சனி, 18 செப்டம்பர், 2010

தமிழகத் தொழிற் கல்வி மாணவர்களுக்கு....

(முன் குறிப்பு: படித்தது பொறியியல் பணிபுரிவது மேலாளராக.படித்த படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் தொடர்பாக ஒரு இடுகையாவது நட்சத்திர வாரத்தில் இருக்கட்டும் என்ற ஆசையில் எழுதியது.)

1979-80- ஐந்து வருட பொறியியல் படிப்பை நான்காண்டாக குறைத்தும் கல்லூரியின் நுழை வாயிலாக இருந்த புகுமுக வகுப்பை ரத்து செய்துவிட்டு உயர்நிலைக்கல்வியான +12யை பள்ளிகளில் அறிமுகப் படுத்திய காலம். அமரர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார்..அப்பொழுது எடுத்த முக்கிய முடிவு, தனியாரை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதிப்பது.

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி இரண்டுபட்டது.. தனியார் கல்லூரி துவங்க அனுமதி அளித்தால், தமிழகத்தில் தொழிற்கல்விகளுக்கான மரியாதை குறைந்துவிடும் என்று கிட்டத்தட்ட 90 விழுக்காடிற்கும் அதிகமான மாணவர்கள் அதற்கான போராட்டத்தில் இறங்கிய காலம். என் பெற்றோரும் இதற்குத் தான் ஆதரவு.ஆனால் நானும் இன்னும் சில பெரியார் தொண்டர்களும் தனியார் கல்லூரிகள் துவங்குவதற்கு ஆதரவு. எங்களைப் பொறுத்தவரை பெரியார் சொன்னதுதான் எங்களது ஆதாரம்.அவர் சொற்படி பொது மக்களுக்கு விரோதிகள் அட்டவணையில் முதலில் பார்ப்பணர்களும் அடுத்த்தாக படித்தவர்களும் வருவதால், நாங்கள் இதை ஆதரித்தோம். அப்போது தான் முதல் தலைமுறையில் படித்து வெளிவந்த அரசியல் புள்ளிகளும் அரசு அதிகாரிகளும் ஊழல் செய்யக் கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்த காலம். சென்னையில் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் பங்களா வாங்கவே அண்ணா நகர் என்று ஒரு தனி பகுதி உருவாகி வந்த சமயம். மேலும் படித்தவர்களுக்கென்று தனி மரியாதையும், அதுவும் பொறியியல், மருத்துவம் படித்தவர்களுக்கு தனியான கொம்பு முளைத்து உருவான புதிய மாயத் தோற்றம் தகர்க்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இருந்ததால், அரசின் இந்த கொள்கை முடிவை ஆதரித்தோம்.


இரண்டாவது காரணம், என் அண்ணன்களே இதில் பாதிக்கப்பட்டதால்..அன்று தமிழகத்தில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரியே 8 தான்.அதில் திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியும் ஒன்று. மொத்த இடங்களே 1600 தான். ஆக மொத்தம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1600 பேர்தான் பொறியியல் படிக்க முடியும் என்ற நிலை. அண்ணன்கள் இரண்டு பேரும் 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தும் பொறியியலிலோ, மருத்துவக் கல்லூரியிலோ இடம் கிடைக்கவில்லை.. (நான் எடுத்தது 200/200, 197/200,176/200- சுய தம்பட்டம்).ஒரு அண்ணன் முதுகலை கணிதம் படித்து சிறந்த கணிதப் பேராசிரியாராக பணி புரிந்து இப்பொழுது தான் ஒய்வு பெற்றார்கள்,.மருத்துவ கல்லூரி அனுமதி கிடைக்காத மற்றொரு அண்ணன், டெல்லி ஐ.ஐ.டியில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்கள்.


இந்த அளவு புத்திசாலி இளைஞர்களுக்கே தொழிற்கல்விகளில் இடம் கிடைக்காதது எனக்கு மிகவும் ஏமாற்றம். ஒரு ஆண்டில் மொத்தமே 1600 மாணவர்கள் தான் பொறியியல் மற்றும் அதற்கும் குறைவாகவே மருத்துவம் படிக்க இடம் உள்ளது என்பது அரசாங்கத்தின் அவல நிலை.இதற்கு ஒரே மாற்று தனியார்களை அந்தப் பணியில் ஈடுபடுத்துவது தான். எல்லாவற்றிற்கும் அரசையே கையேந்தி நிற்பது குறையும் என்ற எண்ணமும் தான் தனியார் தொழிற்படிப்புக்கான கல்லூரிகளை நாங்கள் அன்று ஆதரித்ததற்கு காரணம்


ஆனால் நாங்கள் நினைத்தது வேறு நடந்தது வேறு. அண்ணாமலைச் செட்டியார், அழகப்பச் செட்டியார்,கருமுத்து தியாகராஜா செட்டியார், பச்சையப்ப முதலியார்,எத்திராஜ் முதலியார், PSG குழுமம் போன்ற கல்வி வள்ளல்கள் இந்தப் பணியில் இறங்குவார்கள் என நினைக்க, இந்தப் பணியில் இறங்கி கல்லூரி ஆரம்பித்தவர்களோ கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும், முன்னால் கள்ளக் கடத்தல்காரர்களுமே.

எது எப்படியோ இன்று தமிழகத்தில் 80000 க்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க வழி உள்ளது. இதில் பாதி அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கல்லூரியில் சேரலாம் என்ற நிலை..இன்று உள்ள இந்த நிலைக்கு குரல் கொடுத்தவன் என்ற பெருமை எனக்கும் உண்டு.

80000 பொறியாளர்களில் திறமையானவர்கள் என்பது 18 விழுக்காடிற்கும் குறைவாகவே இருக்கிறது என்பது இன்றைய தமிழகத் தொழிற்கல்விக்கான பரிதாப நிலை.நான் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துச் சொல்லவில்லை. திறமைகளின் அளவுகோலின்படி. சொல்கிறேன்.

இங்கு நான் பேச வந்தது இதைப் பற்றித்தான்.

பொறியியல் அல்லது ஒட்டு மொத்தமாக தொழில் சார்ந்த பணிகளைப் பொறுத்தவரையில் Skilled Engineers என்று சொல்லக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இன்றும் பஞ்சமே..என்றும் பஞ்சமே.( எனக்கு தெரிந்த பொறியில் துறையை எடுத்துக் கொண்டு இந்த தகவல்)

நான் 25 வருடங்களுக்கும் மேலாக பணியில் இருக்கிறேன். இதுவரை 6 நிறுவனங்கள் மாறியுள்ளேன். 1988-92 WIPRO வில் சென்னைக் கிளையில் ஒரு பிரிவுக்கு நான் மேலாளராக இருந்துள்ளேன். அனைத்து நிறுவனங்களிலுமே தகுதியான, திறமை வாய்ந்த பொறியாளர்கள் பற்றாக்குறையே.. அந்தந்த வேலைக்கு தகுதியான வல்லுநர்களை தேடி கண்டுபிடிப்பது தான் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சவால்.மற்றொரு சவால் அவர்களைத் தக்க வைப்பது.

ஒரு சின்ன கணக்கு மூலம் புரிய வைக்கலாம். முதல் மாதச் சம்பளத்தை 100 மடங்காக மாற்ற எனக்கு 15 ஆண்டுகள் ஆனது. அதாவது 1983 –ல், 800 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தச் சம்பளத்தை 80000 ஆக மாற்ற எனக்கு 15 ஆண்டுகள் ஆனது..1998-ல் தான் முடிந்தது. எனக்குத் தெரிந்த என்னுடன் படித்த நண்பர்கள் 10 ஆண்டுகளில் 200 மடங்காகவும், அதையே 500 மடங்காகவும் மாற்றிக் காண்பித்தவர்களும் உண்டு.

முதல் வேலையை மட்டுமே நாம் படிக்கும் படிப்பு பெற்றுக் கொடுக்கும். அதன் பிறகு வளத்தை நோக்கிய ஏணியில் ஏற வேண்டியது அந்தந்த தொழில்நுட்ப பொறியாளர்களின் தொழில் திறமையைப் பொறுத்தே அமையும்.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், நாம் வாங்கும் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு இரண்டு முக்கிய காரணிகள் .முதலாவதாக நான் நினைப்பது தன்னுடைய தொழில் நுட்ப அறிவு (Technical skill) அதை எவ்வளவு சீக்கிரம் வளர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நாம் ஏணியில் ஏறலாம். இரண்டாவது முக்கியமான காரணி, நமது Communication Skill என்று சொல்லப்படும் தொடர்புக்கான ஆற்றல். இதில் பேசுவது , எழுதுவது, விவாதத்திறமை ,சக தொழிலாளிகளிடம் பழகுதல், என எல்லாமே அடங்கும்.

இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றையும் கல்லூரிப் பாடப்புத்தகங்களே கற்றுக் கொடுக்கும் என்று நினைக்ககூடாது, கல்லூரிப் பாடங்கள் தொழில் படிப்பை மட்டுமே கற்றுக் கொடுக்கும். இரண்டாவதாக நான் சொல்லும் தொடர்புக்கான ஆற்றல், நாமாக கற்றுக் கொள்வது. பெரும்பாலும் இதற்கான கல்வி பொது இடங்களில் தான் கிடைக்கும். கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் முதல் நாளில் இருந்தே இதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்வதில் முனைப்போடு இருக்க வேண்டும்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா விழாக்களிலும் பங்கெடுக்க முன் வரவேண்டும்.கல்லூரியில் நடக்கும் விழாக்கள்,சுற்றுலா போன்றவற்றை பொறுப்பெடுத்து ஆசிரியர் துணையோடு நடத்திக் கொடுத்தல் போன்ற ஒவ்வொரு நிகழ்வுமே அனுபவத்தைக் கொண்டு வரும்..எந்த அனுபவமும் வீணாகப் போவதற்கு வாய்ப்பு இல்லை.. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து 20/20க்கு என்று நேரத்தை விரயம் பண்ணாமல் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே பாதை அமைத்துக் கொள்ளுங்கள் என்று அன்புடனும் வயசும் அனுபவமும் உள்ளதால் உரிமையுடனும் வேண்டுகிறேன்..


பின் குறிப்பு: இந்த இடுகையே தேவையில்லை..இன்றைய இளைஞர்கள் உங்கள் தலமுறையை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று என் மகன்கள் மற்றும அவர்களின் தோழர் தோழிகளுடன் நன்கு பழக்கத்தில் இருக்கும் என் மனைவி சொல்கிறார். அப்படி இருந்தால் மகிழ்ச்சிதானே!

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

10 கருத்துகள்:

jothi சொன்னது…

//சென்னையில் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் பங்களா வாங்கவே அண்ணா நகர் என்று ஒரு தனி பகுதி உருவாகி வந்த சமயம்.//
அப்படியா ஐயா,.அந்த கால கட்டத்திலேயாவா?

//இந்தப் பணியில் இறங்கி கல்லூரி ஆரம்பித்தவர்களோ கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும், முன்னால் கள்ளக் கடத்தல்காரர்களுமே.//
அதற்குதானே அனுமதி நாங்க கொடுத்தோம்?

//பொறியியல் அல்லது ஒட்டு மொத்தமாக தொழில் சார்ந்த பணிகளைப் பொறுத்தவரையில் Skilled Engineers என்று சொல்லக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இன்றும் பஞ்சமே..என்றும் பஞ்சமே.(///
உண்மைதான்,.. கிடைத்த ஆளை வைத்து வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு,. வருகிறவனும் 1-2 வருடத்திற்குள் ஒடி விடுகிறான்

//இன்றைய இளைஞர்கள் உங்கள் தலமுறையை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று என் மகன்கள் மற்றும அவர்களின் தோழர் தோழிகளுடன் நன்கு பழக்கத்தில் இருக்கும் என் மனைவி சொல்கிறார்.//

உண்மைதான்,.. ஆனால் சின்ன வாய்ப்பாட்டில் முடிக்க வேண்டிய கணக்கிற்கும் "கால்குலேட்டர்" தேவைப்படுகிறது. எங்கு இடிக்கிறது ???


நல்ல பதிவு ஐயா (முடிந்த வரை தமிழ்),.. தொடர்ந்து இது போல் எழுதுங்கள்,.. இது போன்ற சிறப்பான பதிவுகளைத்தான் தேட வேண்டி இருக்கிறது,.

Thenammai Lakshmanan சொன்னது…

மிகச் சிறப்பான பகிர்வு வெற்றி..
என்ன்தான் புத்திசாலிகளாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு நம்துணை (guidnce)அவ்வப்போது தேவைபடுகிறது எனது உண்மை..

Ravichandran Somu சொன்னது…

சிறப்பான பகிர்வு...

//கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் முதல் நாளில் இருந்தே இதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்வதில் முனைப்போடு இருக்க வேண்டும்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா விழாக்களிலும் பங்கெடுக்க முன் வரவேண்டும்.கல்லூரியில் நடக்கும் விழாக்கள்,சுற்றுலா போன்றவற்றை பொறுப்பெடுத்து ஆசிரியர் துணையோடு நடத்திக் கொடுத்தல் போன்ற ஒவ்வொரு நிகழ்வுமே அனுபவத்தைக் கொண்டு வரும்..எந்த அனுபவமும் வீணாகப் போவதற்கு வாய்ப்பு இல்லை.//

எல்லா மாணவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரை.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சார்.

பெயரில்லா சொன்னது…

நல்ல கட்டுரை திரு. வெற்றிவேல்.
தங்கள் மனைவி குறிப்பிடும் இளைஞர்கள் 18% சதவிகித்தில் வருவார்களோ என்னவோ?

இன்றைய இளைஞர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதில் உள்ள பேரார்வம் அதற்கான உழைப்பில் இருப்பதில்லை. BE Computer Science படித்த இளைஞனிடம் காணாத அறிவுக் கூர்மையை B.Sc படித்த இளைஞனிடம் சில நேரங்களில் கண்டிருக்கிறேன். Analytical skills, communication skills (speaking, email writing, documentation) are lacking with most of the graduates.

Unknown சொன்னது…

நல்ல கட்டுரை நண்பரே தங்கள் பகிர்வுக்கு நன்றி

SRK சொன்னது…

இன்றைய இளைஞர்கள் புத்திசாலிகளாக இருப்பினும், வரலாறு அறிவது முக்கியம். அதற்காக இந்தக் கட்டுரை அவசியமே.

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ஜோதி,தேனம்மை,ரவிச்சந்திரன்,சிநேகிதன் அக்பர்,பெயரில்லா சொன்னது,நந்தா ஆண்டாள் மகன்,SRK. வருகை புரிந்ததற்கும், கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கும்

vinthaimanithan சொன்னது…

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் ஒரு அற்புதமான இடுகை. பொறியியல் கல்லூரிகள் என்றில்லை... பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மாணவர்களை அரைகுறையாகச் செதுக்கப்பட்ட களிமண் சிற்பங்களாகத்தான் வெளியே அனுப்புகின்றன

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி விந்தை மனிதன்..தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்..

கருத்துரையிடுக