன்றி இசை வடிவமாகி உள்ளது, இவரது மொழி ஆளுமைக்கு ஒரு சான்று.அந்தப் பாடலையும் அவர் தளத்தில் காணலாம்

யூத்விகடனில் தொடர்ந்து இவர் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்சமயம் லேடிஸ் ஸ்பெஷல் என்ற இணையப்பத்திரிக்கைக்காகவும் தனது பங்களிப்பைத் தருகிறார் என்று இவர் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன்


முகப்புத்தகத்தில் நேற்று முன் தினம் அவரது பிறந்த நாள் ஒரு கொண்டாட்டமாகவே அவரது நண்பர்களால் கொண்டாடப்பட்டது எனக்கு மேலும் ஆச்சர்யத்தை வழங்குகிறது.. அவரது பன்முக ஆளுமையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கிறேன்.


ஒரு குடும்பத்தலைவியாக இருந்து கொண்டு குடும்ப்ப் பொறுப்புகளுடன், எழுத்துப்பணியையும் ,நண்பர்கள் வட்டத்தையும் போற்றிக் கொண்டு, கற்பனையையும் வற்றவிடாமல் பார்த்துக்கொள்வது எளிதல்ல..அவரது இந்த ஆளுமை வெளிப்பாட்டுக்கு தெய்வீகப் புன்னகையுடன் அன்பையும் ஆதரவையும் வழங்கிக் கொண்டிருக்கும் அவரது அன்புக் கணவருக்கு தேனம்மையின் நண்பர்கள் மற்றும் கவிதை ரசிகர்கள் சார்பாக இந்தப்பதிவின் மூலம் நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்.


கவிதைகளுக்கு , அது வேண்டி நிற்கும் கால அவகாசத்தையும், அக்கவிதை வேண்டி நிற்கும் அற்புத வரிகளையும், பதியம் போட்டு எடுத்து வழங்கினால் இன்னும் உயரங்களைத் தொட முடியும்..


பிறந்த நாளுக்கும், வலைத்தள இரண்டாம் ஆண்டு தொடக்கத்திற்கும் எனது வாழ்த்துக்கள்
சிகரம் தொட்டு விடும் தூரம் தான்..

ஒரு கவிதைகளின் ரசிகன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வியாழன், 15 ஜூலை, 2010

சிவகாமியின் செல்வன்

அரசியல் என்னவென்று தெரியாத காலத்திலேயே எனக்குப் பிடித்த தலைவர் பெருந்தலைவர் காமராஜ் தான்..காரணம் ஒன்றுமில்லை.. எங்க அம்மா பெயரும் சிவகாமி...அதுனாலே பள்ளித் தோழர்கள் எல்லாம் ‘சிவகாமியின் செல்வன்” என்று என்னைக் கிண்டலடித்தே, எனக்கு அவர் மீது ஈடுபாடு வரக் காரணம்..அது தவிர சிவாஜிதான் என் கதாநாயகன். அவருக்கும் இவர் தான் தலைவர்., தலைவரைப் புடிக்க வேறு காரணம் வேண்டுமா என்ன? நான் சொல்வது 1969..நான் ஐந்தாவது படிக்கும் பொழுது இருந்த மயக்கம்.

அப்படிப் பட்ட ஒரு நாளில் தான் அவரை நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி முடித்து சிவகங்கை செட்டி ஊரணியில் தவளைக்கல் எறிந்து விளையாடிவிட்டு அப்ப்டியே மேலூர் ரோடுக்கு வந்தால் ஒரே கூட்டம். கொஞ்ச தூரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் காமராஜ் வந்து இருப்பதாக அந்த முக்கில் உள்ள விடுதியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் என் வகுப்புத்தோழர்களும் அவரைப்பார்த்து விடுவதென்று விர்ரென்று விருந்தினர் மாளிகை நோக்கி ஒடினோம். உள்ளே ஒன்றும் அவ்வளவு கூட்டம் இல்லை..எங்களை யாரும் தடுக்கவும் இல்லை..


காமராஜ் புகைபிடித்து யாரும் பார்த்துண்டா எனத்தெரியாது. நான் பார்க்கும் போது அவர் புகை பிடித்துக் கொண்டு இருந்தார். மாளிகை வராந்தாவில் சாய்ந்த இருக்கையில் சாய்ந்து கொண்டு, சுற்றி இருந்தவர்களிடம் பேசிகொண்டு இருந்தார்.. நாங்கள் அங்கு போய் நின்றதும்,பேச்சை நிறுத்தி விட்டு,எங்களை அருகில் வருமாறு அழைத்தார். புத்தகப்பையுடனே அவரிடம் சென்றோம்..எங்களைப் பற்றி, என்ன பெயர் என்று கேட்டுவிட்டு என் பெயர் நல்ல பெயர் என்று சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.. என்ன படிக்குறே என்று ஒவ்வொரு பையன்களையும் கேட்டார்..

“இங்கே எதுக்கு வந்தீங்க..?
”உங்களை பாக்கத்தான்..”
எதுக்கு என்னையப் பாக்கணும்?
”சும்மாதான்..ஆட்டோகிராப் வாங்க ”என் பக்கத்தில் இருந்த கார்த்தி பயப்படாமல் பொய் சொன்னான்..
அப்படியா..எதுல போட? அப்படின்னு சொன்னதும் எங்களுக்கு வந்த குஷி ...சொல்ல முடியாது ..விறுவிறுவென்று எங்கள் புத்தக்ப்பைக்கட்டை தொறந்து ,கையில் கிடைத்த நோட்டை எடுத்துக் கொடுத்தோம்.. எங்கள் எல்லோர் நோட்டிலும் கையெழுத்து போட்டார்..

”இங்கேல்லாம் வரக்கூடாது படிக்கிற புள்ளைக ஒழுங்கா படிக்கணும்..கூட்டம் நாட்டத்துக்கெல்லாம் போகக்கூடாது. ஒழுங்கா வீட்டுக்கு ஓடுங்க..” என்றார்..

வீட்டுக்கு ஆசையாய் ஆசையாய் வந்து சொன்னா..அப்பாவின் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அவன் கிடக்குறான்.....பைய..... என்றார்கள்..அப்பாவிற்கு சிவாஜியைப் பிடிக்கும்..காங்கிரஸைப் பிடிக்கும். ஆனால் காமராஜைப் பிடிக்காததின் காரணம் பின்னால் கல்லூரிக்காலத்தில் தான் தெரிந்தது


1971 பொதுத்தேர்தல்..சிவாஜி,கண்ணதாசன்,ஜெயகாந்தன் எல்லொரும் ஸ்தாபனக் காங்கிரஸை ஆதரித்தார்கள்.நானும் தான்..கலைஞர் இந்திரா காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்..
அந்த்த் தேர்தலில் தான் நான் காமராஜைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டேன்..

கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்

மதிய உணவு கொண்டு வந்த மகாத்மா..

இரண்டு முறை பாரதத்தை வழி நடத்த தகுந்த தலைமையை தேர்ந்தெடுத்தவர்.நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும்.

அரசு அதிகாரத்தை குடும்ப நலனுக்கு தவறாகப் பயன்படுத்தாதவர்.

திருச்சி பாரத மிகுமின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி டாங்க் உற்பத்தி தொழிற்சாலை.,கிண்டி, அம்பத்தூர் தொழில் பேட்டைகள், தமிழகத்தில் தொழிற்சாலைகள்..நீர் நிலைகள் என தமிழகம் மிகப் பெரும் வளர்ச்சி அடைந்த்தும் அவர் ஆட்சியில் தான். மொத்தம் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றி இருக்கிறார்.


1971 தேர்தலில் அவரைப்பற்றி எவ்வளவு அவதூறுகள்..இன்று நினைத்துப் பார்க்கும் போது, இன்றைய நிலையில் கனவிலும் நினைக்க முடியாத,ஒரு எளிமையான வாழ்வை வாழந்தவர் காமராஜர், அவரைப் பற்றியா இத்த்னை அவதூறுகள்!!!

அந்த உத்தமத் தலைவனுக்கு எமனாக வந்தது தான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என வரலாற்றில் வர்ணிக்கப்படும் “எமெர்ஜென்ஸி’ -நெருக்கடி நிலைக்காலம். நாடு முழுதும் தன்னையொத்த தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் வாட, கலைஞர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரே காரணத்தால், கைதாகாமல் வெளியில் இருந்தாலும், ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலைதான் அவரது அகால மரணத்திற்கு முழு முதல் காரணம்.

1976 அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளில் தென்னகத்து காந்தி நம்மை விட்டுப் பிரிந்தார்..

அய்யா நீங்கள் என்னிடம் நேரில் சொன்ன மாதிரி நான் நல்லா படிச்சுட்டேன்.. உங்களால் தான் எங்களால் படிக்க முடிந்தது. இன்று நான் இருக்கும் இந்த இடத்திற்கு தந்தை பெரியாரும் நீங்களும் தான் காரணம் என்ற நன்றியுடன் உங்களை வணங்குகிறேன்

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com