நேற்று இரவு என் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஈசன் பட்த்தில் வந்த “ஜில்லா விட்டு ஜில்லா “ என்ற பாடல் கேட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்றார். எந்திரன் இரைச்சலுக்குப் பின் தமிழ்ப்படப் பாடல்களையே கேட்கத் தயங்கி இருந்த பொழுது, நண்பர் சொல்வற்காக கேட்கலாம் என்று நண்பர் மேல் வைத்த நம்பிக்கையினால் இந்தப் பாடலை யூ டியூப்பில் தரவிறக்கம் செய்து கேட்டுப் பார்த்தேன்..நீங்களும் கேட்டுப் பாருங்கள்..
http://www.youtube.com/watch?v=gXET9AVxKd4
இந்தப் பாடலை ஜேம்ஸ் வசந்தன் இசையில், மோகன்ராஜ் என்ற புதுக் கவிஞர் எழுதி தஞ்சைசெல்வி என்ற நாட்டுப்புறக் கலைஞர் பாடியுள்ளார். இவ்வளவு ஜீவனுள்ள பாடலா? எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்பார்களே. அது இதுதான் என்று நினைத்தேன்.. இவ்வளவு ஜீவனுள்ள பாடல் எந்திரன் காலத்திலா?
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளய்யா.
தூத்துக்குடி பொண்ணுய்யா..நான் தூத்துக்குடி பொண்ணுய்யா
என் கதையை கேளய்யா....
......
சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மனசு இருக்குது பாராய்யா..
.....
அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா..மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பிளை அவன்
துப்பில்லாத ஆம்பளை.....
...........................
என் கனவை எல்லாம் உடைச்சுட்டான்..
முழுப்பாடலையும் வரிகளுடன் கேளுங்கள் அத்துடன் பாடல் காட்சியையும் பாருங்கள்
ஒரு குத்துப்பாட்டு என்ற தாளகதியில் ஆரம்பிக்கும் இந்தப்பாடல்.. சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மனசு இருக்கு பாராய்யா என்ற வரிகள் வரும் போது நம் மனதை உள்ளே இழுக்கும் பாடல்..முடியும் போது ஒரு வித கனத்தை மனதில் ஏற்றி வைத்துவிடுகிறது
குத்துப் பாட்டில் ஒரு சோகம் இழையோடும் ஒரு கவிதை.. இந்தப்பாடல்.. தஞ்சைசெல்வியின் குரலில் ஒரு துக்கம், சோகம் பாடல் முழுதும் நம்மை என்னமோ செய்கிறது
ஒரு குத்துப்பாட்டு கேட்ட ஒரு தயாரிப்பாளருக்காகவும் இயக்குநருக்காகவும் வேறொரு பட்த்திற்காக தயார் செய்த பாடல் இது என்றும் , ஏதோ ஒரு காரணத்தால் இது வேண்டாம் என்று அவர்களால் ஒதுக்கப்பட்ட பாடல்..பாடலில் வரும் அந்தப் பெண் போல..
ஒரு பட்த்திற்கு எழுதிய பாடல் இன்னொரு பட்த்திற்கு உபயோகப்படுத்திக் கொள்வது தமிழ் திரை உலகத்திற்கு புதியது அல்ல.. 52 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தும் இன்னும் காதல் பாடலக்ளில் முதல் இடத்தை வகிக்கும் பாலும் பழமும் பட்த்தில் வந்த ”நான் பேச நினைப்பதெல்லாம் “ என்ற பாடலே ஊமைத் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு தாலாட்டும் விதமாக தநதை பாடும் பாட்டுக்காக வேறு படத்திற்கு எழுதியது தான் ..தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று..அதை மாற்றி காதல் பாடலாக பாலும் பழமும் பட்த்தில் வெளிவந்தது.
ஒரு இயக்குநர் பார்வையில் சரியாகப் படாதது இன்னொரு இயக்குநர் பார்வை பட்டு அழகான அற்புதமான காட்சி அமைப்போடு , இயல்பான நடனத்தோடு, மிக அருமையான பாடலாக வந்துள்ளது..
.
பாசமலர் படத்தில் உள்ள ”மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” பாடலில் கண்ணதாசனின் கவிதை வரிகளை எல்லோரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக இசையை நிறுத்தி பாடகர்களை பாட வைத்திருப்பார் எம்.எஸ்.வி. மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக..என்பதை இசையை நிறுத்தி பாட வைத்து வரிகளில் உள்ள கவிதையையும் சோகத்தையும் ஒரு சேரக் கொடுத்து இருப்பார் எம்.எஸ்.வி. அதே போன்று இப்பாடலில்,’சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மன்சு இருக்கு பாராய்யா,துப்பில்லாத ஆம்பளை, என் கனவை உடைச்சுட்டான், மிச்சமாக நான் நின்னேன் போன்ற வரிகளை திரும்பவும் பாட வைத்தும், ”ஒருசாண் வயித்துக்கு தான் எல்லாத்தையும் விற்கிறேன்,இப்ப இங்க நான் நிற்கிறேன் என் கதையை முடிக்கிறேன்” என்ற வரிகளை இசையை நிறுத்தி மறுபடி பாட வைத்தும் நம்மை கட்டாயமாக கேட்க வைத்து வயிற்றில் கத்தியைப் பாய்ச்சுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.. வாழ்த்துகள் இசை அமைப்பாளரே....
மோகன்ராஜ் என்ற புதுக்கவிஞர், தஞ்சை செல்வி என்ற திரை இசைக்குப் புதிய குரல், இவர்களை அறிமுகப்படுத்தியுள்ள இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இதனை காட்சிப்படுத்தியுள்ள ஒளிப்பதிவாளர், இயல்பான நடன அமைப்பைக் கொடுத்துள்ள நடன இயக்குநர், இந்தப் பாடலைக் கேட்டு அதில் லயித்து, தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கற்பனை பண்ணி(விஷுவலைஸ்) 2010-ல் தமிழ் திரை இசையின் மிக முக்கியமான பாடலாக மாற்றிக் காட்டிய இயக்குநர் சசிகுமார் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.. என் வசம் பரிசு கொடுக்கும் வாய்ப்பு இருக்குமானல், 2010 –ல் இதுவே முதல் பாடலாக இருக்கும்..
ஊர்க்காரர் சசிகுமாருக்கு வாழ்த்துகள்!!!!!!
குத்துப்பாடல் இல்லை.. வயிற்றில் கத்தி குத்திய பாடல் இது..
கேட்டுப் பாருங்கள்..கண்டிப்பாக கலங்குவீர்கள்..
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com
வியாழன், 30 டிசம்பர், 2010
2010-யின் மிக முக்கியமான தமிழ்ப் பாடல்
லேபிள்கள்:
ஈசன்,
குத்துப்பாட்டு,
சசிகுமார்,
தமிழ் திரை இசை,
ஜேம்ஸ் வசந்தன்
வெள்ளி, 24 டிசம்பர், 2010
சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியார்..
1969-71 க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். சிவகங்கை சண்முக ராசா கலையரங்கில் தந்தை பெரியாரின் உரை கேட்டது தான் எனக்கும் பெரியாருக்கும் உள்ள முதல் தொடர்பு..அய்யப்பன் வரலாறு பற்றி சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..அப்போது நான் காலையில் 4 மணிக்கு எழுந்து கோயில் கோயிலாக சுற்றி வந்த காலம் என்பதால் அவர் உரை என்னை அவ்வளவாக கவரவில்லை..அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்..ஆனால் அடுத்த இரண்டு வாரம் அவர் பேசியதையே கிண்டலும் கேலியுமாக நணபர்கள் மத்தியில் பேசி வந்த போது தான் அவர் என்னையும் அறியாமல் என் மனதில் விதை ஊன்றிப் போயுள்ளார் என்று பின்னர் அறிந்து கொண்டேன்..
என் வரலாற்று அறிவுக்கு எட்டிய வரை மதங்களை முதன்முதலில் கேள்விக்குள்ளாக்கியர் சித்தார்த்தன். இந்திய வரலாற்றில் மாற்றுச் சிந்தனையை தொடங்கி வைத்தவர் புத்தர்.அவர் தொடங்கி வள்ளலார் வரை ஒரு நீண்ட பராம்பரியத்தின் கடைசிக் கண்ணி நம்மை சிந்திக்கச் சொன்ன தந்தை பெரியார்..
உங்களுக்காக சிந்திக்கிறேன்..உங்களுக்காக உழைக்கிறேன் என்று சொல்லி 92 வயது வரை மூத்திரப் பையுடன் ஊர் ஊராக சுற்றி வந்து உண்மையிலேயே நமக்காக உழைத்தவர் தந்தை பெரியார்..
போன நூற்றாண்டில் அவர் அளவுக்கு சாதித்துக்காட்டியவ்ர் வேறு ஒருவரும் இருக்க முடியாது..
சாதி ,மதம், இனம்,மொழி, தேசீயம் என்ற எல்லா நிறுவன மையங்களையும் கேள்வி கேட்டவர்.
அவர் மறைந்து 37 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சாதித்ததில் எது என்னைப் பொறுத்தவரையில் எது முக்கியமானதாகப் படுகிறது என்று அவர் சாதித்துக் காட்டிய அனைத்து சாதனைகளையும் எடுத்து வைத்துப் பார்க்கிறேன்..
சுயமரியாதை என்ற சொற்றொடர் பெரியாருக்கு முந்தைய காலகட்ட்த்தில் இருந்து இருக்கலாம்.. ஆனால் அந்தச் சொற்றொடருக்கான உண்மையான அர்த்தத்தை தமிழர்களின் மனங்களில் ஊன்றி விட்டுப் போனது தான் மிக முக்கியமானதாகப் படுகிறது. தமிழர்களின் சிந்தனையில் மிகப் பெரும் தாக்கத்தை இந்த மந்திரச்சொல் உண்டு பண்ணியுள்ளது என்பது வரலாறு.
சுயமரியாதையுடன் எந்த விசயத்தையும் அணுக வேண்டும் என்று சொல்லி சுயமரியாதை என்பதை ஒவ்வொரு தமிழனின் கூறுகளில் ஒன்றாக்கி வைத்தவர் தந்தை பெரியார்..
இன்று சுயமரியாதை என்பது என்ன என்று தெரியாத ஒரு தமிழனும் இருக்க மாட்டான். ஆனால் சுயமரியாதையோடு வாழ்கிறானா என்பது வேறு பிரச்சனை.. அப்படி சுயமரியாதை இழந்து வாழும் ஒருவனுக்கும் , நாம் வாழ்வது சுய மரியாதியுடன் உள்ள வாழ்வா என்று அவன் மனதை அவனைப் பார்த்தே கேள்வி கேட்க வைத்தவர் தந்தை பெரியார்..
அப்படிப் வாழ்பவனைப் பற்றியும் தந்தை பெரியார் மிக அழகாக தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.“ஒண்ணும் தெரியாதவன் மடையன். தெரிந்திருந்தும் அதில் நமக்கு ஆதாயம் கிடைக்குமா என்று யோசிப்பவன் அயோக்கியன்”
இன்று தந்தை பெரியாரின் நினைவு தினம்..பெரியாரை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறோம் என்று நம்மை நாமே உரசிப் பார்த்துக் கொள்ளும் தினமாக இந்நாளை மாற்றிக் கொள்வோம்..
படம் உதவி: ஜீவா,கோவை
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com
லேபிள்கள்:
சுயமரியாதை,
தந்தை பெரியார்,
நினைவு தினம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)