புதன், 23 ஜூன், 2010

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் ஜூன் 24

”என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடெலென்று நீ கேட்கிறாய்
நான் உன் பேரை தினம் பாடும் குயில்லல்வா
என் பாடல் நீ தந்த மொழியல்லவா..”

கல்லூரிக் காலங்களில் கவியரங்களில் கலந்து கொள்ளும் போது நான் குரு நாதராக வணங்கும் கவியரசை வணங்கி ஆரம்பிக்க அவருடைய வரிகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்..இன்றும் நண்பர்கள் வட்டத்தில் என்னை கவியரசின் பெயரை தினம் பாடும் குயிலாகத்தான் பார்ப்பார்கள்.

4வது படிக்கும் போது கேட்ட பாடல்...”போனால் போகட்டும் போடா” .என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பாட்டின் அர்த்தம் தெரிந்து கேட்ட பாடல்..எழுதியது கண்ணதாசன். அப்பாவிடம் அது பற்றி பேசியதற்கு அப்பா சொன்னது.”கண்ணதாசன் எவ்வளவோ எழுதி இருக்கிறார்.“ என்று சொல்லி
“பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் –அவனைப்
புரிந்து கொண்டால் அவன் பெயர் இறைவன்”

என இன்னுமொரு பாடலை அறிமுகப்படுத்த..கண்ணதாசனோடு எனக்கு மிகச்சிறிய வயதிலே பரிச்சியம் ஏற்பட்டுவிட்டது .அந்தக் காலத்தில் தமிழ் திரை உலகின் முடிசூடா மன்ன்ன் கவியரசர் தான்.. அவருடைய பாடல்கள் தான்.எங்கு திரும்பினாலும்..

பருவ வயதில் கண்ணதாசனுடைய பாடல்களுக்கு ஒரு தனி அர்த்தம் கிடைக்கும்.

“ நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”

“உலகமெங்கும் ஒரே மொழி..உள்ளம் பேசும் காதல் மொழி..”

உந்தன் கண்ணிலும் முகத்திலும் மோதி வரும் இளங்காற்றீன் விலையே கோடி பெரும்’

”இன்பம் என்பது இருவரின் உரிமை.யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை”

” இளமை கொலுவிருக்கும்,இனிமை சுவை இருக்கும் இயற்கை மனமிருக்கும் பருவத்திலே..பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே”

“ காலங்களில் அவள் வசந்தம்”

“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஒருயிரே”

“ யார் என்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாளும் நில்லாது”

கண்ணதாசனுடைய பாடல்கள் தமிழகத்தில் ஒலிக்காத நேரமில்லை.. ஒரு தமிழனின் வாழ்வில் , குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை அவருடயை பாடல்கள் தொடர்ந்து வரும்.எல்லா காலங்களுக்கும் எல்லா நேரங்களுக்கும் அவருடைய பாடல்கள் மிகப் பொருத்தமாக வரும்.. தமிழனுடைய வாழ்வில் வாழ்வியல் முறையில் ஒன்றிணைந்து இருந்த ஒரு கவியுள்ளத்திற்கு மட்டுமே இந்தச் சாதனை சாத்தியமாருக்க முடியும்..

கண்ணதாசனைப் பற்றி அறிந்தவர்களில் பல பேருக்கு கூட அவருடைய திரை இசைப் பாடல்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே உண்டு.. அவருடைய தனிக்கவிதைகள் 7 தொகுதிகளாக வந்துள்ளன..

அதில் ஒன்று..

பிறப்பின் வருவது யாதெனெக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்.......
இறப்பின் வருவது யாதெனக் கேட்டென் இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனெக் கேட்டென் மண்ந்து பாரென இறைவன் பணித்தான்....
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்...

இப்படி ஒன்று ஒன்றாகச் சொல்லிவரும் கவிஞர் கடைசி வரிகளில் தான் கவியரசர் என்று சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்..

அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டென்
ஆண்டவன் சற்று அருகில் நெருங்கி அனுபவம் என்பதே நான் தான் என்றான்”


மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தனது வலைத்தளத்தில் கண்ணதாசனைப் பற்றி தொடர் கட்டுரை எழுதி வருகிறார்கள். இதைப் படிக்கும் இன்றைய இளைஞர்கள் கண்ணதாசனின் பன்முகத்தன்மை பற்றி அறிந்து கொள்ள அவசியம் அவர் தளத்திற்கு சென்று படிக்கவும் http://marabinmaindanmuthiah.bolgspot.com

என்னுடைய பள்ளி நோட்டுப்புத்தகங்களில் பின்வரும் வரிகளை எழுதி வைத்து இருப்பேன்.

”உள்ளதைச் சொல்வேன்..சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது..”

இது கல்லூரிக்காலங்களிலும் தொடர்ந்தது..இப்ப அப்படி எங்கும் எழுதி வைக்கவில்லை.. ஆனால் வாழ்க்கையையே அப்படித்தான் அமைத்துக் கொண்டு வாழந்து வருகிறேன் என்று நினைக்கிறேன்..கண்ணதாசன் மாதிரியே..

இன்று கண்ணதாசனின் பிறந்த நாள்.. அவர் நினைவாக இந்த இடுகை.

அவர் பற்றிச் சொல்வதற்கு ரொம்ப உண்டு.பின்னாளில் எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

செவ்வாய், 22 ஜூன், 2010

செம்மொழியான தமிழ்மொழியாம்.....

செம்மொழியான தமிழ் மொழியாம்.. என்ற செம்மொழி தமிழ் மாநாட்டிற்கான மைய நோக்க விளக்கப் பாடல் அனைவரும் கேட்டும் பார்த்தும் இருக்கலாம். தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்..

பிறப்பொக்கும் என்ற அய்யன் வள்ளுவனின் முதல் வரியுடன் தொடங்கும் இப்பாடலை கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க, கெளதம் வாசுதேவ் மேனன் அதற்கு காட்சி வடிவம் கொடுத்து வெளிவந்துள்ளது..

ஒரு மாநிலத்தின் முதல்வர் தனக்குள்ள பணிகளுக்கிடையில் எழுதுவது என்பதே பெரிய செயல். அதிலும் அகவை 86..இந்த வயதிலும் தொடர்ந்து படிப்பதும் எழுதுவதன்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சாதனைக்குரிய செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது..

இந்தப்பாடல் கலைஞரால் எழுதப்பட்டுள்ளது. பாடல் வெளியீட்டின் போது கலைஞர் குறிப்பிட்ட்து போல், தமிழின் பெருமை, சங்ககாலம்,இடைக்காலம்., என எல்லாவற்றையும் தொட்டு இணைத்து எழுதுவதென்பது கொஞ்சம் சிரம்மான பணிதான் .,அப்பணியை அகவை 86-லும் அழகாக செய்துள்ளார். பிறப்பொக்கும் என்ற வள்ளுவனின் வார்த்தைகளுடன் தொடங்கும் இப்பாடலில்,பின்னர் கணியனின் பெருமைமிகு “யாதும் ஊரே., யாவரும் கேளிர்..தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரிகளுடன், சிலம்பு, தொல்காப்பியம், வளையாபதி, மேகலை போன்றவற்றிற்கு மரியாதை செய்து ஆதி அந்தமில்லா தமிழ் மொழியை அழகு படுத்தி உள்ளார்.

கலைஞரின் மொழி ஆளுமையையும் அறிவுக்கூர்மையையும் அடி தொழ வணங்குகிறேன்..


ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய அன்புக்குரிய ஏ.ஆர்.ரகுமான் இசை வடிவம் கொடுத்துள்ளார். தமிழ் மொழி உலகளாவிய மொழி என்பதால், ஒரே விதமான இசைவடிவம் கொடுக்காமால், தமிழ் நாட்டுபுறம், தமிழ் இசை, கர்நாடக இசை,மேற்கத்திய இசை என பல தளங்களிலும் விரிந்து இப்பாடலுக்கு ஒரு புதிய வடிவம் அமைத்துக் கொடுத்துள்ள ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.. மூன்று தலைமுறையையும் பாட வைக்க முடிவெடுத்தோம் என்று மேடையில் சொன்னார் ரகுமான்..எங்களின் முதல் மரியாதைக்குரிய அய்யா டி.எம்.எஸ் அவர்களின் குரலோடு தொடங்கும் இப்பாடல் அடுத்த வரிகளிலேயே மூன்றாம் தலைமுறைக்கு நகர்ந்து விடுகிறது, இதில் இரண்டாம் தலைமுறைப் பாடகர்களான எஸ்.பி.பி, ஏசுதாஸ், எஸ்.ஜானகி சித்ரா, ஸ்வர்ணலதா, மனோ, ம்லேஷியா என எவரையுமே காணவில்லை.. ஒரு ஐந்து நிமிடப்பாடலில் எல்லோரையும் பாடவைக்க முடியாது என்பது நன்கு புரிகிறது..ஆனால் இரண்டாம் தலைமுறைப் பாடகர்கள் யாருமே இல்லை என்ற சின்ன ஆதங்கம்..வேறு ஒன்றுமில்லை.. செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற வரி அடிக்கடி வந்தாலும்.. கடைசியில் “நாக்க முக்க’ சின்னப்பொண்ணு குரலில் வரும் “ தமிம் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்’ என்ற வரிகள் தான் என் காதுகளில் நிரம்பி வழிகிறது...நாட்டுப்புற இசைக்கு பழகிய காதுகள்...

வாழ்த்துக்கள் ரகுமான்..புறநானுற்று வரிகளுக்கு ஒரு நவீனம் கொடுத்ததற்காக.. தமிழ் ஆர்வம் உள்ள இளைஞர்கள் செல்பேசியில் வைத்துக் கொள்ளலாம்..

ஒளிவடிவம் கொடுத்தவர் கெளதம் வாசுதேவ் மேனன். திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலில் ஏராளமான தமிழர்கள் உண்டு. இயக்குநர், எடிட்டர், விளம்பர வடிவமைப்பாளர் என் எல்லாத்துறைகளிலும் என்பது கலைஞருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்..அப்படி இருக்கும் போது செம்மொழி தமிழுக்கான பாடலை ஒரு மலையாளியிடம் கொடுத்தது தான் கொஞ்சம் நெருடலைத் தருகிறது..தமிழின் சிறப்பு கெடாமல் ஒரு மலையாளியால் எடுக்க முடியுமா ? என்ற தேர்வில் கெளதம் ஒரளவு வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழ் எழுத்துக்களை எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரிப்பதைத் தான் காணச் சகிக்க முடியவில்லை.. அந்தக் காட்சி அமைப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..மற்றபடி கெளதமிடம் ஒரு செய்முறை நேர்த்தி இருக்கிறது என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும்.. அது நன்கு இப்பாடலில் தெரிகிறது..


கலைஞர். ஏ.ஆர்.ரகுமான், கெளதம் மூவரும் இணைந்து தமிழன்னைக்கு அழகான தமிழ்ப் பாமாலை நெய்து கொடுத்துள்ளார்கள் ., செம்மொழி மாநாடு என்ற காரணத்தை முன்னிறுத்தி..நன்றியும் வாழ்த்துக்களும்..
நாளை கோவையில் தொடங்கும் செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

பின் குறிப்பு: classical language என்பதற்கு செவ்வியல் மொழி என்பது தானே சரியான பதம்..செம்மொழி என்பது சரிதானா? தமிழ் படிக்காதவன் தவறு என்றால் மன்னிக்கவும்..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

ஞாயிறு, 13 ஜூன், 2010

உலக விளையாட்டுத் திருவிழா....கால்பந்தைக் கவனியுங்கள்

அமர்க்களமாக ஆரம்பமாகி உள்ளது உலக கோப்பைக்கான கால்பந்து போட்டிகள்..

இங்கிலாந்தின் காலணி நாடுகள் என்ற முறையில் அடிமைகளாக இருந்த இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் அனைத்து விளையாட்டு ரசிகர்களாலும் தலைசிறந்த விளையாட்டாக கால்பந்து மட்டுமே இன்றும் பார்க்க, ரசிக்கப்படுகிறது..

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா என்றால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை மட்டுமே சொல்லலாம்..

கால்பந்து வரலாற்றில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடப்பது இதுவே முதல் முறை..32 நாடுகள் தகுதி பெற்று இத் திருவிழாவிற்கு தேர்வாகி உள்ளார்கள்.

யார் இறுதி சுற்றுக்குச் செல்வார்கள் என்று உலகெங்கும் ரசிகர்கள் பந்த்யம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேஸில், நெதர்லாந்து போன்ற நாடுகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளதாக கால்பந்து வல்லுநர்கள் கூறுகிறார்கள்..போகப் போகத் தெரியும்..

மேலே சொன்ன அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செயதிகள் தான்..
நான் சொல்லப்போவது இதுவல்ல...


விளையாட்டு வகைகளில் சேர்க்க கொஞ்சமும் தகுதி இல்லாத, தமிழ் திரைப்பட வரிசைகளில், ஒரு action thriller என்ற வகைகளில் மட்டுமே சேர்த்துக் கொள்ள தகுதி பெற்ற கிரிக்கெட் என்ற பொழுது போக்கு ஆட்டத்தை ஒரு மாத காலம் தள்ளி வைத்து, தமிழ் ரசிகர்கள் கால்பந்தைக் கவனிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்..


விநாடிக்கு விநாடி இடம் மாறும் அந்த கால்பந்தை கவனியுங்கள்.. வீரர்களின் கால்கள் செய்யும் அந்த மந்திர வித்தையை அனுபவித்து பாருங்கள்.. நரம்புகள் தெறிக்க உடலெஙகும் கொட்டும் வியர்வைக்கும், ஒவ்வொரு விநாடிக்கும் மதிப்பளிக்கும் ஒரு விளையாட்டு கால்பந்து என்று உங்களுக்கே தெரிய வரும்.... குழு மனப்பான்மையுடன் விளையாடும் அந்த வீரர்களின் அந்த ஒத்திசைவை உற்று நோக்குங்கள்..பந்து கோல் கம்பைத் தொடப்போகும் ஒவ்வொரு நிமிடமும் இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் தர முடியும்..

கால்பந்து விளையாட்டை பாருங்கள்..விளையாட்டு என்பதற்கு உண்மையான அர்த்தம் உங்களுக்கே தெரியவரும்..

அனுபவியுங்கள்..அர்த்தமுடன் உங்கள் மணித்துளிகளை செலவிடுங்கள் என்ற அன்பான வேண்டுகோளுடன்..
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

வெள்ளி, 4 ஜூன், 2010

தலைமகன் கலைஞருக்கு ஒரு தொண்டனின் வாழ்த்து

ஆச்சர்யமாக இருக்கிறது..

பள்ளிப்படிப்பை பாதியில் முடித்த ஒருவருக்கு, எப்படி அனைத்து ஆற்றல்களும் சேர்ந்தன என..

எம் தாய் மொழியான தமிழுக்கு இப்படி ஒரு வீரியம் உள்ளது என்பதை அறிந்து கொண்டோம்.. 27 வயதில் நீங்கள் எழுதிய பராசக்தி திரைப்பட வசனங்களை கேட்ட பொழுது...

1971-ல் பொதுத் தேர்தலின் போது தங்களை சிவகஙகை சண்முகராசா கலையரங்கில் பார்த்த்தில் இருந்து தொடர்கிறது இந்த ஆச்சர்யம்..

1972-ல் எம்.ஜி.ஆரை வெளியேற்றிய போது., தி.மு.க..அழிந்துவிட்ட்து என்று நானும் தான் அந்த அறியாத வயதில் நினைத்தேன்..ஆனால் எதற்கும் கலங்கா ஆலமரமாக நீங்கள் மட்டுமே..

1975-ல் தி.மு.க அரசு முதன்முதலாக கலைக்கப்பட்ட பொழுதும், அதைத் தொடர்ந்து, இரண்டாவது விடுதலைக்கான போராட்ட்த்தின் தளகர்த்தராக நீஙகள் ஆற்றிய பணிகளை கண்ட பொழுதும்..

அவசரகால நெருக்கடிகளின் போது, பத்திரிக்கைகள் கடும் தணிக்கைக்கு உள்ளான பொழுது..தன்னந்தனியாக அண்ணா சாலையில், முரசொலி விற்ற செய்தி கேள்விப்பட்ட பொழுது..

அதே காலகட்டத்தில், அனைத்து தோழர்களும் சிறைச்சாலையில் இருந்த பொழுது, தமிழகமெங்கும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, திராவிட இயக்கச் சுடரை அணையாமல் காத்த்தை நினைத்து..

பதவிகளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு ஒவ்வொருவராக வெளியேறியபோதும்.. கலங்காமல் 13 வருடங்கள் கழகத்தை கட்டி காத்த அந்த தலைமைப் பண்பை நினைத்து

பதவியில் இருக்கும் போதெல்லாம்..பிறந்த நாள் தோறும்..

கண்ணொளி வழங்கும் திட்டம்..
கை ரிக்‌ஷா ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கியது
பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம்..
அன்று தொடங்கி,
இன்று
தான் முதன்முதலாக 1955-ல் சென்னையில் வாங்கி, இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் தனது இல்லத்தை, மருத்துவமனையாக மாற்றி எழுதியது வரை..

இன்று தமிழகம் மிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நீஙகள் அல்லவா..

5-ம் முறையாக நீங்கள் முதல்வராக பதவியேற்று, இதுவரை நீங்கள் செய்த சாதனைகளை , நீஙகளே முறியடித்து,
1ரூ-க்கு ஒரு கிலோ அரிசி..
108- அவசர அழைப்பு திட்டம்
கலைஞர் காப்பீடு திட்டம்..
100 கோடி மதிப்பில் அறிவுக்கிடங்காக மாறப்போகும் ஆசியாவிலே பெரிய நூலகம்..

இதுமட்டுமல்ல..

வரப்போகும் ஆண்டுகளில், குடிசையே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறப் போவதை நினைத்து..ஆச்சர்யம் தொடர்கிறது..


இன்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மேலாண்மை வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கும் அனைத்து தத்துவங்களையும் .. பள்ளிக்குப் போகாமலே எப்படி கற்றீர்கள் என்ற ஆச்சர்யம்..

இந்தியா முழுதும் சுற்றி வந்தாலும், முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, கட்சித்தொண்டர்களுடன் தொடர்ந்து உறவாடிக்கொண்டே., ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நட்த்திக் கொண்டே..தினசரி படிப்பதும்.. எழுதுவமாக இருக்கும் ஒரு முதல்வரை காணக்கிடைப்பது ஆச்சர்யம்..

மாற்றுத்திறனாளிகளாக இருக்கட்டும், திருநங்கைகளாகட்டும் ., உடனடியாக சந்திக்க்க்கூடிய அளவில், மிக எளிமையான முதல்வராக இருப்பதை அறிந்து ஆச்சர்யம்..

தமிழக வரலாற்றில் அனைத்து திறனும் அமையப்பெற்ற உங்களைப் போன்ற ஆளுமை..
மொத்தத்தில நீங்கள் தமிழகத்திற்கு ஒரு பெருமிதம்..

வாழ்த்துக்கள்..

தாங்கள் அகவை 100 க்கும் மேல் காண விருப்பம் கொண்ட ஒரு

அன்பு உடன்பிறப்பு..
அ.வெற்றிவேல்.

வலைத்தலம் : http://avetrivel.blogspot.com
மின்னஞ்சல் : vetrisasi@yahoo.com