வெள்ளி, 25 நவம்பர், 2011

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தி.மு.கவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்.?. நண்பரின் கேள்விகளுக்குப்பதில்கள்

நண்பரின் கேள்விகள்..
அண்ணா....
இதுவரை அதிகம் முறை தி.மு.க வுக்கு வாக்களித்ததால் கேட்கிறேன்....
..2 லட்சம் நம் சொந்தங்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது... இன்னும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முகாம்களில்....
..ஒரு நாட்டின் 40 வருட ஆய்விற்க்குக் (மக்கள் ...வரி,உழைப்பு) கிடைத்த பலனான செயற்கைகோளில் 2g அலைக்கற்றையில் செய்த 176 ஆயிரம் கோடி ஊழல் மூலம் நடத்தப்பட்ட உழைப்புச்சுரண்டல்....
..சேது சமுத்திர திட்டத்தில் அடித்த 2500 கோடி (திட்டம் தோல்வி)....அடிக்கடி கொடூரமாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும் நம் மீனவர்கள்...
..மதுரையில் ஓரு 10க்கு 10 கடை போட்டாலே "கப்பத்துக்கு" வரும் அழகிரியின் ஆட்கள்... தென் மாவட்டம் முழுவதும் நடக்கும் அவரது "தனி" அரசாங்கம்....
85000 கோடிக்கு மேல் பெயர்த்தெடுக்கப்பட்ட கிரானைட் மலைகள் (அரசுடையது)
..4000 கோடிக்கு நம் வரிப்பணத்தில் "தொலக்காட்சி" கொடுத்துவிட்டு , வருடத்திற்கு 4500 கோடி கேபிள் இணைப்பில் சம்பாதிப்பது...
..காப்பீட்டுத்திட்டம் என்கிற பெயரில் star insurance மூலம் ஸ்டாலின் குடும்பத்துக்கு வருடத்திற்க்கு வரும் வருமானமானமாக சொல்லப்படும் 300கோடி...
அண்ணா இன்னும் சொல்ல எனக்குத்தெரிந்து 20 பக்கங்களுக்குமேல் இருக்கிறது....
"நல்லகண்ணு" "தமிழருவி மணியன்" போன்ற நல்லவர்களை தமிழ் நாட்டு மக்கள் நிறைய பேருக்குத் பெயர்கூட தெரியவில்லை... இந்த நிலையில்...
... மஞ்சள் துண்டு போட்டு பகுத்தறிவு பேசி "தம் மக்கள்" நலம் ஒன்றே குறிக்கோளாய் இருக்கும்.அதற்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் நம் தமிழினத்தலைவருக்கு ஓட்டு போட வேண்டுமா...?... உங்கள் மனசாட்சியோடு கூடிய பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நன்றி

முகநூலில் தம்பி அரவிந்த் யுவராஜ் என் குறிப்புக்கு, போன பதிவுக்கு போட்ட பின்னூட்டம் மேலே உள்ளவைகள்..


தம்பி அரவிந்த் யுவராஜ் போன்றவ படித்த சிந்திக்கத் தெரிந்தவர்கள், பெரு நகரங்களில் வசிக்கும் இன்றைய இளைய தலமுறையினர், இணையத்தில் அரசியல் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இலவசமும் ஊழலும் இந்த ஆட்சியின் சாபக்கேடாகத் தெரிகிறது..

எந்தவித பின்புலனும் இன்றி படிப்பு,உழைப்பு மட்டுமே மூலதனமாக்க் கொண்டு குடும்பம் விட்டு விலகி நாடுவிட்டு நாடுவந்து, பாலைவனத்தில் வெயிலிலும் குளிரிலும் தனியாக்க் கிடந்து கஷ்டப்படும் எனக்கு மட்டும் இருக்காதா? ஊழலற்ற நேர்மையான திறமையான அரசு தமிழகத்தில் இருக்க வேண்டும்..மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக பயனாளியைச் சென்று சேரவேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கும் உண்டு.நானும் உங்களை போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்.

தம்பி சீமானுக்கு நிகரான தமிழ் உணர்வு கொண்டவன் தான்.


ஆனால் நடைமுறைச் சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் இருக்க என் வயசும் நான் கற்றுக் கொண்ட குறைந்தபட்ச அரசியல் அறிவும் என்னை தி.மு.கவிற்கு ஆதரவாக எழுதவும் பேசவும் செய்கிறது.


நண்பர் எழுதியது போல் நல்லகண்ணு தமிழருவி மணியன் போன்ற நல்ல அரசியல்வாதிகள் திமுகவிற்கு மாற்றாக இத்தேர்தலில் நிற்கவில்லை. நல்லவர்கள் மட்டும் போதாது . வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். திமுகவிற்கு மாற்றாக முன்னிருத்தப்படுவது, அதிமுக என்ற கம்பேனியின் அடாவடித் தலைவி ஜெயலலிதா..அவருக்கு ஆலோசகர் ராஜகுரு சோ.. சோ நேர்மையானவர் என்பது மட்டும் போதுமானதா? சோ வின் ஆலோசனைகள் எப்படி தமிழருக்கும் தமிழினத்திற்கும் ஆதரவாக இருக்கும் இருக்க முடியும்.. 70களில் இருந்து இன்றுவரை சோ தமிழின விரோதியாகத் தானே நான் பார்த்து வருகிறேன்.அவர் அறிவுரையின் படித்தானே வைகோ அந்த முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார்..”சோ” கரப்பான்பூச்சி சுலபமாக அடித்துவிடலாம் என்று மற்றுமொரு பின்னூட்ட்த்தில் எழுதி இருக்கிறீர்கள். சரியான உதாரணம் தான். அணுகுண்டுக்கும் தப்பிக்கும் ஆற்றல் பெற்றதல்லவா கரப்பான்பூச்சி ..அதை எப்படி ஒழிக்க முடியும்?

மூன்று முக்கியமான குற்றச்சாடு திமுக அரசு மீது..

இலவசம், ஊழல், குடும்ப ஆதிக்கம்..


புதிதாக ஓட்டுரிமை பெற்ற படித்த இளைஞர்கள மற்றும் இணையத்தில் பெரும் நேரம் உலவுபவர்களுக்கு இலவசம் ஏதோ வேப்பங்காயாய் கசக்கிறது..இலவசம் இணையத்தில் கதை அளப்பவர்களுக்கு அல்ல என்று முன் பதிவுலேயே சொல்லியுள்ளேன்.. புரியாதவர்களுக்கு மற்றுமொரு உதாரணத்துடன்..


என் கூடப்பிறந்த தம்பியும் அவன் மனைவியும் சிவகங்கை பக்கத்தில் ஒரு கிராமத்தில் 24 மணி நேர மருத்துவமனை நட்த்துகிறார்கள். 2006 வரை அங்கு நாள் தோறும் நடத்தப்பட்ட பிரசவங்கள் குறைந்த்து 10 முதல் 15.. இன்று ஒன்று கூட இல்லை.. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் பிரசவம் பார்க்கிறார்கள்.இங்கு கவனிக்க வேண்டியது என் தம்பியின் ஒரு நாள் வருமான இழப்பல்ல.. அந்தக் கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையம் இத்தனை பிரசவஙக்ளை பார்க்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது..


என் சொந்த ஊரில் பெயர் பெற்ற மெட்ரிகுலேஷ்ன் பள்ளி தன் தர வரிசையில் இருந்து இறங்கிவிட்டது..காரணம் முக்கியமான திறமையான ஆசிரியர்கள் எல்லோரும் எந்தவித கையூட்டும் கொடுக்காமல் அரசுப் பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.இதுவரை மெட்ரிக் பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்றவர்கள் முறைப்படியான ஊதியம் பெறுகிறார்கள்.
நுழைவுத் தேர்வு ரத்தானாதால் மட்டும் கிராமப்புற இளைஞர்கள் 54000 பேர் பொறியியல் கல்லூரியில் நுழைந்துள்ளார்கள்.


பள்ளிகல்வித் துறையில் மகத்தான சாதனை இந்த 5 வருட்த்தில் நடைபெற்றுள்ளது.. நிகழ்காலத்தில் மட்டுமே குடியிருக்கும் நண்பர்களால் இந்தச் சாதனையை அங்கீகரிக்க முடியாது .ஏனென்றால் இதன் பலன் இன்று தெரியாது என்பது தான்

இதுமாதிரி என்னால் ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்..


அடுத்து ஊழல்..


ஊழல் என்பது இந்தியாவின், தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட்து என்பது வேதனைதான்..ஆனால் உங்களால் ஜெ.அரசு ஊழலற்ற அரசாக இருக்கும் என்று உத்தரவாதம் மனசாட்சியுடன் கொடுக்க முடியுமா? அளவுகளில் வித்தியாசப்படலாம்.. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி அமையுமா ஜெ.அரசால்? டான்சி ஊழலில் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என்று சொல்லக்கூடியவர். கொள்ளையைடிக்க என்றே இல்லாத ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டவரிடம் எப்படி ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்? தொகுதிப் பங்கீடே வெளிப்படையாக நடைபெறவில்லை.. போயஸ் தோட்டத்தில் தனி நபராக முடிவெடுத்து, இத்தனை இடங்கள் உனக்கு என்று எழுதி தோட்டத்திற்கு வெளியில் போட்டு அதை எடுத்துக் கொண்டு பிரச்சாரத்திற்கு கிளம்பியவ்ர்கள் தான் நம் தோழர்கள். அதிகமாக தமிழ் தமிழ் என்று பேசியதால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனவர்தான் வைகோ.


தென்னிந்தியாவிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் கலைஞருடையது என்றும் ஒரு குற்றச்சாட்டு.. சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது , அது தென்னிந்தியாவில் முதல்தர தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்த்து எல்லாம் கலைஞர் ஆட்சிக் கட்டிலில் இல்லாத 1992- 96 வரை. அதன் பின் அதன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டால் அதற்கு என்ன செய்ய முடியும்? அதே சமயம் ஆரம்பித்த ஜே.ஜே தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு இருந்தால் அதுவும் தான் இந்நேரம் பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கும்.. பெரிய தொழில் முதலைகளாக டாடாவையும் பிர்லாவையும் பின்னால் உருவாகிய அம்பானியையும் பார்த்த கண்ணுக்கு திருவாரூர் குடும்பம் பெரிய அளவில் கண்ணை உறுத்துவதற்கு என்னசெய்ய முடியும்?


இதுவரை எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்களை மதுரை டெல்லிக்கு அனுப்பியுள்ளது.. ஆனால் அழகிரியால்தான் மதுரையைச் சுற்றி சில தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. பன்னாட்டு விமான நிலையமாக மதுரை மாற வேண்டுமென்றால் , தொடங்கியுள்ள பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிலையம், ஐ.டி பார்க் நன்கு செயல் பட வேண்டுமென்றால் நான் அழகிரியை ஆதரிக்கத் தான் செய்வேன்.மூடி இருந்த ஸ்பிக் மறுபடி இயங்க ஆரம்பித்துள்ளது அழகிரியால் தான்..


இணைய எழுத்தாளர்களின், ஊடகங்களின் திமுகவின் எதிர்மறைப் பிரச்சாரம் தங்கள் சிந்தனையை தடுமாற வைத்துள்ளது.இல்லை என்றால் சேது சமுத்திர திட்டம் நின்றதற்கு திமுகவை குறை கூறலாமா. ராமர் பாலம் என்று குறைகூறி அவர்கள் கும்பல் தானே நீதிமன்றம் படியேறி தடைவாங்கியவர்கள்.

மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளை வெட்டி எடுப்பவர் அதிமுக தலமைக்குத் தான் மிகவும் நெருக்கமானவர்

நியாயமான தமிழ் உணர்வைக்கூட ஏதோ தேசத்துரோகமாகப் பார்க்கும் சோ, ஜெ. கும்பலுக்கு ஆதரவாக தமிழ் உணர்வாளர்கள் வாக்கு கேட்டு வருவது ஆச்சர்யமாக இருக்கிறது தேர்தலுக்கு முன்னரே வைகோவை வெளியேற்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஜெ.வை எப்படி இவர்கள் ஆதரிக்கிறார்கள். போன ஜெ.ஆட்சியில் வைகோ.நெடுமாறன்,சுப.வீ போன்றவ்ர்களுக்கு நேர்ந்த்து தான் இவர்களுக்கும் என்பது கூடவா இவர்கள் அரசியல் அறிவுக்கு எட்டவில்லை.. பிரபாகரனை பிடித்து வந்து ஒப்படைக்க வேண்டும்,போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்னவர் ஜெ. ஆரம்பத்தில் திமுக காங்கிரஸை கழட்டிவிட்த் தயாரான சமயம் , திமுகவிற்குப் பதிலாக காங்கிரஸ் கோட்டையில் நுழையத் தயாரானவர் தான் ஜெ. மற்றவர்,மிகுந்த ராஜதந்திரமாக நினைத்துக் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டு சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் காங்கிரஸை பற்றி ஒரு கேள்வி கேட்காதவர் தான் கருப்பு எம்ஜிஆர் குடிகாரக் குப்பன் அண்ணன் விஜயகாந்த். இவர்களுக்கு தமிழ் ஆதரவாளர்கள் ஆதரவு.. நான் எப்படி ஆதரிக்க முடியும்?


இது ஜீவாவின் காலமல்ல.. அரசுப் பொறுப்பு வேண்டாமென்ற பெரியாரின் காலமுமல்ல.. கண்ணியமிக்க காமராஜ் காலமல்ல..அரசுப் பொறுப்புக்கு வருவதே சம்பாதிக்க என்ற நிலையில் வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் யாரால் நிறைவேற்றப் படுதோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.. ஊழலற்ற ஒருவரை அழைத்துவர வேண்டும் என்றால் நாம் எங்கு போவது?

சுருக்கமாக ஒன்று


ஊழல்+ அதிகார போதை தரும அடாவடித்தனம் + நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்காத சண்டைக்கோழி ஒரு பக்கம்

ஊழல் +அதிகாரம்+ வளர்ச்சித் திட்டங்கள் + மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இது ஒரு புறம்
இந்த இரண்டில் தாங்கள் எதைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்..

நின்று போன பெரம்பூர் மேம்பாலமே 5 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் திமுக ஆட்சி மறுபடி வந்து தான் அதனை முடித்தார்கள்.

அடுத்த ஐந்தாண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக தமிழகம் விளங்கும் என்பதற்காகவது ஆதரவளிக்க வேண்டாமா?


கிராமப்புற மாணவர்கள், தாய்மார்கள் பயனடைய வேண்டுமா?


இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக விற்கு வாக்களியுங்கள்.திமுகவிற்கு வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்
வெற்றிவேல்..


பின்குறிப்பு: காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டால் அதிகம் சந்தோசப்படுவேன்.. அதுவும் தமிழ்நாடு காங்கிரஸில் புதிதாக உருவாகியுள்ள ராகுல் கோஷ்டியான இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பிணைத்தொகை இழந்தால் இந்தத் தேர்தல் முடிவுகளில் உச்சபட்ச சந்தோசம அதுவாகவே இருக்கும்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தி.மு.கவிற்கு வாக்களியுங்கள்….

2005 க்குப் பிறகு இணையம் அதிக பயன்பாட்டுக்கு வந்தபிறகு வெளிவரும் கருத்துக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் அதிக வேறுபாடு இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை.. ஏனென்றால் இணையம், ஃபேஸ்புக் போன்ற பொதுத்தளங்களைப் பயன்படுத்துவோரில் எத்தனை விழுக்காடு வாக்களிக்கச் செல்கிறார்கள் என்ற கணக்கு இன்னும் வெளிவராத சூழலில் இவர்கள் கட்டியெழுப்பும் கற்பனைகள் நிஜத்தில் பொடிப்பொடியாவதற்கு கடந்த இரண்டு தேர்தல் முடிவுகளே சாட்சிகள்.

அகில இந்திய செய்தி நிறுவனங்களும் தினமலர், துக்ளக் போன்ற தமிழ் இதழ்களும் என்றுமே தி.மு.க வை ஆதரித்தது இல்லை..ஆனந்தவிகடன் அவசரமாக அவசரமாக அமைச்சர்களின் சொத்துக்கணக்கை வெளியிட்டிருப்பதில் உள்நோக்கம் இருக்கலாம் என்று கருதுகிறேன். ஜெ.வோடு வைகோவின் ஊடல் முடிவுக்கு வந்ததாக ஒரு பொய்யான செய்தியை முன்பக்கத்தில் பிரசுரித்துவிட்டு பின்பக்கத்தில் ஏப்ரல்-1 முட்டாள் தினச்செய்தி என்று வெளியிட்டு தினமலர் தன் ஆசையைக் காண்பித்து முடிந்தவரை தொண்டர்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. இதெல்லாம் எந்த நாகரீகத்தில் சேர்க்கலாம் எனத் தெரியவில்லை.

இன்று இணையம் வழி செய்திகள் படிப்பவருக்கு, வலைத்தளம், மற்றும் ஃபேஸ்புக் போன்ற பொதுத் தளம் செல்பவர்களுக்கு அதிமுக ஆட்சிக்கட்டிலுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றத்தை உண்டுபண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் இத்தகைய பொதுத்தளங்களில் உயிர்வாழும் நம் அறிவுஜீவி நண்பர்கள்..

இன்று இவர்கள் தி.மு.கவின் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டான இலவசம் கொடுத்து கெடுத்துவிட்டார்கள் ..எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்று கெடுத்துவிட்டார்கள் என்ற ஒயாத கூச்சல் போட்டவர்கள் நடுநிலை வேடம் போட்டவர்கள் ,இன்று அம்மையார் இலவசங்களை அள்ளித்தெளித்ததும் அது குறித்து அடக்கி வாசிப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அதே மாதிரி இன்னொரு முக்கிய குற்றச்சாட்டு தமிழகத்தை மின்வெட்டால் இருண்ட மாநிலமாக மாற்றிவிட்டதாக..மின்வெட்டு என்பது ஒரே நாளில் தீர்க்க கூடிய பிரச்னையல்ல என்று தெரியாதவர்கள் இவர்கள் இல்லை.. 2001-2006 முதல் ஆட்சியில் இருந்தும் தொலைநோக்கோடு அதற்கான திட்டங்கள் வகுக்காதவர்கள் மீது இவர்கள் கோபம் பாயாமல் தி.மு.கவின் மீது மட்டும் பாய்வது ஆச்சர்யமாக இருக்கிறது..

சரி.. தொடங்கிய பிரச்னைக்கு வருவோம்..
இந்தப் பக்கத்தில் இடப்பட்டுள்ள படம் தினமலரில் கடந்த 10 நாட்களுக்குள் வெளிவந்த புகைப்படம். ஒரு ரூபாய் அரிசிக்காக காலையில் ஆறு மணி முதல் உட்கார்ந்து இருக்கும் இது போன்ற பொதுமக்களுக்குத்தான் இலவசமே தவிர.. இணையத்தில் இருந்து கொண்டு கதை அளப்பவர்களுக்கு அல்ல..

இலவசம் இலவசம் என்று கூப்பாடு போடுகிறார்களே.. இலவசபடிப்பு,புத்தகம், மதிய உணவு,சைக்கிள் போன்றவைகள் தமிழகத்தில் கல்வியை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது இவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் மெட்ரிக்குலேஷன் கல்வி நிலையத்தில் படிப்பவர்கள் இவர்கள். இங்கு தொழில் நடத்திச் சம்பாதிக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மைய அரசு வழங்கும் வரிச்சலுகையில் 5 விழுக்காடு கூட இருக்காது இந்த ஏழை எளியோருக்கு வழங்கப்படும் இலவசங்கள்..

இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால்,அது தரும் வேலை வாய்ப்புகளில் இருந்து கொண்டு, நாகூசாமல் தி.மு.க ஆட்சியினை விமர்சனம் செய்பவர்கள் யாருக்காவது தெரியுமா உண்மை நிலவரம்.. 1991-96 வரை மகாமகக் குளத்தில் நீராடல், வளர்ப்பு மகனின் திருமணம், ஊரெங்கும் மன்னார்குடி வகையறா வாங்கிச் செழிக்க இருந்த தமிழக ஜெ.அரசு தகவல் தொழில்நுட்பத் துறையை கண்டுகொள்ளவில்லை.. அதன்பின்னர் 96-ல் வந்த கலைஞர் ஆட்சியில் தான் முதன் முத்லாக தகவல் தொழில்நுட்பக் கொள்கை வெளியிட்டு, டைடல் பார்க் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்து . தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கியமாநிலமாக மாற்றியது அனறைய தி.மு.க அரசு. அமரர் முரசொலி மாறனுக்கு நன்றி சொல்ல வேண்டும் தமிழக மக்கள்.அடுத்துவந்த ஜெ.அரசு அதை குளறுபடி பண்ணவில்லை என்பது தான் ஒரே ஆறுதல். அம்மையார் தான் அரசு ஊழியர்களோடு நீயா நானா? என வீண் சண்டையில் தன் காலத்தை கழித்தவர் ஆச்சே.. அன்று கொஞ்சம் விழித்து சில மின் திட்டங்களை கொண்டு வந்து இருந்தால் இந்நேரம் தமிழகம் மின் தடையால் இருண்ட மாநிலமாக இருந்திருக்க முடியாது.

தற்பொழுது நடந்து முடிந்துள்ள தி.மு.க அரசு பல புதிய மின்திட்டங்களை துவக்கியுள்ளது .அதன்பலன் 2012-ல் நாம் மின்சாரத்தில் தன்னிறைவான மாநிலமாக இருக்கும் . என்னென்ன திட்டங்கள் எதுவென்பதை தம்பி லக்கி யுவகிருஷ்ணா தன் தளத்தில் விரிவாக எழுதியுள்ளார். அதன் சுட்டி.. http://www.luckylookonline.com/2011/04/blog-post.html

நான் தி.மு.க ஆதரவாளன் தான் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவையோ கலைஞருக்கு மாற்றாக எந்தவொரு அரசியல் தலைவரையும் என்னால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க இயலவில்லைதான்.நான் மாற்றாக நினைத்த வைகோவின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

ஆனால் இது மட்டுமல்ல திமுகவிற்கு ஆதரவு வேண்டுவதற்கு..

இன்றும் தமிழக அரசியல் கட்சிகளில் திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு கொஞ்சமாவது இடம் தரக்கூடியது..பெரியாரின் பல்வேறு கனவுகளை அரசுச் சட்டமாக்கியது.. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்களில் உண்மையான அக்கறை உள்ள ஒரே கட்சி தி.மு.கதான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

தலமையின் கருத்தாகவே இருக்கட்டும்.. அதையும் பொதுக்குழு கூடி அனவைருடன் கலந்தாலோசித்து , அனவரையும் ஒத்துக் கொள்ளவைக்கும் ஜனநாயத்தன்மையுடன் நடக்கும் ஒரே கட்சி திமுக தான்.

நடு நிலையோடு ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. தலைநகர் சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் ஆரம்பித்து கன்யாகுமரி வரைக்கும், சென்னை-கோவை, சென்னை-பெங்களூரு என்று எந்தத் திசையை யோசித்து பார்த்தாலும் விரிந்த சாலை பாலங்கள் என கட்டமைப்பு வசதிகள் தந்த்து திமுக அரசு அல்லவா?

91-96, 2001-06 பத்தாண்டுகள் ஜெ.வின் ஆட்சியில் ஏதாவது கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டனவா?

பள்ளிக் கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற மிக மிக அத்தியாவசமான துறைகளில் கடந்த 5 ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மாபெரும் புரட்சி எனலாம். அதுவும் தங்கம் தென்னரசு அவர்களின் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் எதிர்கட்சியாலும் குற்றம் சொல்ல முடியாதவைகள். பொறியியல், மருத்துவம் போன்றவற்றிற்கு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வை ரத்து செய்ததின் மூலம் இக்கல்லூரிகளில் கிராம மாணவர்களின் சேர்க்கை அதிகமாகி உள்ளது என்பது புள்ளிவிவரம்.

3.5 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியான அரசு வேலைகள் மட்டுமின்றி கல்லூரி பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுள்ளன. மருத்துவத்துறையில் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றோர் ஆயிரக்கணக்கில்..

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் , 108 அவரச அழைப்பு,குடிசை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாறும் திட்டம் என்று மக்கள் நலப்பணிகள் ஏராளம் இந்த ஆட்சியில்.மக்கள் நலப்பணிகள் ஏராளம் கடந்த 5 வருடங்களில் நடந்துள்ளன..

இவற்றிற்கு மாறாக….

ஜெ. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் யாரெல்லாம் தமிழ் தமிழ் என்று சொல்கிறார்களோ அவர்கள் மேல் எல்லாம் பொடா தடா என்று ஊரிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அலையவிடுவது வழக்கம். தன் அகம்பாவத்தின் எல்லையாக அரசு ஊழியர்களோடு நீயா நானா என்று தேவையில்லாத போட்டி.சட்டம் ஒழுங்கு மிகவும் அற்புதமாக பராமரிக்கப்பட்ட இவரது ஆட்சியில் தான் பிடிக்காதவர் வீடெங்கும் கஞ்சா இருந்தது. இப்படி தேவையில்லாதவைகளில் அதிகம் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் கவனம் செலுத்தி தமிழக நலனில் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத ஒரு அரசு தான் ஜெ.ஆட்சி.

வைகோவிடம் கேளுங்கள்…அவர் சொல்லுவார் ஜெ மாறவில்லை ஜெ.வின் ஆணவமும் மாறவில்லை என..

இவைகளை நடு நிலையோடு எண்ணிப்பார்த்து, தி.மு.க., பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லீம் லீக். கொங்குநாடு முன்னேற்றக்கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க ஆட்சியினைக் மீண்டும் கொண்டுவர வேண்டுகிறேன். உண்மையிலேயே தமிழக நலனில் அக்கறை இருந்தால் செய்யுங்கள்.

பின்குறிப்பு: காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டால் அதிகம் சந்தோசப்படுவேன்.. அதுவும் தமிழ்நாடு காங்கிரஸில் புதிதாக உருவாகியுள்ள ராகுல் கோஷ்டியான இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பிணைத்தொகை இழந்தால் இந்தத் தேர்தல் முடிவுகளில் உச்சபட்ச சந்தோசம அதுவாகவே இருக்கும்.


அன்புடன்
அ.வெற்றிவேல்
arunachalam.vetrivel@gmail.com

வியாழன், 30 டிசம்பர், 2010

2010-யின் மிக முக்கியமான தமிழ்ப் பாடல்

நேற்று இரவு என் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஈசன் பட்த்தில் வந்த “ஜில்லா விட்டு ஜில்லா “ என்ற பாடல் கேட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்றார். எந்திரன் இரைச்சலுக்குப் பின் தமிழ்ப்படப் பாடல்களையே கேட்கத் தயங்கி இருந்த பொழுது, நண்பர் சொல்வற்காக கேட்கலாம் என்று நண்பர் மேல் வைத்த நம்பிக்கையினால் இந்தப் பாடலை யூ டியூப்பில் தரவிறக்கம் செய்து கேட்டுப் பார்த்தேன்..நீங்களும் கேட்டுப் பாருங்கள்..

http://www.youtube.com/watch?v=gXET9AVxKd4

இந்தப் பாடலை ஜேம்ஸ் வசந்தன் இசையில், மோகன்ராஜ் என்ற புதுக் கவிஞர் எழுதி தஞ்சைசெல்வி என்ற நாட்டுப்புறக் கலைஞர் பாடியுள்ளார். இவ்வளவு ஜீவனுள்ள பாடலா? எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்பார்களே. அது இதுதான் என்று நினைத்தேன்.. இவ்வளவு ஜீவனுள்ள பாடல் எந்திரன் காலத்திலா?

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளய்யா.
தூத்துக்குடி பொண்ணுய்யா..நான் தூத்துக்குடி பொண்ணுய்யா
என் கதையை கேளய்யா....
......
சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மனசு இருக்குது பாராய்யா..
.....
அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா..மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பிளை அவன்
துப்பில்லாத ஆம்பளை.....
...........................
என் கனவை எல்லாம் உடைச்சுட்டான்..

முழுப்பாடலையும் வரிகளுடன் கேளுங்கள் அத்துடன் பாடல் காட்சியையும் பாருங்கள்

ஒரு குத்துப்பாட்டு என்ற தாளகதியில் ஆரம்பிக்கும் இந்தப்பாடல்.. சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மனசு இருக்கு பாராய்யா என்ற வரிகள் வரும் போது நம் மனதை உள்ளே இழுக்கும் பாடல்..முடியும் போது ஒரு வித கனத்தை மனதில் ஏற்றி வைத்துவிடுகிறது

குத்துப் பாட்டில் ஒரு சோகம் இழையோடும் ஒரு கவிதை.. இந்தப்பாடல்.. தஞ்சைசெல்வியின் குரலில் ஒரு துக்கம், சோகம் பாடல் முழுதும் நம்மை என்னமோ செய்கிறது


ஒரு குத்துப்பாட்டு கேட்ட ஒரு தயாரிப்பாளருக்காகவும் இயக்குநருக்காகவும் வேறொரு பட்த்திற்காக தயார் செய்த பாடல் இது என்றும் , ஏதோ ஒரு காரணத்தால் இது வேண்டாம் என்று அவர்களால் ஒதுக்கப்பட்ட பாடல்..பாடலில் வரும் அந்தப் பெண் போல..

ஒரு பட்த்திற்கு எழுதிய பாடல் இன்னொரு பட்த்திற்கு உபயோகப்படுத்திக் கொள்வது தமிழ் திரை உலகத்திற்கு புதியது அல்ல.. 52 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தும் இன்னும் காதல் பாடலக்ளில் முதல் இடத்தை வகிக்கும் பாலும் பழமும் பட்த்தில் வந்த ”நான் பேச நினைப்பதெல்லாம் “ என்ற பாடலே ஊமைத் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு தாலாட்டும் விதமாக தநதை பாடும் பாட்டுக்காக வேறு படத்திற்கு எழுதியது தான் ..தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று..அதை மாற்றி காதல் பாடலாக பாலும் பழமும் பட்த்தில் வெளிவந்தது.


ஒரு இயக்குநர் பார்வையில் சரியாகப் படாதது இன்னொரு இயக்குநர் பார்வை பட்டு அழகான அற்புதமான காட்சி அமைப்போடு , இயல்பான நடனத்தோடு, மிக அருமையான பாடலாக வந்துள்ளது..
.
பாசமலர் படத்தில் உள்ள ”மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” பாடலில் கண்ணதாசனின் கவிதை வரிகளை எல்லோரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக இசையை நிறுத்தி பாடகர்களை பாட வைத்திருப்பார் எம்.எஸ்.வி. மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக..என்பதை இசையை நிறுத்தி பாட வைத்து வரிகளில் உள்ள கவிதையையும் சோகத்தையும் ஒரு சேரக் கொடுத்து இருப்பார் எம்.எஸ்.வி. அதே போன்று இப்பாடலில்,’சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மன்சு இருக்கு பாராய்யா,துப்பில்லாத ஆம்பளை, என் கனவை உடைச்சுட்டான், மிச்சமாக நான் நின்னேன் போன்ற வரிகளை திரும்பவும் பாட வைத்தும், ”ஒருசாண் வயித்துக்கு தான் எல்லாத்தையும் விற்கிறேன்,இப்ப இங்க நான் நிற்கிறேன் என் கதையை முடிக்கிறேன்” என்ற வரிகளை இசையை நிறுத்தி மறுபடி பாட வைத்தும் நம்மை கட்டாயமாக கேட்க வைத்து வயிற்றில் கத்தியைப் பாய்ச்சுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.. வாழ்த்துகள் இசை அமைப்பாளரே....

மோகன்ராஜ் என்ற புதுக்கவிஞர், தஞ்சை செல்வி என்ற திரை இசைக்குப் புதிய குரல், இவர்களை அறிமுகப்படுத்தியுள்ள இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இதனை காட்சிப்படுத்தியுள்ள ஒளிப்பதிவாளர், இயல்பான நடன அமைப்பைக் கொடுத்துள்ள நடன இயக்குநர், இந்தப் பாடலைக் கேட்டு அதில் லயித்து, தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கற்பனை பண்ணி(விஷுவலைஸ்) 2010-ல் தமிழ் திரை இசையின் மிக முக்கியமான பாடலாக மாற்றிக் காட்டிய இயக்குநர் சசிகுமார் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.. என் வசம் பரிசு கொடுக்கும் வாய்ப்பு இருக்குமானல், 2010 –ல் இதுவே முதல் பாடலாக இருக்கும்..

ஊர்க்காரர் சசிகுமாருக்கு வாழ்த்துகள்!!!!!!

குத்துப்பாடல் இல்லை.. வயிற்றில் கத்தி குத்திய பாடல் இது..
கேட்டுப் பாருங்கள்..கண்டிப்பாக கலங்குவீர்கள்..அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 24 டிசம்பர், 2010

சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியார்..


1969-71 க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். சிவகங்கை சண்முக ராசா கலையரங்கில் தந்தை பெரியாரின் உரை கேட்டது தான் எனக்கும் பெரியாருக்கும் உள்ள முதல் தொடர்பு..அய்யப்பன் வரலாறு பற்றி சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..அப்போது நான் காலையில் 4 மணிக்கு எழுந்து கோயில் கோயிலாக சுற்றி வந்த காலம் என்பதால் அவர் உரை என்னை அவ்வளவாக கவரவில்லை..அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்..ஆனால் அடுத்த இரண்டு வாரம் அவர் பேசியதையே கிண்டலும் கேலியுமாக நணபர்கள் மத்தியில் பேசி வந்த போது தான் அவர் என்னையும் அறியாமல் என் மனதில் விதை ஊன்றிப் போயுள்ளார் என்று பின்னர் அறிந்து கொண்டேன்..


என் வரலாற்று அறிவுக்கு எட்டிய வரை மதங்களை முதன்முதலில் கேள்விக்குள்ளாக்கியர் சித்தார்த்தன். இந்திய வரலாற்றில் மாற்றுச் சிந்தனையை தொடங்கி வைத்தவர் புத்தர்.அவர் தொடங்கி வள்ளலார் வரை ஒரு நீண்ட பராம்பரியத்தின் கடைசிக் கண்ணி நம்மை சிந்திக்கச் சொன்ன தந்தை பெரியார்..

உங்களுக்காக சிந்திக்கிறேன்..உங்களுக்காக உழைக்கிறேன் என்று சொல்லி 92 வயது வரை மூத்திரப் பையுடன் ஊர் ஊராக சுற்றி வந்து உண்மையிலேயே நமக்காக உழைத்தவர் தந்தை பெரியார்..

போன நூற்றாண்டில் அவர் அளவுக்கு சாதித்துக்காட்டியவ்ர் வேறு ஒருவரும் இருக்க முடியாது..

சாதி ,மதம், இனம்,மொழி, தேசீயம் என்ற எல்லா நிறுவன மையங்களையும் கேள்வி கேட்டவர்.

அவர் மறைந்து 37 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சாதித்ததில் எது என்னைப் பொறுத்தவரையில் எது முக்கியமானதாகப் படுகிறது என்று அவர் சாதித்துக் காட்டிய அனைத்து சாதனைகளையும் எடுத்து வைத்துப் பார்க்கிறேன்..

சுயமரியாதை என்ற சொற்றொடர் பெரியாருக்கு முந்தைய காலகட்ட்த்தில் இருந்து இருக்கலாம்.. ஆனால் அந்தச் சொற்றொடருக்கான உண்மையான அர்த்தத்தை தமிழர்களின் மனங்களில் ஊன்றி விட்டுப் போனது தான் மிக முக்கியமானதாகப் படுகிறது. தமிழர்களின் சிந்தனையில் மிகப் பெரும் தாக்கத்தை இந்த மந்திரச்சொல் உண்டு பண்ணியுள்ளது என்பது வரலாறு.

சுயமரியாதையுடன் எந்த விசயத்தையும் அணுக வேண்டும் என்று சொல்லி சுயமரியாதை என்பதை ஒவ்வொரு தமிழனின் கூறுகளில் ஒன்றாக்கி வைத்தவர் தந்தை பெரியார்..

இன்று சுயமரியாதை என்பது என்ன என்று தெரியாத ஒரு தமிழனும் இருக்க மாட்டான். ஆனால் சுயமரியாதையோடு வாழ்கிறானா என்பது வேறு பிரச்சனை.. அப்படி சுயமரியாதை இழந்து வாழும் ஒருவனுக்கும் , நாம் வாழ்வது சுய மரியாதியுடன் உள்ள வாழ்வா என்று அவன் மனதை அவனைப் பார்த்தே கேள்வி கேட்க வைத்தவர் தந்தை பெரியார்..

அப்படிப் வாழ்பவனைப் பற்றியும் தந்தை பெரியார் மிக அழகாக தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.“ஒண்ணும் தெரியாதவன் மடையன். தெரிந்திருந்தும் அதில் நமக்கு ஆதாயம் கிடைக்குமா என்று யோசிப்பவன் அயோக்கியன்”

இன்று தந்தை பெரியாரின் நினைவு தினம்..பெரியாரை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறோம் என்று நம்மை நாமே உரசிப் பார்த்துக் கொள்ளும் தினமாக இந்நாளை மாற்றிக் கொள்வோம்..

படம் உதவி: ஜீவா,கோவை

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

நெஞ்சம் நிறை நன்றியுடன்

தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக ஒரு வாய்ப்பு- ஒரு வாரகாலம் தொடர்ந்து இடுகைகள் என்று கேட்டதுமே ஒரு பதட்டம்.. இருந்தும் நல்ல வாய்ப்பு என்று நண்பர்கள் சொல்லவே ஒரு ஆர்வம்..

என் நம்பிக்கை(இறை நம்பிக்கை),ஆர்வம்( தனித்தமிழ்), தோல்வியால் ஏற்பட்ட கோபம்(முள்ளிவாய்க்கால்),வெறுப்பு(கிரிக்கெட்),ஆச்சர்யம்(அய்யா தொ.ப அறிமுகம்),அனுபவம்(தொழிற்கல்வி),பொறுப்புணர்வு(ஊடகங்களில் குடும்ப ஆதிக்கம்) போன்ற என் சம்பந்தப்பட்டவைகளையே பேசும் பொருளாக்கி ஏழு நாட்கள் உங்களுடன்..

என் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தோர் அதிகமாக இருந்தாலும் கிரிக்கெட், முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற இரண்டிற்கு எதிர்ப்புகளும் அதிகம். கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தோர் ஒரு வழிபாட்டு மனப்பான்மையுடன் தெரிவித்தமையால், அதை நான் கடந்து சென்றுவிட்டேன்.

ஆனால் முள்ளிவாய்க்கால் அவலம்- கட்டுரைக்கு வந்த எதிர்வினைகள் என்னைச் சிந்திக்க தூண்டியவை..அவைகளை எதிர்வினைகள் என்ற பெயரில் பதிவிடலாம் என்று இருக்கிறேன். அது நான் எழுதியதின் மறுபக்கம் என்பதையும் அதையும் தங்கள் முன் வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும், வாசித்தவர்களுக்கும். வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்.தனி மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொண்டவர்களுக்கும், மற்றும் இனிமேல் வாசிக்க இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்

இது எனக்கு புதிய நண்பர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்காகவும் நன்றிகள்.

அன்புடனும் நன்றியுடனும்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com