வெள்ளி, 29 ஜனவரி, 2010

‘சூப்பர் ஸ்டார்’ பிள்ளையார்.

( இது மதம் சம்பந்தமான கட்டுரை அல்ல.. தமிழக மக்கள் மனநிலை குறித்து ஒரு அலசல்..அது மட்டுமே..)

1967 பொதுத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் வீடு வீடாக மிட்டாய் கொடுக்க, அதனைப் பெற்றுக் கொண்டவன் அவர்கள் பின்னாலே போக , அவர்கள் கடைசியில் போய் நின்றது “ அண்ணா படிப்பகம்” அந்த கால கட்டத்தில் சிவகங்கை முழுதும் தெருவுக்கு ஒரு படிப்பகம் இருந்தது. இப்படித்தான் வீட்டுக்குள் இருந்தவன் வெளியில் வந்தேன். 3வதில் அல்லது 3 முடித்து கோடைகால விடுமுறையாக இருக்கலாம்.அன்று ஆரம்பித்த பழக்கம் தான்.. வீடு தாண்டி, தெரு,நகரம், மக்கள், அரசியல், சினிமா என்று ஒவ்வொன்றையும் பார்ப்பதும், பார்த்து வியப்பதும் இன்றுவரை ..

இந்த 40 ஆண்டுகளில் தான் என்னென்ன மாற்றங்கள்..தினசரி அம்மா கொடுக்கும் 2 காசு வாங்கிப் போய் கமர்கட்..சூட மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டேன் என்பது நம்புவதற்கு கடினம். 5 காசுக்கு கீரைக்கட்டு வாங்கி வருவேன்..


வளர்ந்தது முழுக்க முழுக்க அக்கிரஹாரத்தில்..எங்கள் வீட்டின் நேர்பின்புறம் கவியோகி சுத்தானந்த பாரதியின் வீடு..சிவகங்கையில் ஒரு கோயில் விடுவது கிடையாது..கோயில் விஷேங்கள் எல்லாவற்றிலும் எங்கள் சிறுவர் குழாமுக்கு முக்கிய பங்குண்டு. நவராத்திரி என்றால் அக்கிரஹாரத்தில் எங்கள் இல்லம் தவிர பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என அனைவரது இல்லங்களிலும் அற்புதமான கொலுவும் , தினம் தினம் வித்தியாசமான சுண்டலும்..மார்கழி மாதம் முழுதும் அதிகாலை எழுந்து, கோலம் போடும் அக்காவிற்கு துணையாக போர்வை போர்த்திக் கொண்டு இருப்பதும், வெளிச்சம் வருமுன்னர் குளிரில் குளித்துவிட்டு , கோயில் கோயிலாகப் போய் வருவதும் ,திருப்பாவை, திருவெம்பாவை எனப் பாடிக்கொண்டு, பஜனை கோஷ்டியுடன் ஒத்த அக்கிரஹாரம், ரெட்டை அக்கிரஹாரம் சுற்றி வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று.பெரும்பாலும் டிசம்பர் 15 மார்கழி பிறக்கும் போது அரைப்பரீட்சை முடிந்திருக்கும்..மார்கழி கொண்டாட்டங்கள் எனபது அரைப்பரீட்சை (அரையாண்டுத் தேர்வு) விடுமுறையைக் கொண்டாடும் ஒரு விழா...


இப்படித்தான் எனக்கு சைவமும் வைணவமும் சின்ன வயசிலே அறிமுகம். சைவ , வைணவ சண்டையில் தான் கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் அத்தியாயம் ஆரம்பிக்கும்..அது கொடுத்த தூண்டுதல்,நெல்லை சைவசித்தாந்தக் கழகம் வெளியிட்ட சைவ சமய கையேடு ( நாம தான் பொட்டலம் மடித்துக் கொடுக்கும் காகிதத்தையும் விடுவது கிடையாதே)..திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிரசங்கம் என சிறு வயதில் ஒரே ஞானப்பால் தான்..அது மட்டுமின்றி கோயில்களில் தொடர் சொற்பொழிவுகள்..என அன்னைத் தமிழையும் சைவத்தையும் திகட்டதிகட்ட கொடுத்தார்கள்..


அதே சமயத்தில் அரசியலில் காமராஜர், சிவாஜி ஒரு அணியாகவும், கருணாநிதி எம்.ஜி.ஆர் ஒரு அணியாகவும் மற்றும் எம்.கல்யாணசுந்தரம் வலதாகவும்,பி.ராமமூர்த்தி இடதாகவும் அணி வகுத்து வந்த காலம்.தமிழ் திரையுலகிலோ சிவாஜி., எம்.ஜி.ஆர்., ஜெமினி என மூவேந்தர்களின் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்தது. திரை உலகுக்கு வேண்டுமானல் மூவேந்தர்கள் ..ஆனால் ஆன்மிகத்தில்..இன்று போல் அதிகளவில் கஞ்சா சாமி, கார்ப்பரேட் சாமி என யாரும் கிடையாது.கோயில் கருவறைக்குள் இருக்கும் சாமி மட்டும் தான்.


அங்கேயோ..


ஒரே ஒரு கொடிதான் உயரப் பறந்து கொண்டு இருந்தது. “சேவற்கொடி”. அந்தக் காலத்தில் எங்கு நோக்கினாலும் முருகன் தான். பக்திப்பாடல்கள் அனைத்தும் முருகனைப் பற்றியதே. சீர்காழி,டி.எம்.எஸ், சூலமங்கலம் சகோதிரிகள், கே.பி.சுந்தராம்பாள்,பெங்களூர் ரமணி அம்மாள் என முருகனைப் பற்றி மட்டுமே பெரும்பாலான பாடல்கள்.

அது மட்டுமல்ல..முருகருக்கு பரப்புரை அணித்தலைவராக ஆன்மிகத்தில் திருமுருக வாரியார் சுவாமிகளும், திரைஉலகத்தில் தேவர் அவர்களும் இருந்தார்கள்.தமிழ் சொல்லிக் கொடுத்த தமிழாசிரியர்கள் அனைவரும் அந்தக் காலத்தில் திராவிட இயக்கப் பின்ணனியில் இருப்பவர்கள்.கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்கள் .இருந்தும் தமிழ்க்கடவுள் எனவும் , குறிஞ்சித் தலைவன் எனவும் முருகனைத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.டி.வி. இல்லாத அந்தக்காலங்களில் எந்தக் கோயில் திருவிழாக்களிலும் வள்ளி திருமணம் இல்லாத விழாக்களே கிடையாது..


உட்காரவும்,எழுந்து நிற்கவும் எந்த வேலை தொடங்கினாலும் “ முருகா, ஞானபண்டிதா’ என்பதுதான் மூச்சுக்கு முன்னால் வந்து நிற்கும் முதல் வார்த்தை.அப்பா, அம்மா, அப்பத்தா, தாத்தா ,மாமா பாட்டி என என் வீட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தெருவில் யாரைச் சந்தித்தாலும் முருகா தான்.



இப்ப நிலைமையே வேற..எப்ப என்ன நடந்தது என்றே தெரியவில்லை.ஏதோ சிவாஜிக்கு மார்க்கெட் போய், ரஜினிகாந்த் வந்த மாதிரி..அபூர்வ ராகங்களில் முதல் முறையாக ரஜினியைப் பார்த்தவர்கள் இன்னும் பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இவர்தான் என்றால் யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க முடியாது..அதே நிலை தான்..இன்று சூப்பர் ஸ்டாராக உள்ள பிள்ளையாருக்கும். வருடத்தில் ஒரு நாள் பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபட்டு அடுத்த நாள் அதையும் கிணற்றிலோ குளத்திலோ கரைத்து விட்டு பிள்ளையாரை மறந்துவிடுவது தான் எனக்கும் என்னையொத்த சிறுவர்களுக்கும் எங்களது மூதாதையர்கள் சொல்லிக்கொடுத்த வழிபாடு.வீட்டில் பெரும்பாலும் பிள்ளையாரை வணங்குவதற்கென்று ஒன்றும் இருக்காது.அதன் காரணமாகத்தான் வெளியில் இருந்து பிள்ளையாரை காசு கொடுத்து வாங்கி வரும் வழக்கம் தமிழர்களுக்கு இருந்திருக்கும் என நினைக்கிறேன்.


இது இப்படி என்றால்., அன்று சிவகங்கையில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு மலையாளி கறுப்பு வேட்டி சட்டை கட்டி அய்யப்பன் கோவில் போவார். அன்று சிவகங்கை நகர் முழுவதற்கும் ஒருவரோ இருவரோ அய்யப்பன் கோவிலுக்கு போனதாக எனக்கு ஞாபகம். அது மனதில் தங்கி இருக்கும் படியான நிகழ்வும் இல்லை. என் ராசாவின் மனசிலெ படத்திலே “போடா போடா புண்ணாக்கு” என்று ஒரிரு காட்சியில் வந்து போன வடிவேலு மாதிரி.


இன்று தமிழர் வாழ்வில் அய்யப்பனுக்கும் பிள்ளையாருக்கும் உள்ள இடம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் ரஜினிக்கும் வடிவேலுக்கும் உள்ள இடம் மாதிரி. இவர்களை உதாரணம் காட்டுவது, சினிமாவில் இருந்து காட்டினால் நான் சொல்ல வந்த கருத்து மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகவே அல்லாமல் ரஜினியின் உழைப்பைபோ,வடிவேலு என்ற கலைஞனின் அபாரத்திறமையையோ குறைத்து மதிப்பிட இல்லை.


ஒரு திருமணப்பத்திரிக்கை வாங்குவதற்காக திருமண அட்டைகள் விற்கும் கடைக்குள் நுழைந்தால், மருந்துக்கு ஒன்றுகூட தமிழக்கடவுள் முருகன் படம் போட்டது இல்லை..ஏன் என்றால் அதுக்கு ஒரு லாஜிக்..முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி என..அதுனால அதை யாரும் வாங்க மாட்டாங்க..அப்ப பிள்ளையார் யாருக்கும் தெரியாமல் வட இந்தியாவிலோ எங்கேயோ சித்தி புத்தின்னு ரெண்டு பொண்டாட்டியோட இருக்கறதா ஒரு கதை இருக்கே..அது மாதிரி யாருக்கும் தெரியாமல் வைச்சுக்கலாமா?ன்னு கேட்டால் என் மனைவியே என்னைத் திட்டுகிறார்கள் எனக்கு இன்று உள்ள டிரெண்ட் ஒன்றுமே தெரியவில்லை என்று பொது இடம் என்றும் பாராமல்.. சாமிக்கும் டிரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என எனக்குத் தெரியவில்லை. இது என்ன சினிமாவா? தமிழ் மக்கள் எல்லாவற்றையும் சினிமாவாகத்தான் பார்க்கிறார்களா? இன்னொரு காரணம் சொல்கிறார்கள்.. பிள்ளையாரை கும்பிட்டால் நல்ல செல்வம் வருமாம்..அப்ப தகப்பன் சாமி எனவும், ஞானபண்டிதன் என அறிவுக்கும் அழகுக்கும் கடவுளாக உள்ள முருகனிடம் இருந்து அறிவும் அழகும் தேவையில்லையா?


இது எப்படி நடந்தது? 40 வருடங்களில் தமிழர் வாழ்வில் ஏனிந்த மாற்றம்?
நல்ல வியாபாரத்தந்திரத்துடன், ஒரு நிறுவனம் பலப்பல வியாபார நுணுக்கங்களுடன் விளம்பரப்படுத்தி மக்களை சென்றடைந்தால் அந்தப் பொருள் நன்கு விற்பது போல் அல்லவா இருக்கிறது இது? தமிழர்களிடம் எதையும் எப்படியும் கொண்டு போய் சேர்த்துவிடலாம் என்று.. அக்ஷ்ய திரிதியையாகட்டும், வாஸ்தாகட்டும்,Laughing Buddha வாகட்டும்.... கிரிக்கெட்டாகட்டும் . எல்லாவற்றையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்வார்கள் போல..அதுவும் சரிதான் ..அதுதான் அறிவே வேண்டாம் என முருகனை ஒதுக்கி வைத்து உள்ள சமுதாயம் தானே..


மனவியல் நிபுணர் மருத்துவர்.ருத்ரன் அய்யா தான் இது குறித்து தமிழர்கள் மனநிலை மாற்றங்கள் பற்றிச் சொல்ல வேண்டும் அல்லது சமூகவியல் அறிஞர்கள் தான் இது குறித்து கருத்துச் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் சினிமாவைப் பார்க்கிற அதே கண்ணோட்டத்தில் தான் தமிழர்கள் பார்ப்பர்களா?


இது எல்லாவற்றையும் விட இதற்கான காரணங்களாக நான் நினைப்பது தமிழ் மொழியை,அதன் தொன்மையை ,தமிழர்களின் வேர்களை அவர்களின் பண்பாட்டினை தொடர்ந்து அழிக்கும் அழித்துக்கொண்டிருக்கும் திட்டமிட்ட வேலையாகத்தான் நான் பார்க்கிறேன்..அதற்கு அறிவை கடன் கொடுத்துவிட்ட தமிழர்கள் தன்னை அறியாமல் இடங்கொடுத்து வருவதாகவே எனக்குப் படுகிறது.


இதைப்படிக்கும் நண்பர்கள் யாராவது இந்த விவாதத்தை முன்னெடுத்து கொண்டு சென்றால் அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.



தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

வெள்ளி, 15 ஜனவரி, 2010

சாருவும் பில்டர் காபியும்

சாருவின் எழுத்துக்களை நான் தொடர்ந்து வாசித்து வருபவன். அவருடைய எழுத்துக்கள், இணையத்தில் ‘கோணல் பக்கங்கள்” எழுத ஆரம்பித்த பின்பு தான் அதிகமான வாசகர்களை சென்றடைந்தது. 1984 என்று நினைக்கிறேன் .அப்போதே ‘ஜே.ஜே.சில குறிப்புகள்” குறித்து அவர் எழுதிய ஒரு விமர்சனம் மூலம் சாரு எனக்கு அறிமுகம். 1990 –ல், எம்.ஜி.ஆர், சிவாஜி படப்பாடல்கள் என வெளிவரும் ஒரு மட்டமான தரத்தில்,சாருவின் நாவலான “எக்ஸ்ஸிடென்ஸியலும் பேன்ஸி பனியனும்” வாங்கிப் படித்தவன். அது மட்டுமல்ல .. அன்றைய காலகட்டத்தில் அதன் நடை எனக்கு முக்கியமாகப் பட்டதால், பல நண்பர்களுக்கு அற்முகம் செய்தும் வைத்துள்ளேன். சவூதிக்கு 1992 வந்தபின்பு,இலக்கிய அறிமுகம் அதிகம் இல்லாத ஒரு தமிழ் நண்பர், அது ஏதோ ஒரு மாதிரியான புத்தகம் என்று நினைத்து என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டுபோயே போய் விட்டார். புத்தகப் பதிப்பு அப்படி..

சாரு மிக அதிக உத்வேகத்துடன் மிகத்தீவிரமாக இப்பொழுது எழுதிக் கொண்டும், இணையம் மூலம் அதிக வாசகர்களை தன் ரசிகர்களாக மாற்றிக் கொண்டும் இருக்கிறார்.எழுத்தை மட்டுமே நம்பி வாழும் சூழல் “நம் காலத்து நாயகன்” சுஜாதாவிற்கே அமையவில்லை. ஆகவே சாருவுக்கு நல்வாழ்வு கிட்ட எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சவூதியில் புத்தகம் கொண்டு வருவது என்பது ஒரு கடத்தலுக்குச் சமம். ஆகவே நான் சென்னை வரும் போது மட்டுமே,சில புத்தகங்களை எடுத்து, அதையும் முடிந்தவரை மறைத்து வருவது உண்டு. அப்படி சென்ற டிசம்பர் மாதம் என் மதுரை இல்லத்திற்கு வந்த நவம்பர் மாத உயிர்மை இதழ் எடுத்து வந்தேன். அதையும் நேற்றுதான் படிக்க நேரம் கிடைத்தது.

நவம்பர் மாத உயிர்மை இதழில் சாரு எழுதிய “தமிழ் சினிமா பாடல்கள்” பற்றி மிக அருமையான ஒரு கட்டுரை இருந்தது. அதில் ஒரே ஒரு குறை தெரிந்தது. கண்ணதாசன் வரிசையில் வைரமுத்துவை இணை வைத்தது. அது அவர் விருப்பம் என்று இருந்து விட்டேன். இங்கு நான் பேச வந்தது வேறு.

தமிழர்களின் சுரணை கெட்ட மொன்னைத்தனத்திற்கு , தினசரி வாழ்க்கையில் எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். ஆனால் சாருவுக்கு காபியில் பால் ஊற்றிக் குடிப்பது, உலக மகாக் கொடுமையாகத் தெரிகிறது? எங்களைப் போன்ற பில்டர் காபிப் பிரியர்கள் மேல் ஏன் இந்தக் கொலைவெறி?

பெருமைக்காகச் சொல்லவில்லை.1984 முதல் நான் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளேன்.1992 முதல் NRI யாக வளைகுடா நாடுகளில் வாசம். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை சென்றுள்ளேன்.காபி விளையும் பிரேசில் உள்ள தென் அமெரிக்கா மட்டும்தான் பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை. உலகின் பல முன்னணி நட்சத்திர விடுதிகளிலும் , 2000க்கு அப்புறம் பிரபலமாகிய Starbucks போன்ற காபி நிறுவனங்களிலும், பாரிஸ் தெருக்களில் உள்ள நடைபாதைக் காபிக்கடைகளிலும்,பெங்களுரூவில் உள்ள காபிக்கடைகளில் 2/3 என்றும், மற்றும் பல்வேறு நாடுகளில் காபி குடித்துள்ளேன். French, italian, turkish , american, coffe with cream என விதவிதமான காபி தயாரிக்கும் வகைகள். அத்தனையும் குடித்துவிட்டுத் தான் சொல்கிறேன். தஞ்சை, மாயவரம் மற்றும் கோவை அன்னபூர்னா( 1990 களில்) போன்ற உணவு விடுதிகளில் கிடைக்கும் பில்டர் காபிக்கு இணையாக மேலே சொன்ன எந்த வெளிநாட்டுவகை காபியையும் சொல்ல முடியாது என்று என் நாக்கு எனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

1978யில் டெல்லி சென்ற போதுதான் ஒரு இடத்தில் “cold coffee” என்றும் Ice tea கிடைக்கும் என்றும் எழுதி இருந்தது. அப்பொழுதே என்னுடன் இருந்த நண்பரிடம் நான் சொன்னது” ராம்நாடில் இருக்கும் என் அப்பத்தா கேட்டு பார்த்து இருக்க வேண்டும் இந்த விளம்பரத்தை...கடைக்காரனை செருப்பால் அடிக்கக்கூட தயங்கி இருக்க மாட்டார் என” .ஏனென்றால் என் அப்பத்தாவிற்கு காபி கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். என் அம்மா போட்டுக் கொடுத்த காபியை உடனடியாக எடுத்துக் கொண்டு கொடுக்கவில்லை என்று, காபி ஆறிவிட்டது என்பதற்காக பேரன் என்றும் பாராமல் எனக்கு கண்டபடி அர்ச்சனை. சுடச்சுடச் காபி குடிப்பதும் ஒரு பழக்கம் தான்.


சாப்பாடு என்பது நமது பழக்கவழக்கம் சார்ந்தது என்பதை சாரு அறியாதது ஏனோ? டோக்கியோவில் ஒரு இலையில் சுற்றி வெள்ளைவெளேர் என்ற அரிசிச் சோறை வைத்துவிட்டு , ஒரு கோப்பையில் ஒரு சூப் வைத்து சாப்பிடச் சொன்னபோது, உண்மையிலே ஒரு சின்ன தேக்கரண்டி கருவாட்டுக் குழம்பு கிடைக்காதா என மனசு கிடந்து அடித்துக் கொண்டது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.இதுமாதிரி உலகில் பல இடங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் தனிக்கதை.


சாருவுக்காக இந்த கொசுரு செய்தி.. நல்ல கள்ளிப்பால் போன்று திக்கான பாலில் , முதல் டிக்காஷ்னில் செய்த காபியைக் கொடுத்து, எங்கே, 25 வருடங்களாக பாலைவனத்தில் அலைந்து திரிந்து சம்பாதித்த எனது சொத்துக்களை எழுதி வாங்கிவிடுவார்களோ? என்ற பயம் எனக்கு என்றும் உண்டு..அதனால் தான் எல்லாவற்றையும் மனைவி பெயரில் எழுதி வைத்துள்ளேன். அந்தளவுக்கு நான் பில்டர் காபிக்கு அடிமை.


நாக்குக்கு பழகப்படாத வரை எந்த உணவும் நமக்குப் பிடிக்காது.பழக்கம் தான் காரணம்.. ஆக்வே எங்களைப் போன்ற காபிப்பிரியர்களை ,தமிழர்களின் சுரணை கெட்ட மொன்னைத்தனத்திற்கு உதாரணம் காட்ட வேண்டாம். இந்தப் பதிவு கூட எங்களுக்கும் சுரணை உண்டு என்று காண்பிப்பதற்காகவே...

தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

சனி, 9 ஜனவரி, 2010

தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்!

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு

வணக்கமுடன் வெற்றிவேல்.( தமிழ் நாட்டின் குடிமகன்)

8ந் தேதி சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்கு விடை அளித்த அமைச்சர் பொன்முடி அவர்கள், இந்த வருட தமிழக கனிம வள நிறுவனத்தின் மொத்த வருவாய் சென்ற வருடம் 10 கோடியாக இருந்தது , இந்த வருடம் 3 கோடியாக குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரம் கொடுத்து இருந்தார்.

தமிழகத்தின் ஆதி நகரமான மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு மலைகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டு,மொட்டை அடிக்கப்பட்டது வெறும் 3 கோடி வருமானத்திற்காகவா? வருடம் ஒரு முறை விடுமுறைக்கு வரும் போதெல்லாம் ,மதுரை-காரைக்குடி, மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள சிறு சிறு குன்றுகள் முதல் பெரிய மலைகள் வரை திடீர் திடீர் என காணாமல் போனது எல்லாம் இந்த 3 கோடி வருவாய்க்காகவா? இந்த 3 கோடி வருவாய் தமிழ் நாடு மொத்ததிற்குமானது. அப்படிப்பார்த்தால், மதுரையைச் சுற்றியுள்ள குவாரிகளால் வரும் வருமானம் அரை கோடி கூட இருக்காது.எதற்காக இயற்கை கொடுத்த மலைகளை நாம் மொட்டை அடித்துக் கொண்டு இருக்கிறோம்? மதுரையைச் சுற்றியுள்ள இந்த மலைக்குன்றுகள் எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு கொண்டது என்பது தங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சமணர்கள் தங்கி இருந்த குகைகள், அவர்கள் படுத்து இருந்த பள்ளிகள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மலைதொடர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டது சொற்ப வருமானத்திற்கா? இந்த மலைத்தொடர்கள் இயற்கை தந்த வரம் அல்லவா? 300 கோடி கிடைத்தாலும் வேண்டாமென்று இவற்றைப் பராமரிக்க வேண்டியது நமது கடமை அல்லவா.. இது மட்டுமின்றி சிவகங்கை சாலை, மற்றும் கீழவளவு சாலையோர கிராமத்து மக்கள் இந்த கிரானைட் குவாரியால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவது, தங்கள் கவனத்திற்கு வருவதில்லையா?

சுற்றச்சூழல் இதனால் மாசு படுவது,மக்கள் தீராத நோயில் விழ்வது போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்கியுள்ள மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வண்ணம், இந்தக் குவாரிகளால் வருவாய் அதிகமில்லை என முடிவெடுத்து , இதை மூடிட அம்மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

இதனை பதிவு அஞ்சலில் தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.

வணக்கத்துடன்
அ.வெற்றிவேல்
09/01/2010
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

செவ்வாய், 5 ஜனவரி, 2010

இலவு காத்த கிளி- வைகோவின் அரசியல்

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., முதலவராகவும் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த நேரம். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நான் நான்காம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டு இருந்தேன் கல்லூரியின் தமிழ் மன்ற அமைப்பின் செயலர். 1979 என்று நினைக்கிறேன். காரைக்குடியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் சித.சிதம்பரம் இல்லத்திருமண விழாவுக்கு தலைவர் கலைஞர் வர, அவரை கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கவேண்டி அழையா விருந்தாளியாக அத்திருமணத்திற்கு சென்று இருந்தேன்.. நான் சென்ற அமர்ந்த சிறிது நேரத்தில் வை.கோபால்சாமி அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். அசந்து போனேன்.அமர்ந்திருப்போர் அனைவரையும் ஒரு நிமிடத்தில் தன் வயப்படுத்திய பேச்சு.அழகான உச்சரிப்புடன் ஏற்ற இறக்கங்களுடன் அவர் மேற்கோள் காட்டிய ஒவ்வோன்றும் இன்றும் என் காதில் ரீங்காரமிடுகின்றன. அது நாள்வரை திருமணத்தம்பதிகளை வாழ்த்தப் பயன்படும் அடுக்குமொழி வாக்கியங்களான “நிலவும் வானும், மலரும் வாசமும்,பூவும் தேனும் என்று தொடர்ந்து சொல்லி, இவைகளைப் போல் இருங்கள் என்று வாழ்த்த மாட்டேன். ஏனென்றால் இவைகள் பிரிந்தும் காணக்கிடைக்கின்றன. ஆகவே மணமக்களை, கலைஞரும் தமிழும் போல, கலைஞரும் அரசியலும் போல, கலைஞரும் தொண்டர்களும் போல ..என்று பல்வேறு வசனங்களால் கலைஞர் புகழ் பாடி அம்மணமக்களை வாழ்த்தினார்.அதுவரை கலைஞருடைய பேச்சுக்கு மட்டுமே அடிமையாகி இருந்த நான் அன்று முதல் சிவகங்கை மாவட்டத்தில் எங்கு பேசினாலும், பின்னாளில் சென்னையில் எங்கு பேசினாலும் வைகோவின் கூட்டங்களில் என்னைப் பார்க்க முடியும்.



1988 – நாடாளுமன்றத் தேர்தலில் “எனது போர்வாள்” என்று கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டு, சிவகாசித் தொகுதி மூலமாக தேர்தலில் முதன் முதலாக வைகோ, காளிமுத்துவை எதிர்த்து போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் காளிமுத்துவிடம் தோல்வி அடைந்தார். அத்தேர்தலின் பரப்புரையின் போது ஆலங்குளம் அரசு சிமிண்ட் தொழிற்சாலையின் விருந்தினர் விடுதியில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் அது சமயம் காளிமுத்து , வைகோவைப் பார்த்து “ உனக்கென்னப்பா..தோத்தாலும் ஜெயித்தாலும் நீ எம்.பி.. நான் ஜெயித்தால் தான் எம்.பி என்று சொன்னதாக தகவல்.அதே மாதிரி தோற்றபின்பும் கலைஞரால் , மாநிலங்களவை எம்.பியாக பதவி பெற்றார்.
குறைந்த நாளே ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ஆட்சியில்,அந்நாளைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கிட்ராமன், ஆளுநர் பரிந்துரை இல்லாமலே தி.மு.க ஆட்சியை கலைக்க, 1991 தமிழக மக்கள் மீது ஒரு சட்டசபைத் தேர்தல் திணிக்கப்பட்டது.ராஜிவின் மரணம்,அதை தொடர்ந்து ஜெ. முதல் முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் தி.நகரில் வைகோ கூட்டம். அங்கும் இருந்தேன். கூட்டத்தைப் பார்த்து ஏதோ கேள்வி கேட்க, பொது மக்கள் “தேவடியா” என்று உரக்கச் சொன்னதையும், அந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒரு அமைதி காத்து, பின்பு பேச்சைத் தொடர்ந்ததும் எனக்கு நன்கு நினைவில் உள்ளது.


92-ல் நான் சவூதி வந்தபோது இணைய வசதி, கைபேசி வசதி எல்லாம் கிடையாது.இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப்பின்னர் தான் தினமணி கிடைக்கும். 93-ல் வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பொழுது கலைஞர் தவறு செய்கிறார் என்றுதான், எனக்குக்கிடைத்த முதல்கட்ட தகவல்படி நான் யோசித்தேன் ஆனால் தொடர்ந்து வைகோ நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றத்தை தந்தன. தி.மு.கவின் சில மாவட்டச் செயலர்கள் உதவியோடு தி.மு.கவின் சின்னத்தை முடக்கத் திட்டமிட்டது என்று வீணாய்ப் போன காரியங்களில் ஈடுபட்டது அவர் மேல் அவநம்பிக்கையையை உண்டு பண்ணியது. அப்படி இப்படி என்று தனியாக கட்சி ஆரம்பித்து, தமிழகமெங்கும் சுற்றி வந்தார். அதன்படி 94-ல் ஒருமுறை அவருடய நடைபயணத்தில் திருமங்கலம் முதல் மதுரை வரை நானும் வந்தேன். அவருடைய மக்கள் செல்வாக்கு அறிவதற்காக.. ஜெ.வின் முதல் கட்ட ஆட்சியில் அவருக்கு எதிராக மக்களைத் திரளச்செய்ததில் வைகோவிற்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் 96 சட்டமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை தானே பெரிதாக நினைத்துக் கொண்டு பா.ம.கட்சியை விலக்கிவிட்டு மார்க்ஸிஸ்டோடு கூட்டணி வைத்துக்கொண்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். தி.மு.க.,ம.தி.மு.க என்று தொகுதிப் பங்கிட்டிற்காக அலைந்து கலைஞரை “பெரிய அண்ணன்” என்றும் வைகோவை “சின்ன அண்ணா” என்று ராமதாஸ் நொந்து போய் பேட்டி கொடுத்தது உண்டு.தமிழ் மாநிலக் காங்கிரஸ் மூப்பனார் தந்த தெம்பினால் பா.ம.கவை கலைஞர் உதாசீனப்படுத்தினார் என்றால், வைகோ எந்த நம்பிக்கையில் அப்படிச் செய்தார் என்று இன்றுவரை தெரியவில்லை.


தி.மு.க ஆட்சிப்பொறுப்புக்கு வந்து ஜெ.மீது பல வழக்குகளை போட்டு,ஜெ-சசிகலாவுடன் உடல் முழுதும் நகை அணிந்த புகைபடங்களை பத்திரிக்கைக்கு வெளியிட்டு ஜெ.யை முடக்கி வைத்த நேரத்தில்,தமிழகத்தில் ஒரு பொறுப்பான எதிர்கட்சி இல்லாத நல்ல வாய்ப்பை, ஒரு வெற்றிடத்தை, தி.மு.கவிற்கு மாற்று ம.தி.மு.க என்று மக்களிடையே ஒரு நம்பிக்கையை கட்டி எழுப்பாமல் போனதுதான் வைகோவின் எதிர்காலம் சூன்யமானதற்கு முக்கிய காரணம். இதுவரை எந்த ஜெ.வை எதிர்த்து அரசியல் பண்ணி வந்தாரோ, அவர் காலிலே 98 நாடாளுமன்றத் தேர்தலின் போது மண்டியிட்டது வைகோவின் மிகப்பெரும் சறுக்கல்.
முடங்கிக் கிடந்த ஜெ.விற்கு மறுவாழ்வு கொடுத்தது 98 நாடாளுமன்றத் தேரதல்.மைய அரசுக்கு கொடுத்து வந்த வாய்ப்பை ஜெ. விலக்கிக் கொள்ள, அணி மாற்றங்களால் தி.மு.க அணியில் ம.தி.மு.க..இணைந்தது. கலைஞருக்குப் பிறகு தி.மு.க என்ற கட்சி இல்லாமல் போய்விடும் என்ற பார்வையில், அடுத்து வந்த ஜெ.ஆட்சியில் வைகோ தான் தன் முதல் எதிரியாகப் பார்க்கப்பட்டார். தேவையில்லாமல் ஏதோ காரணங்களைக் காட்டி “பொடா” சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


முரசொலி மாறன் மறைவை அடுத்து தலைநகர் டெல்லியில் தி.மு.கவிற்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நாம் நிரப்பிக்கொள்ளலாம்,கலைஞர் அந்த வாய்ப்பை தனக்கு வழங்குவார் என்ற வைகோவின் நம்பிக்கையை கலைஞர் துடைத்தெறிந்து விட்டார், தயாநிதி மாறனை அறிமுகப்படுத்தியதன் மூலம். டெல்லியில் மறுபடி ஆட்சி செய்யலாம் என்ற அந்த நம்பிக்கையும் பொய்த்துப்போனதுமே, கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கழன்று கொண்டார்கள். பின்னர் வேறு வழி தெரியாமல் தன்னை கைது செய்து சிறையில் அடைத்த ஜெ.வுடன், தமிழ் ஈழம் என்றாலே வெறுப்பைக்கக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்த ஜெ.வுடன் கூட்டணி, ஜெ.வை மறுபடி முதல்வராக்கிக் காட்டுவோம் என்ற வைகோவின் அந்தர்பல்டிகள் அவரை ஒரு அரசியல் கோமாளியாக்கியது.


இதற்கு மேலும் அவருடைய ஒரே நம்பிக்கை கலைஞருக்குப் பிறகு தன் பின்னால் , தி.மு.க தொண்டர்கள் வருவார்கள், தமிழக அரசியலில் தனக்கு மிகப்பெரிய இடம் கலைஞர் காலத்திற்குப்பிறகு கிடைக்கும் என்பதுதான். அதிலும் நடந்து முடிந்த 10 இடைத்தேர்தல்களை வைத்துப் பார்த்தால்,பாவம் ஒரு இலவு காத்த கிளி உருவாகிக்கொண்டுள்ளது என்றுதான் தெரிகிறது. கலைஞர் தேர்தல் பொறுப்புகளை ஸ்டாலினிடமும்,அழகியிடமும் ஒப்படைத்த பின்பு, ஜெ.விற்கே எதிர்காலம் இல்லை எனபது தான் உண்மை. தேர்தல்,ஜனநாயகப்படி நடந்தாலும் முடிவு என்னமோ பண ஆட்சிதான். கலைஞர் அவ்வளவு எளிதில் பணம் செலவிழிக்க மாட்டார்,ஜெ.வால் அதிகமாக செலவழிக்க முடியும் என்ற ஒரே காரணம் தான் ஜெ.இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம்.


ஆனால் , இப்பொழுது உள்ள சூழ்நிலையே வேறு. ஸ்டாலினின் நிர்வாகம் அதற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் அழகிரியின் தேர்தல் களப்பணிகள் ( அதிகம் பணம் செலவழிப்பது என்பது தான் தேர்தல் களப்பணியில் முக்கியமானது), இத்துடன் தற்போதைய தி.மு.க ஆட்சியின் மக்கள் நலத்திட்டப் பணிகள் எல்லாம் சேர்ந்து , இன்றைய நிலையில் தி.மு.கவிற்கு மாற்று எந்தக்கட்சி என்று தேடவேண்டியுள்ளது. இதே நிலை நீடித்தால், கலைஞருக்குப்பிறகு, தொண்டர்கள் அணி மாறுவதற்கு வாய்ப்பு எதுவும் இருப்பதாகப் படவில்லை.அதில் ஜெ.வை முதல்வராக்க சபதம் எடுத்து தெருத்தெருவாக சுற்றி வந்த வைகோ, இனிமேல் என்ன சொல்லி தனக்கு வாக்குகேட்பார், தனது கட்சியான ம.தி.மு.கவை, தன்னை நம்பி வந்த தொண்டர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கே விடை தெரியாத ஒரு பெரும் கேள்விக்க்குறி.
ஸ்டாலினின் அமைதியான அடக்கமான அரசியலுக்கும், அழகிரியின் அதிரடியான அரசியலுக்கும் கிடைத்துள்ள மக்கள் வரவேற்பை புரிந்து கொண்டால், கலைஞருக்குப் பின்னால் தன் பின்னே தி.மு.கவின் தொண்டர்கள் வருவார்கள் எனபது ஒரு நப்பாசை தான் என்பதும்,தான் ஒரு இலவு காத்த கிளிதான் என்பது வரப்போகும் காலம் வைகோவிற்கு உணர்த்தும்.

பின் குறிப்பு: வைகோவின் அரசியல் எதிர்காலம் பற்றியே இக்கட்டுரை. மற்றபடி கலைஞரின் குடும்ப அரசியலுக்கு நான் என்றுமே ஆதரவாளன் அல்ல.
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com