வியாழன், 24 டிசம்பர், 2009

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு‍ -கலைஞரிடம் என் எதிர்பார்ப்பு

2010 –ம் ஆண்டு ஜூன் திங்கள் 23 முதல் 27 வரை கோவை மாநகரில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்னைப் போன்ற தமிழ் ஆர்வலர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழர்களுக்கென்று புதிதாக ஆறாம் திணை என்று முள்ளும் முள்வேலியும் உருவாகியுள்ள இந்தச் சூழலில் இது தேவையா என்று ஒரு பகுதியினர் கேள்விக்க்ணை தொடுத்துள்ளார்கள்.என்னைப் பொருத்தவரையில் என் மொழிக்கென்று எது நடந்தாலும் அதை வரவேற்பது எனது கடமை.இதில் முக்கியம் என்னவென்றால் இம்மாநாடு என் மொழிக்காக மட்டுமே அதன் வளர்ச்சிக்காக மட்டுமே நடத்தப்படும் என்றால் உண்மையிலே எனக்கு மகிழ்ச்சியே.
இதுவரை மொத்த‌ம் 21 குழுக்க‌ள் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது முக்கிய பொறுப்பேற்று நடத்திய இன்றயை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ர் இம்மாநாட்டினையும் வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்தி முடிப்பார் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு உள்ள‌து.மேலும் இன்று கலைஞர் வெளியிட்டுள்ள கடிதம் வ்டிவிலான அறிக்கையில் தமிழர்கள் அனைவரும் இணைந்து பொறுப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்று அன்பழைப்பு வெளியிட்டுள்ளார். இக்கட்டுரை கலைஞர் அவர்கள் கவனத்திற்கு செல்லாவிடினும், குழு உறுப்பினர்கள் யாராவது பார்க்கக்கூடும் என்ற நப்பாசையுடன் இதனை வெளியிடுகிறேன். தமிழ் மொழி மீதான காதலும்,தமிழர் என்ற இனமானமும் என்னிடம் இருப்பதால், அதுவெ தகுதி என்றேண்ணி நானும் இணைந்து, மாநாடு வெற்றி இலக்கை அடைய , எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.
" வெற்றி" என்ப‌து எது என்ப‌துதான் பிர‌ச்ச‌னை? இது இரு இன்னொரு திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ மாநாடு போல் ஊர்வ‌ல‌ம், கொண்டாட்ட‌ம், திரை உல‌கின‌ரின் க‌லை நிக‌ழ்ச்சி என்ற‌ பெய‌ரில் ஒரு ஆபாச‌க்கூத்து அர‌ங்கேறாம‌ல் இருக்க‌ வேண்டும். த‌மிழுகென்று ஒரு தொன்மையான‌ வ‌ர‌லாறு இருப்ப‌தை ந‌ன்கு புரிந்துகொண்டு, இன்னும் ப‌ல்லாண்டுக‌ள் சீரிள‌மைத் திற‌த்தோடு இருக்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்பதை திட்ட‌மிடுத‌லே இம்மாநாட்டின் முக்கிய‌ ப‌ணியாக‌ இருக்கும் என்றால் அதுவே இம்மாநாட்டின் வெற்றி.
2000 த்தில் கால‌ச்சுவ‌டு த‌மிழ் இனி 2000 என்ற‌ பெய‌ரில் சென்னையில் ஒரு மாநாட்டை ந‌ட‌த்திக்காட்டினார்க‌ள்.சென்னையில் உள்ள‌ ஒரு விடுதியில் தான் இது நடந்தது.அதில் உல‌க‌மெங்கும் இருந்து த‌மிழ் அறிஞ‌ர்க‌ள் ப‌ங்கெடுத்துக் க‌ட்டுரை வாசித்தார்க‌ள்.ஆனால் தமிழகக் க‌ல்வித்துறையில் ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர்க‌ள் யாரும் ம‌ற‌ந்து கூட‌ அம்மாநாட்டுப் ப‌க்க‌ம் த‌லைவைத்துப் ப‌டுக்க‌வில்லை என‌ நினைக்கிறேன்.த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ள் ம‌ட்டுமே ப‌ங்கெடுத்து ந‌டைபெற்ற‌ மாநாடு. ஆனால் இதுவ‌ரை இம்மாநாட்டுக்காக அமைக்க‌ப்ப‌ட்ட‌ குழுக்க‌ளில் , ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ துணைவேந்த‌ர்க‌ளும் ,அர‌சில் உள்ள‌ அதிகாரிக‌ளும் தான் அதிக‌மாக‌த் தெரிகிறார்க‌ள்.தமிழ் ஆர்வ‌ல‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற்றிருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.த‌மிழ் இனி 2000 மாநாட்டில் இன்றைய‌ தி.மு.க‌ மாநில‌ங‌க்ள‌வை உறுப்பின‌ர் க‌விஞ‌ர் க‌னிமொழி ம‌ற்றும் க‌விஞ‌ர் ச‌ல்மா க‌ல‌ந்து கொண்டார்க‌ள். தமிழ் இனி 2000 ,முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்து நடந்தது. இப்பொது தமிழக அரசால் நடத்தப்படும் இம்மாநாடு தமிழ் மொழிக்காக நடைபெறுகிறது.இயல் இசை நாடகம் மற்றும் அறிவியல் தமிழாகிய நான்காம் தமிழுக்கும் இம்மாநாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்
தற்காலத் தமிழ் இலக்கியம் மிகச் செழுமையோடு இருக்கிறது.உலகத் தரத்திலான கவிதைகள், சிறுகதைகள்,கட்டுரைகள் என்பதுடன், தலித் இலக்கியம் என்றொரு புதிய கிளை உருவாகியுள்ளது.இது மட்டுமின்றி உலகத்தரத்திற்கு இணையாக கவிதை படைக்கும் பெண் கவிஞர்கள் இன்று தமிழ் இலக்கியச்சூழழில் உருவாகியுள்ளனர்.இத்துடன் தமிழ் மொழிக்கு தங்களது பங்களிப்பாக, போர்ச்சூழல் மற்றும் வெளிநாட்டு கலாச்சாரச்சுழலில் தமிழர்களின் வாழ்க்கை பற்றி ஏராளமான எழுத்தோவியங்கள் புலம் பெயர் தமிழர்களால் உருவாககப்ப்ட்டுள்ளது. கணினியில் தமிழ் பயன்பாட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.தமிழ் இணைய தள இதழ்கள், வலைத்தளங்கள் என கணினியில் தமிழ் ஆட்சி செய்கிறது.‏‏ இதில் குறிப்பிட்ட அனைத்து வகையான இலக்கிய வடிவங்களையும் கருத்தில் கொண்டு, இது குறித்து ஆய்வு செய்யும் வகையில் ஆய்வரங்கம் அமைக்க வேண்டும். வெறும் கல்வியாளர்களை மட்டும் வைத்து ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கவிடாமல், உண்மையிலே படைப்பாளர்கள் கையில் இதற்கான ஆய்வரங்கம் இருக்க வேண்டும்.இதனை ஒருங்கிணைக்கும் பொறுப்பை சிந்தனையாளர் திரு.ரவிக்குமார் எம்.எல்.ஏ அவர்களிடம் தரலாம். இது ஒரு யோசனையே.
இரண்டாம் தமிழாகிய இசை பற்றி இங்கு குறிப்பிடவேண்டும்.தமிழ் இசைக்கு சென்னை சபாக்களில் என்றுமே இடம் இல்லை. மக்கள் மத்தியில் வெகு இயல்பாக புழங்கிக் கொண்டு இருந்த தமிழிசையை துக்கடா என்று அழைத்து பின்னுக்கு தள்ளியது சென்னை சபாக்களின் சாதனை. மதுரை மாமணி ம்துரை சோமு போன்ற உன்னதமான கலைஞர்கள் இருக்கும் போதே, கர்நாடக இசைக்கச்சேரியை,நிறுவனமாக்கி,நான்கு சுவற்றுக்குள் அடைத்த துர்ச்சாதனைக்குச் சொந்தக்காரர்கள் பாலமுரளிகிருஷ்ணா போன்ற பாடகர்களும், மியுசிக் அகாடமி போன்ற அமைப்புகளும். சென்னை சபாக்களில் தமிழிசை காணாமல் போய்விட்டது. தமிழிசை காணாமல் போனதற்கு இதுதான் காரணம் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்காமல், பழியை சபாக்களிடம் தள்ளி விடாமல்,அதற்கான காரணம் ஆராய்ந்து, மறுபடி தமிழிசை தமிழகமெங்கும் ஒலிக்கவகை செய்தல் மட்டுமின்றி, அதன் வரலாறை ஆராய்ந்து அதன் தொன்மையை நிறுவ வகை செயதல் வேண்டும்.
மூன்றாம் தமிழாகிய நாடகம். தமிழ் மக்களுக்கு இரண்டு வகையான நாடகங்கள் தான் தெரியும்.ஒன்று மனோகர் நடத்திய மாயஜாலங்கள் நிறைந்த இலங்கேஸ்வரன் போன்றவை அல்லது கிரெஸி மோகன் நடத்தும் துணுக்குத் தோரணங்கள். வெளிநாடு செல்லும் போதெல்லாம் நான் நாடகம் பார்ப்பது வழக்கம். நாம் நாடகங்கள் என்று சொல்லித்திரியும் நாடகங்களுக்கும் அவற்றிக்கும் உள்ள வேறுபாடு பார்த்து அனுபவிக்க வேண்டிய அனுபவம். நவீன நாடகங்கள் நடத்தும் குழுக்கள் சென்னனையிலும் உள்ளன. இம்மாநாட்டின் மூலம் அந்நாடகக்குழுக்களுக்கு விளம்பர வெளிச்சம் கிட்டுமானால், அதுவெ நலம். மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கக்கூடிய அரங்கங்கள் தமிழக அரசால் மாவட்டத்தலைநகர் தோறும் அமைக்கமுடியுமென்றால் அது சாலச் சிறந்தது. அம்முயற்சியை இம்மாநாடு முன்னெடுக்க வேண்டும்.இந்த அரங்களில் தமிழ் இசைக்கச்சேரியும் நடத்தலாம்.
முக்கியமான பணி, இதுவரை நடந்த தமிழ் மாநாடுகளில் ஏற்கப்பட்ட முடிவுகள் எந்த அளவு செயல்படுத்தப்பட்டுள்ளது , அப்படி செயல் படுத்தமுடியாததன் காரணம் என்னவென்று ஆராய்ந்து. அதன் பின்னடைவுகளுக்கான காரணங்களை களைய இம்மாநாடு முன்வரவேண்டும். இதுநாள் வரை திராவிட இயக்கம் தமிழுக்குத் தந்த நல்லவைகள் அல்லவைகள் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்திடல்வேண்டும்.அரசியல் ரீதியாக செய்தவைகளை இங்கு இழுத்து வந்து குழப்பிக்கொள்ள வேண்டாம். தமிழ் மொழிக்கான இலக்கியத்தில் திராவிட இயக்கத்தின் பங்கு, பேச்சுத் தமிழில் திராவிடத்தின் பங்கு என விரிவாக “திராவிட இயக்கமும் தமிழும்” என்ற பெயரில் ஒரு ஆய்வரங்கு அமைக்கலாம்.
சங்கத்தமிழும், திருக்குறளும் சில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.அது கூட அரசின் உதவி இன்றி தனிநபர் விருப்பத்தின் காரணமாகவே என் நினைக்கிறேன். தமிழ் மொழியின் செவ்விலக்கியங்கள் தவிர, நவீன இலக்கியத்திலும் உலகத்தரத்திலான படைப்புகள் தோன்றியுள்ளன. தமிழக அரசின் உதவியுடன் அவைகளும் உலகமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டால் தமிழின் செழுமை, தமிழ்ப்படைபாளிகளின் படைப்புத்திறன் உலகிற்கு தெரியவரும்.அதற்கென ஒரு அரசியல் சார்பற்ற, நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சியம் கொண்ட படைப்பாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கலாம.
தமிழ் மொழியை பயிற்று மொழியாக, சட்ட மொழியாக, ஆட்சிமொழியாக, தொடர்பு மொழியாக பயன்படுத்த இம்மாநாட்டின் வாயிலாகாவது ஒரு வழி பிறக்காதா? என ஏக்கத்துடன் என்னைப்போன்ற சாதாரணத்தமிழர்கள் இருக்கின்றனர். இதற்கு ஒரு விடிவுகாலம் இம்மாநாட்டின் மூலம் பிறந்தால் தமிழன்னைக்கு அதுவே மிகப்பெரிய தொண்டாகும்.அதன் பிறகு அதன் பயன்பாடு அதிகரிக்கும்.அதன் மூலம் தமிழ் ,உலகமொழிகளில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

நான் தமிழ் மாணவன் அல்ல.தமிழ் ஆர்வலர் மட்டுமே.தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் தமிழ்ச் சான்றோர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் இதனைவிட நல்ல யோசனைகள் தரலாம். தமிழக முதல்வர் அவர்கள், இதை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப மாநாட்டினை சிறப்பாக நடத்தி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
பின்குறிப்பு: தயவுசெய்து நமீதா, குஷ்பு போன்றவர்களை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் மேடைஏற்ற வேண்டாம். 1981 மதுரை மாநாட்டில்தான், திரை உலகில் இருந்து விலகி இருந்த முன்னாள் நடிகை ஜெயலலிதா ,நடனம் என்ற பெயரில் மேடை ஏறினார் என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

சனி, 12 டிசம்பர், 2009

கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.. ………………பட்டினத்துப் பிள்ளை


மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு
தங்களின் வார்த்தையில் சொல்லப்போனால், 38 நீண்ட நெடிய ஆண்டுகள், தங்களைத் தமிழினத் தலைவராக ஏற்றுக்கொண்டு ,அரசியலில் தங்கள் பின்னால் அணி வகுத்து வந்தவன் என்ற முறையில் இக்கடிதம்.
1971 தேர்தலின் போது ,சிவகங்கை சண்முகராசா கலை அரங்கில் அரைக்கால் டவுசருடன் தங்களைப் பார்த்து ,தங்களின் கவர்ச்சிகரமான கரகரக் குரலுக்கு மயங்கி , தங்கள் பின்னால் வந்தவன். பின்னால் அதே மேடையில் எம்.ஜி.ஆரை வெளியேற்றிவிட்டு , அதிகக் கூட்டமில்லாத ஒரு மதியப் பொழுதில், மறுபடியும் தங்களை கவனித்தேன்.தி.மு.க என்ற கட்சியே காணாமல் போய்விட்டது என்று அன்றைய அனைத்து ஊடகங்களும் எம்.ஜி.ஆர்.பின்னால் நிற்க, அது குறித்து எந்த அலட்டலும் இன்றி , தன்னம்பிக்கையுடன் தாங்கள் பேசியது 37 ஆண்டுகளுக்குப் பின்னாலும் இன்னும் என் நினைவில் உள்ளது.
முதல்வர் பதவி இழந்து, மகன், மருமகன் எல்லோரையும் சிறைக்கு அனுப்பிவிட்டு , இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தில் தளகர்த்தராக ,நெருக்கடிகளுக்கு பணிந்து விடாமல்,தன்னந்தனியாக அண்ணா சாலையில் முரசொலி விற்ற செய்தி கேள்விப்பட்டு , இவன் தான் தலைவன் என்று முடிவு செய்தவன் நான்.இந்திராவின் நெருக்கடிக்குப் பயந்து எம்.ஜி.ஆர்., தனது கட்சியை அனைத்திந்திய கட்சியாக முடிவு செய்தபொழுது, தி.மு.வின் பெயரை மாற்ற மாட்டேன் என்று எதிர்த்து நின்ற வீரம் தமிழனுக்கே உரியது என்று பெருமிதம் அடைந்தவன்.

நீதிதேவன் மயக்கம் என்ற பெயரில் ஒரு கடிதம்,நெருக்கடி காலம் முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தொண்டர்களின் மனநிலையை பேறு கால மனைவியின் மனநிலையை உதாரணம் காட்டி ஒரு கடிதம் என நீ எழுதிய கடிதங்கள் தான் எனக்கு அன்றைய பைபிள்.படிப்பகம் படிப்பகமாக சென்று படிப்பது தான் என் வேலை.
1977‍ல் முதன் முதலாக காங்கிரஸ் இல்லாத மாற்று நடுவண் அரசு அமைத்ததும் 1988‍ல் வி.பி.சிங் தலைலையில் மறுபடியும் மாற்று நடுவண் அரசு அமைத்ததும் தாங்கள்தான் என்பது அர்சியல் தெரிந்த அனைவரும் அறிந்த செய்தி.
மூன்று "க": கலைஞர், கவியரசு,கணேசன்( சிவாஜி) மூன்று கடவுள்களாக இருந்து எனக்கு தமிழ் போதித்தீர்கள்.
இன்று கூட‌ ஐந்தாவ‌து முறை ஆட்சிக்க‌ட்டிலில் அம‌ர்ந்து அகவை 86யிலும்,ம‌க்க‌ள் ந‌ல‌த்திட்ட‌ங்க‌ள், த‌மிழ‌க‌த்தை தொழில் வ‌ள‌ர்ச்சியுள்ள‌ மாநில‌மாக‌ மாற்றிக்கொண்டிருக்கும் த‌ங்க‌ளின் நிர்வாக‌த்திற‌ன் என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒன்று தான்.
இது போதுமா? தமிழினத் தலைவர் என்ற அடைமொழிக்கு..
ஆனால் இன்று?
தமிழினத் தலைவா என்று அழைத்த அதே வாய் இன்று தமிழினக் கொலைஞர் என்று அழைக்கும்படி அல்லவா நடந்து கொண்டுவிட்டீர்கள்?

உண்ணாநோன்பு என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியாதது இல்லை. அப்படி தெரியவில்லை என்றால் வரலாற்றை திரும்பிப்பாருங்கள்.அதற்கும் நேரம் இல்லை என்றால், தனித் தெலுங்கானா கேட்டு திரு.சந்திரசேகர் ராவ் இருந்ததைப் பாருங்கள். தங்களைப் போல் மக்கள் செல்வாக்கு இல்லாத‌
தலைவர் தான் அவர்.இருந்தும் தான் நினைத்ததைச் சாதித்தபின் தான் உண்ணாநோன்பை விலக்கிக் கொண்டார். 1987‍ல் இந்திய அமைதிப்படையின் செயல்களுக்கு காந்திய வழியில் உண்ணாநோன்பிருந்து எதிர்ப்பு காட்டி உயிர்நீத்த தியாகச்செம்மல் திலீபன் பற்றி அறிந்திருப்பீர்கள்.
இந்தப் பின்ணனியில் தாங்கள் அண்ணா சமாதியின் முன்னாடி இருந்த உண்ணாநோன்பு நாடகத்தை யோசித்துப் பாருங்கள்.
ஈழப்பிரச்சனையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்ற சட்டசபைத் தீர்மானத்தை நடைமுறைப்படித்தி இருந்தால், ஈழத்தில் மே 17 அப்படி ஒரு கோர நிகழ்வு நடந்திருக்கச் சாத்தியமில்லை. தடுத்து இருக்கலாம். தமிழினத்தலைவர் என்ற பட்டத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.
அது மட்டுமில்லாது,உலக நாடுகள் எல்லாம் ஒருங்கிணைந்து இலங்கை மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் போகிறது என்றவுடன் , அதை தடுக்கும் விதமாக , ஒரு பொம்மைக்குழுவை இலங்கைக்கு அனுப்பி இந்திய அரசின் உதவியுடன் , உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பிவிட்டது, தமிழினத்தலைவர் என்ற தங்களின் அடை மொழிக்கு கொஞ்சமாவது அடுக்குமா? என்று தங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளவும்.
ஜெய‌ல‌லிதாவின் ஆட்சியில் தான் த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ள்,தேச‌ விரோத‌ ச‌க்தியாக‌ப் பார்க்க‌ப்ப‌ட்டு தடா, பொடா என்று அர‌சின் அட‌க்கு முறைக்கு ஆளானார்க‌ள்.அது எதிர்பார்த்த‌ ஒன்றுதான். சோ,என்.ராம்,ஜெ. கும்ப‌லுக்கு த‌மிழ‌ன் என்றால் ஆகாது தான். ஆனால் த‌ங‌க்ள் ஆட்சியிலுமா?
பார‌திராஜா,தா.பாண்டிய‌ன், சீமான் போன்ற‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் இல்லம், சொத்துக‌க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு இன்றுவ‌ரை ஒரு ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை.த‌மிழ்த் தியாகி , தியாக‌த் திரும‌க‌ன் முத்துக்குமாரை யாரென்று கேட்ட‌ ஒரு ஈன‌ப் பிற‌வி ஈ.வி.கே.எஸ்.இள‌ங்கோவ‌ன் வீட்டில் ந‌ட‌ந்த‌ ஒரு நிக‌ழ்வுக்கு, உட‌ன்டியாக‌ த‌ம்பிக‌ள் நால்வ‌ரை சிறையில் அடைத்துள்ள‌து உங்க‌ளின் கீழ் உள்ள‌ காவ‌ல் துறை.
ஏன் இந்த‌ மாற்ற‌ம்?
தங்களின் பதவிக்காலத்தில் தான் தமிழக உரிமைகள் பறி போகிறது என்ற குற்றச்சாட்டு,எதிர்க்கட்சிகளால் அரசியல் ஆதாயத்திற்காக வைக்கப்படும் குற்றச்சாட்டு என்று தான் இன்று வரை நினைத்திருந்தேன். ஆனால் ஈழத்தமிழர் , தமிழக மீனவர்கள், முல்லைபெரியார் போன்ற பிரச்சனைகளில் தாங்கள் எடுக்கும் எந்த முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை.
நடுவண் அமைச்சரை எதிர்த்து குரல் கொடுக்க ஒரு கண்டனக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை என்பது தான் இப்போதைய சோகம்.இந்திரா அம்மையாரை எதிர்த்து வீரமுடன் நடந்து கொண்ட தாங்கள் சோனியாவிடம்
தமிழக உரிமைகளை அடகு வைப்பதை என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
ஆலமரத்தின் கீழ் புல் பூண்டு வளருவது மிகக்கடினம்.தங்கள் ஆளுமையின் கீழ் வளர்ந்தும் தனக்கென்று தனிப்பாதை அமைத்துக்கொண்டு நவீன தமிழ் இலக்கியத்தில் தனக்கென்று தனி இடம் தக்கவைத்துள்ள கவிஞர்.கனிமொழியின் ஆலோசனைகளைத் தாங்கள் கேட்பீர்கள் என்று எங்கோ படித்தேன்.ஈழப்பிரச்சனையில் கனிமொழியின் கருத்துக்கும் தாங்கள் இடங்கொடுக்கவில்லை என நினைக்கிறேன்.
ஏன் இந்த மாற்றம்?
தமிழக அரசு காங்கிரஸின் தயவில் இருப்பதாலா?காங்கிரஸ்காரன்கள் செக்கு எது? சிவலிங்கம் எது என்று என்றுமே தெரியாதவர்கள்.அவர்களை நம்பி தாங்கள் வளர்ந்த ,வளர்த்தெடுத்த கொள்கைகள், தமிழ் இன உணர்வு அழிய இடங்கொடுக்கலாமா? அதுவும் மிகத் தேவையான காலகட்டத்தில்..
கடைசியாக ஒன்று. பேரறிஞர் அண்ணா சொன்னதாக தாங்கள் அடிக்கடி மேடைகளில் சொல்லிவந்ததை இங்கு ஒரு முறை நினைவுபடுத்த விரும்புகிறேன். "பதவி என்பது தோளில் போடும் துண்டு போன்றது..தமிழ் இன உணர்வுதான் இடுப்பில் கட்டும் வேட்டி போன்றது".
தாங்கள் வேட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும், இல்லை என்றால், தமிழினக் கொலைஞர் என்ற அடைமொழிதான் தங்களுடன் தொடர்ந்து வரும் என்பதைக் கூறிகொண்டும்
இம்மடலை முடிக்கிறேன்.

தங்களின் ஒரு முன்னாள் உடன்பிறப்பு.
அ.வெற்றிவேல்.