வெள்ளி, 17 செப்டம்பர், 2010

தனித்தமிழ் ஆர்வம்

1979 அழகப்பா பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது தான் என் வாழ்வில் ஒரு திருப்புமுனை நிகழ்ச்சி. யதேச்சையாக நடந்தது. வாழ்வின் மிக முக்கியமான முடிவுகள் திருப்பங்கள் எல்லாம் நாம் எதிர்பாராத நேரத்தில் நடப்பதுதானே..

அந்த வருட தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட சிறப்புச் சொற் பொழிவாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள். அது வரை அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது..யாரோ ஒரு பேச்சாளர் என்ற அளவில் தான் அவரை எதிர்பார்த்தேன். எனக்கு கொடுத்த பொறுப்போ அவரைக் கவனித்துக் கொள்ளல்..அவ்வளவே.

அவருடைய சொற்பொழிவுக்குப் பின்னர் நான்காமாண்டு மாணவர் கணேசன் அவர்கள் எழுதி இயக்கிய “புரொபஷர் துர்வாசர்” என்ற நகைச்சுவை நாடகம் நடப்பதாக இருந்தது. ஒரு பக்க விழா அழைப்பிதழில் சிறப்புச் சொற்பொழிவு என்று அவர் பெயரும, அதனடியில் புரொபஷர் துர்வாசர் என்ற நாடகம் நடை பெறுவதாக அச்சிடிக்கப்பட்டு இருந்தது.

மாலை அவரை அழைக்க சென்றவன் மரியாதைக்காக விழா அழைப்பிதழை அவரிடம் கொடுத்தேன்.அப்பொழுது எனக்கும் அவருக்கும் நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது:

”நண்பரே . என் சிறப்புரைக்கு அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சி?”
”புரொபஷர் துர்வாசர்” என்ற நகைச்சுவை நாடகம் நடக்கப் போகிறது..
”அப்படியா? அது ஏன் புரொபஷர் துர்வாசர் என்ற பெயர் வைத்துள்ளீர்கள்?
அது ஒரு நகைச்சுவை நாடகம். நகைச்சுவைக்காக அப்படி பெயர் வைத்துள்ளோம்.
அது சரி.. ஏன் பேராசிரியர் துர்வாசர் என்றால் நகைச்சுவையாக இராதா?


எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மேலும் அவர் சொன்னார். ”புரொபஷர் துர்வாசர்” என்று சொல்வதற்குப் பதில் பேராசிரியர் என்றால் சிரிப்பு வராது என்று உங்களுக்கு யார் சொன்னது.காட்சி அமைப்பும், நாடக வசனங்களும், அதற்கேற்ப நடிக்கும் நடிகர்களின் நடிப்பாற்றலிலும் நடிகர்களின் உடல் மொழியிலும் வராத நகைச்சுவை இந்த மாதிரி ஆங்கிலப் பெயர் கலப்புடன் இடுவதால் நகைச்சுவை வரும் என்பதில் ஏதும் உண்மை இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கச் சொன்னார்.

உண்மைதான்.அந்த உண்மை என்னை இன்றுவரை என் சிந்தனைகளை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது.அதன் பலனாகத்தான் எங்கெல்லாம் ஆங்கிலம் தவிர்த்து தமிழில் எழுத முடியுமோ அங்கெல்லாம் நான் தமிழிலேயெ எழுதப் பழகி இருக்கிறேன். வெளிநாட்டில் இருப்பதால் ஆங்கிலம் அதிகமாகப் பாவிப்பதால், சில சமயம் தவிர்க்க முடியாமல் ஆங்கிலம் பேசவேண்டியதாகி வருகிறது. வீட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழி

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஊழல் பெருகிக் கிடப்பதாகவும் தமிழ் மொழி வளர்ச்சி தடைப்பட்டு போனதாகவும் பரவலான கருத்து. இதில் நானும் உடன்படுகிறேன்.
இருந்தாலும் கழக ஆட்சிகளினால் மேடைத் தமிழும்,பேச்சுத் தமிழ், பத்திரிக்கைத் தமிழ் எவ்வளவோ மாறி உள்ளது என்பதை என்னால் பட்டியலிட்டு காண்பிக்க முடியும்.

இந்த மெட்ராஸ் ஸ்டேட்டை , தமிழ் நாடு என்று பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தது , இந்தக் கால இளைஞர்கள் எவ்வளவு பேருக்குத் தெரியும் எனத் தெரியவில்லை. அண்ணா தலைமையில் முதன் முதலில் அமைந்த தி.மு.க ஆட்சிதான் மெட்ராஸ் ஸ்டேட்டை, தமிழ் நாடு என்று மாற்றியது. காங்கிரஸ்காரன்களால் அதை மாற்றுவது கூட இந்திய இறையாண்மைக்கு கேடு என்று நினைத்த காலம்.

கீழே கிடக்கும் செய்தித்தாளைக்கூட எடுத்துப்படிக்கும் பழக்கம் உள்ள நான் மிகவும் வெறுத்து ஒடியது அன்றைய தினமணி நாளிதழின் தமிழ் படிக்க முடியாமல்.. ராஷ்டிரபதி அபேட்சகராக வி.வி.கிரி ,காவிரி நீர் தாவா , இன்று ரஜா, ஜில்லா கலெக்டர் என்று ஏகப்பட்ட சொற்கள் என்னவென்று அர்த்தம் தெரியாதவைகள்..இன்றைய நாளிதழ்களில் இவைகள் இல்லை என்பதே ஒரு பெரிய விஷயம்..

ராஷ்டிரபதி குடியரசுத்தலைவராகவும், அபேட்சகர் வேட்பாளராகவும்,ரஜா விடுமுறையாகவும் , கலெக்டர் ஆட்சியராகவும் மாறியது இந்த கழக ஆட்சியில் தான்

18 வருடங்களாக , வருடத்திற்கு ஒரு முறை நான் விடுமுறை போகும் போதெல்லாம், புழக்கத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் மறக்கப்பட்டு ஆங்கில வார்த்தைகள் புழக்கத்தில் வருவதை என்னால் கேட்க வருத்தமாக இருக்கிறது.

செம்மொழி மாநாட்டின் மூலமாக ஒரு நற்காரியம் நடந்துள்ளது என்றால், தமிழ் படித்தவ்ர்களுக்கு தமிழ் நாட்டில் அரசுப்பணிகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இது ஒரு முதற்படிதான்.. இன்னும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக செய்யவேண்டிய பணிகள் ஆயிரக்கணக்கில் உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் பெயர் வைக்க மாட்டென் என்று அடம்பிடித்த திரைஉலக வியாபாரிகள், கடந்த மூன்றாண்டுகளாக தமிழில் பெயர் வைக்கிறார்கள். அரசின் ஆதரவோடு தான் எதையும் செய்யமுடியும். குத்தகைகாரர் என்ற தமிழ் வார்த்தையும், அங்காடித் தெரு என்ற வார்த்தையும் பட்டி தொட்டியெல்லாம் பரவலாகச் சென்றதே..வாரணம் என்ற வாரத்தை பல ஆண்டு மறப்பிற்குப் பின் மக்களுக்கு தெரிய வந்ததே..அரசு உதவியுடன்..

2 லட்சம் வார்த்தைகள் கொண்ட மொழிவளம் உள்ள மொழி நம் தமிழ் மொழி. ஒரு 200 வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற வார்த்தைகளை சாகடிப்பது எந்த வகையில் நியாயம்?

நம் மொழியை,நம் மொழியில் உள்ள அற்புதமான வார்த்தைகளை நாம் பயன் படுத்தத் தவறினால்,அதை வேறு யார் பயன் படுத்துவார்கள். ஆகவே முடிந்த வரையில் தமிழ் மொழியைப் பயன்படுத்துங்கள்.. தேவையான இடத்தில் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்துங்கள் என்ற அன்பான வேண்டுகோளுடன்

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

12 கருத்துகள்:

jothi சொன்னது…

//நம் மொழியை,நம் மொழியில் உள்ள அற்புதமான வார்த்தைகளை நாம் பயன் படுத்தத் தவறினால்,அதை வேறு யார் பயன் படுத்துவார்கள். //

நிகழ்காலத்தில் புறக்கணிக்கப்படுகிற மொழிகளுக்கு எதிர்காலம் இல்லை,..தமிழனின் மக்கட்தொகை கூடிக் கொண்டுதான் போகிறது. ஆனால் தமிழைப் படிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை,..???

எதிர்விகிதம்

நல்ல பதிவு,.. தொடர்ந்து எழுதுங்க ஐயா

jay சொன்னது…

ஒவ்வொரு தமிழனும் தமிழ்மொழியை விட்டிலும், தமிழரிடம் பேசும் போதும் பயன் படுத்தினாலே தமிழ் தானாக வளரும். நல்ல பகிர்வு தோழரே!!

பெயரில்லா சொன்னது…

நல்ல இடுகை திரு. வெற்றிவேல்.

//ஒரு 200 வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற வார்த்தைகளை //

'வார்த்தை'க்கு மாற்றாக 'சொல்'லைப் பாவிக்கலாமே?

jay சொன்னது…

ஒவ்வொரு தமிழனும் தமிழ்மொழியை விட்டிலும், தமிழரிடம் பேசும் போதும் பயன் படுத்தினாலே தமிழ் தானாக வளரும். நல்ல பகிர்வு தோழரே!!

ஜெயா நல்லப்பன்.
மலேசியா.

தமிழ் சொன்னது…

அருமையான இடுகை

Thamizhan சொன்னது…

தமிழ்க் குடும்பங்கள் மாதம் ஒருமுறை என்று புத்தகக் குழுக்கள் வைத்து நடத்துவது சாலச் சிறந்தது.பேசக் கூச்சப்பட்டவர்களெல்லாம் ஓரிரு ஆண்டுகளில் திறமையான எழுத்தாளர்,பேச்சாளர்களாக மாறியதைக் கண்டு வியந்தோம்.

ஒப்பிலான் மு.பாலு சொன்னது…

தமிழை வளர்ப்போம் ...போற்றுவோம்...! அழகான தமிழில் பேசும் போது ஏற்படும் சந்தோசம் ஏதும் இல்லை இவ்வுலகில் ...! முடிந்த வரை பிற மொழிகளை கலந்து பேசுவதை தவிர்ப்போம்...!

பெயரில்லா சொன்னது…

சுந்தர் மதுரைதுரை

தமிழ் ஆர்வலர்கள் இருந்த பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்த்தொண்டு ஆற்றுவது எளிது ... ஆனால் தற்போது இத்தகைய தமிழ்ப்பற்று இருப்பதே அரிது. நற்தொண்டு ஆற்றி வருகிறீர்கள் ... வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு, வெற்றி....

சுப தமிழினியன் சொன்னது…

என்னை முன்பின் அறியாதவர்களோடு அறிமுகம் ஏற்படுகிற சமயங்களில் என் பெயரைக் கேட்ட பிறகு அவர்கள் முதலில் சொல்வது அழகான பெயர் என்பதாக பல முறை இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்த தமிழனாக இருந்துகொண்டு தமிழில் அழகான பெயர் இல்லாமல் போனால் இடித்துரைக்க வேண்டிய நிலைக்குப் பதிலாக புகழப்படுவதில் நான் உடண்பட மறுக்கிறேன். ஒவ்வொரு முறை அப்படிச் சொல்லப்படும் போதும் என்னை அவமானம் கொத்தி தின்னும். ஒரு மலையாளிப்பெண் என் பெயரைக் கேட்டதும் அவள் கேட்ட அடுத்த வார்த்தை, இதன் பொருளென்ன? பெயரின் பொருளைத் தேடும் அந்த மலையாளி எங்கே? பொருளோடு பெயரிடத்தெரியாத தாழ்ந்த தமிழன் எங்கே?

சோதிடப் பெயர் நம்பிக்கை அழியாத வரை அழகுத் தமிழ்ப் பெயர்கள் வர வாய்ப்பேது?

நம் பெயர் நாம் யார் என்பதைச் சொல்ல வேண்டாமா?

Ravichandran Somu சொன்னது…

நட்சத்திர வாரத்தில் மற்றுமொரு சிறப்பான கட்டுரை...

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி..ஜோதி,ஜெய்,பெயரில்லா சொன்னது,திகழ், தமிழன்,பாலு.சுந்தர் மதுரைதுரை, சுப.தமிழினியன்,
ரவிச்சந்திரன் ..வருகை புரிந்தமைக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும்..

Unknown சொன்னது…

தங்களின் தாய் மொழித்தொண்டுக்கு தலை வணங்குகிறேன்.தாங்கள் சொல்வதைத்தான் ஈழத்தமிழர்களாகிய நாம், ஏதிலிகளாக உலகெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டு செய்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் நம் தமிழ் வாழ ஒரு தாய் நாடு இல்லையே...! நம் தமிழ் அன்னை அரியணை ஏற, தாய் தமிழ் ஈழத்தை மீட்போம்! கை கொடுங்கள் தமிழ் உறவுகளே! என் பெயர் தேன்மொழி. கனடாவில் வாழ்கிறேன்.

கருத்துரையிடுக