புதன், 15 செப்டம்பர், 2010

முள்ளிவாய்க்கால் அவலம் – மலையாளிகளின் துரோகம்

முன்பொரு காலமிருந்தது
ஈழத்தில் அழுத கண்ணீர்
இங்கே பெருக்கெடுத்து
தெருவெல்லாம் ஒடி
தீயை உசுப்பிவிட்ட காலம்..

முன்பொரு காலமிருந்தது.

......

குப்பியணிந்த சிறுவர்கள்
ஒருகையில் துவக்கும்
மறுகையில் புல்லாங்குழலுமாய்
புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட காலம்

தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை

முழக்கங்களின் கவர்ச்சியில்
மூழ்கிக் கிடந்த காலம்

முன்பொரு காலமிருந்தது

கேப்றன்,கேணல்
தேசியத் தலைவர் மாவீரர்
பட்டங்களே அடையாளமாய்
மாறிவிட்டிருந்த காலம்..

முன்பொரு காலமிருந்தது

செய்தியாளர் சந்திப்புக்கு
உலகமே திரண்டு வந்து
முண்டியடித்து நினற
அப்படியொரு காலமிருந்தது.... ரவிக்குமார் எம்.எல்.ஏ.


1983 கருப்பு ஜூலை என் வாழ்நாளில் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திச் சென்ற மாதம்.23வயசு எனக்கு.அதுவரை இலக்கியம்,திரைப்படம் என்று மட்டுமே இருந்த என்னைப் புரட்டிபோட்ட மாதம். என் தொப்புள் கொடி உறவுகள் கொலை செய்யப்பட்டு, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு ,போராளிகளின் கண்கள் பிடுங்கப்பட்டு மிகக் கொடுமையான சிங்கள வன்முறைக்கு ஆளான நேரம்..அதுநாள்வரை இலங்கை வானொலி நிலையம், ஸ்ரீலங்கா டீத்தூள், ராணி சோப் என்று மட்டும் நான் அறிந்த இலங்கை எனக்கு வேறு முகம் காட்டிய மாதம்..

அன்றிலிருந்து மே 17,2009 -முள்ளிவாய்க்கால் பேரழிவு நடைபெற்ற தினம் வரை, என் உடல் , உணர்வு அனைத்திலும் நிரம்பி இருந்த ஒரு கருத்தாக்கம், தமிழீழம்.அன்றிலிருந்து என் வாழ்க்கை முறையையே, என் அன்றாட நிகழ்வுகளைக்கூட, தமிழீழம் நோக்கிய பயணத்திற்காகவே மாற்றி அமைத்துக் கொண்டேன்.

1992 வரை இந்தியாவில் நான் இருந்த காலம் வரை ஈழத்திற்காக எந்தவொரு போராட்டம் என்றாலும் நானும் இருப்பேன்..கட்சி சார்பற்று அனைத்து போராட்டங்களிலும் நான் இருந்தேன்..நான் தி.மு.க சார்பு உள்ளவன் என்று என்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை நான் மதிக்க கற்றுக்கொடுத்தது ஈழப் போராட்டம் தான்..தமிழக அரசியலில் என்னால் அறவே வெறுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஈழப்போராட்ட ஆதரவு காரணமாக என்னால் அதிகம் கவரப்பட்டார்.. அந்த அளவுக்கு ஈழம் கிடைக்குமென்றால் எந்த சமரமும் செய்து கொள்ளலாம் என்று எனக்குப் பட்டது..


1987 செப்டம்பர் 26 . என் பாசத்துக்குரிய தோழர் தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அன்று சொல்ல முடியாத சோகத்துடன், வீட்டை விட்டு வெளியில் செல்ல மனமில்லாமல் இருந்த பொழுதுதான், மருத்துவமனை சென்றிருந்த என் மனைவி, தான் முதல் முதலாக கருவுற்ற செய்தி கொண்டு வந்து சந்தோசத்தில் என் முன்னர் நின்றார்..அப்பொழுது நான் என் மனைவியிடம் சொன்னது..ஆண் குழநதை என்றால் திலீபன் என்று பெயரிடுவோம்.. தமிழீழம் என்ற எனது வேட்கையை அணைக்காமல் இருக்க என் வீட்டுலேயே திலீபன் வளரவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவே அநதப்பெயரை என் குடும்ப உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புகளோடு , அதே சமயம் மனைவியின் ஆதரவோடு என் மூத்த மகனுக்கு திலீபன் என்ற பெயர் வைத்தேன்..


தமிழீழம் என்பதை ஈழவிடுதலையாக மட்டும் நான் பார்க்கவில்லை..நாடான்ற தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்பது இன்றும் என்றும் எனது ஒரே கனவு.ஒரே பேராசையும் கூட..

28 வருஷம் சுமந்த கனவு..

விடுதலைப்புலிகளின் மேல் எனக்கும் விமர்சனங்கள் உண்டு..இருந்தாலும் களத்தில் நின்றவர்கள் அவர்கள் மட்டுமே. கடைசிவரை மரபு வழிப் போரில் இருந்து கொரில்லாப் போருக்குத் திரும்பாமல், உயிர் போகும் வரை களத்தில் நின்றவர்கள் எம் விடுதலைப் போராளிகள். அவர்களுக்கு வீர வணக்கம்..

விடுதலைப் போராளிகள் தான் மரபு வழிப்போரில் இருந்தார்களே தவிர, இந்திய அரசு பின்னனியில் இருந்து நடத்திய இந்தப் போரில் சிங்கள ராணுவத்தால் அனைத்து மனித உரிமைகளும் மீறப்பட்டன.2008 ஆண்டு பின் பகுதியிலிருந்து 2009 மே18 வரை நடந்த அனைத்து அத்துமீறல்களும் ”யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்” (யு.டி.எச்.ஆர்)என்ற அமைப்பால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.முடிந்தால் பார்க்கவும் நெஞ்சு வெடித்துவிடும்.


2008 அக்டோபர் முதற்கொண்டு தொடர்ந்து, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று தமிழகம் முழுதும் போராட்டங்கள் பலவழிகளில் தொடர்ந்தும் , அதன் உச்சகட்ட நிகழ்வாக தியாகி முத்துக்குமரன், தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டும் அதன்பிறகு 16 உயிர்கள் தீக்கிரையாகியும் , ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் தாய்த் தமிழர்களாகிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாத வேதனை, நம் கையாலாகத்தனம், என்னை என் சாவு வரைத் துரத்தும்.

கடைசிவரை 6 கோடித்தமிழர்களின் கூக்குரலுக்கும், போராட்டங்களுக்கும், தீக்குளிப்புக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசு நடத்திய இந்த இன அழிப்பு மனதால் கூட மன்னிக்க முடியாதது..தரை,வான்,கடல் என் முப்படைகளும் இருக்க, வங்கி,அஞ்சல்,மருத்துவம் என அனைத்துச் சேவைகளுடன் நடைபெற்ற ஒரு தமிழ் அரசை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்திய காங்கிரஸை என் ஏழேழு ஜென்மத்திலும்(அப்படி ஒன்று இருந்தால்) மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. காதுகளை மறைத்துக் கொண்டு தலைப்பாகையுடன் தமிழக எம்.பிக்கள் முன் மன்மோகன் அமர்ந்திருக்கும் புகைப்படம் எனக்கு சொல்லும் சேதி நம் குறைகள் எதையுமே காதில் வாங்கக்கூடாது என்பதாகத் தான் எனக்குப்பட்டது.நமது அழுத்தத்தினால் இலங்கை சென்ற அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப், அங்கு சென்று போரில் எவ்வளவு தூரம் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது என்று கேட்டு, அதற்கு தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்கு கொடுத்து வந்தது முழுக்க முழுக்க நம்பிக்கைத் துரோகம்.


இதற்கு சோனியா தலைமையிலான காங்கிரஸ்தான் முழுக்காரணம் என்றாலும், உண்மையான காரணம் இந்திய வெளியுறவுத்துறையே.. என்னதான் இந்தியா ஒரு தேசம், ஒருமைப்பாடு என் உயிர் என்றெல்லாம் தமிழர்கள் ஒன்றிணைந்தாலும், மலையாளிகளுக்கு என்னமோ அதல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இங்கிலாந்திற்கு முதல் இந்தியத்தூதுவராகப் பணியாற்றியவரும் அதன் பின்பு ஐ.நாவிற்க்கான இந்தியக்குழுவிற்கு தலைமை வகித்த வி.கே.கிருஷ்ணமேனன் இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் முன்னின்றவர்.. அவர் காலத்தில் வெளியுறவுத் துறையில் நுழைந்த மலையாளிகள்,அந்தத் துறையையே, ஏதோ கேரள அரசின் ஒரு பகுதியாகத் தான் இன்று வரை பார்க்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறையை இந்திய மலையாளிகள் துறை என்று பெயர் மாற்றம் செய்யலாம். ஐ,நாவில் இருந்த சசி தரூர், இன்றும் உள்ள விஜய் நம்பியார், எம்.பி.நாராயணன்.. சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலராக இன்று இருக்கும் நிரூபமா அனவருமே மலையாளிகள்.. இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சரான ஏ.கே.அந்தோனி ஆகியவர்கள் ராஜபக்‌ஷேவுடன் இணைந்து நடத்தியது தான் இந்த இன அழிப்புப் போர்.. இந்திய இறையாண்மை, இந்திய அரசின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் சொல்லி முதலில் இந்திய உளவுத்துறை”ரா” வால் விடுதலைப் புலிகளை முடிக்கப் பார்த்த இவர்கள் இன்று, ராஜீவை இழந்த சோனியா,ராகுல் காலத்தில் தான் இதை நடத்தி முடிக்க முடியுமென்று திட்டமிட்டு முடித்தது இந்த மலையாளிக் கூட்டணிதான்.இதற்கு இங்குள்ள ராஜபக்‌ஷேவின் தூதுவர் இந்து ராம் ,சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் துணை..

தமிழகத்தில் இருந்து அமைச்சர் பதவி கேட்போர், பணம் பண்ணும் துறைகளையே கேட்டுப்பெறாமல், உண்மையிலேயே உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், முதலில் கேட்டுப் பெறவேண்டியது இந்த வெளியுறவுத் துறையே. வெளியுறவுத்துறை கைக்கு வந்தாலும் உடனடியாக மாற்றம் கொண்டு வரமுடியாது. துறை முழுதும் களை எடுக்கப் பட வேண்டும். உண்மையான இந்திய பாதுகாப்பு எது என்று தெரியப்படுத்த வேண்டும். கிருஷ்ண மேனன் காலத்திலேயே அவரது தவறான கணிப்பால் தான் சீனா நம்மீது படை எடுத்தது. அந்தத் துறையின் தவறான போக்கால் தான் இந்தியாவின் நாலு பக்கமும் பாதுகாப்பு பலவீனப்பட்டு உள்ளது. இதுவரை பாதுகாப்பாக இருந்த தென்னிந்தியாவின் பாதுகாப்பையும் இப்போது கேள்விக்குரியதாக்கி இருக்கிறார்கள்.
வெளியுறவுத்துறையை கேட்டுப் பெற்று தேவையான மாற்றங்கள் செய்தால் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து இந்தியர்களுக்கும் அது தான் பாதுகாப்பு. இந்தியாவிற்கும் பாதுகாப்பு.

அப்பொழுதுதான் உலகமெங்கும் வாழ் தமிழர்களுக்கு மட்டுமில்லை.. தினந்தோறும் பிழைக்கப்போய் குண்டடிபட்டு வந்து நிற்கும் என் சொந்த மண்ணைச்சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் உயிருக்கும் அது தான் பாதுகாப்பு..

அதுநாள்வரை உலகத்தமிழர்களுக்கும் மட்டுமல்ல..என் மீனவத் தோழர்களுக்கும் நாதியில்லை என்பது தான் உண்மை.

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

28 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

தமிழ்,தமிழினப் பற்று என்றாலே அழிக்க நினைக்கும் புதுடில்லிதான் நமது முதல் எதிரி என்று தமிழர்கள் உணரவேண்டும்.இந்தியா என்று சொல்லி நம் கண்களை மூடி மறைக்கும் எத்தர்களுக்கு எத்தனை மீனவர்கள் கொல்லப் பட்டார்கள் என்பதே தெரியாதா?அவர்கள் இந்தியர்கள் அல்லர்,தமிழர்கள் என்று தானே நினைத்தனர். தமிழின உணர்வாளர்கள் காங்கிரசைப் புதைக்க வேண்டும். காமராசரை ஓரங்கட்டி அவமானப் படுத்தியவர்கள்தான் புதுடில்லிக் கும்பல்.அதற்குப் பல்லக்கு தூக்குபவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.ஈழ்த் தமிழரின் படுகொலை உலகத் தமிழரின் முகத்தில் குத்தப்பட்ட அவமான முத்திரை.முத்திரை குத்தியது காங்கிரசும்,சோனியாவுந்தான்.

பெயரில்லா சொன்னது…

உண்மையை அழுத்தமாக பதிவு செய்து இருகிறீர்கள் .....தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாதது ஒரு காரணம் தான் ...அதைவிட முக்கிய காரணம் மலையாளிகளின் துரோகம்தான் தான் ....! நமக்கும் ஒரு காலம் வரும் .!

raja சொன்னது…

எம்மக்களும் குழந்தைகளும் மாண்டப்பின்னர்...இந்தியா..எக்கெடு கெட்டுபோனால் எனக்கென்ன..இப்பொழுது காஷ்மீரில் நடக்கும் கூத்துகளை நான் ரசித்து பார்க்கிறேன்.. அந்த அளவுக்கு இந்தயாவின் எதிர்பாளானாக்கியது.. இந்தியா என்கிற நாட்டின் படுபாதகமான துரோகம்.. இந்தியத்தலைவர்கள் எவன் இறந்தாலும் என் வீட்டிலும் மனதிலும் விசேஷ நாட்கள் அவை.. கருணாநிதி உட்பட..

Thenammai Lakshmanan சொன்னது…

சேலத்தில் ரயில்வே ஸ்டேஷன் சொல்லும்.. அதன் அதிகாரம் பாலக்காட்டில் இருந்ததா., அல்லது மத்திய ரயில்வேயிடம் இருந்ததா என்று..

நல்ல பகிர்வு வெற்றி..

ஜோ/Joe சொன்னது…

உங்கள் உணர்வோடு ஒன்றுபடுகிறேன்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக விரிவான, தெளிவான அலசல் சார்.

உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி!!தமிழன்,பெயரில்லா சொன்னது,ராஜா, தேனம்மை,ஜோ ,சிநேகிதன் அக்பர் ..வந்ததற்கும் வாழ்த்தியதற்கும்..

அ.வெற்றிவேல் சொன்னது…

////இந்தியா..எக்கெடு கெட்டுபோனால் எனக்கென்ன..இப்பொழுது காஷ்மீரில் நடக்கும் கூத்துகளை நான் ரசித்து பார்க்கிறேன்.. அந்த அளவுக்கு இந்தயாவின் எதிர்பாளானாக்கியது.. இந்தியா என்கிற நாட்டின் படுபாதகமான துரோகம்.. இந்தியத்தலைவர்கள் எவன் இறந்தாலும் என் வீட்டிலும் மனதிலும் விசேஷ நாட்கள் அவை.. கருணாநிதி உட்பட..////

ராஜா: உங்கள் கோபமும் அறச்சீற்றமும் எனக்குப் புரிகிறது..ஆனால் தங்கள் கருத்து எனக்கு உடன்பாடானது அல்ல.. தேசத்தை நினைக்க வேண்டாம். காஷ்மீரில் பாதிக்கப்படுபவர்களும் நம்மைப் போன்ற சகோதரர்கள் தானே..அதே மாதிரி, தமிழின விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நாம் அணி சேரலாமே . அதைவிட்டு அவர்கள் ஒழிவது எவ்வகையில் நம் பிரச்ச்னை தீர வழி வகுக்கும்.. இந்தியா மட்டுமல்ல..எந்த நாட்டிலும் உள்ள மனித உரிமை மீறல்களுக்கும் அதிகார அச்சுறுத்தலுக்கும் நம் எதிர்ப்பை காண்பிப்போம்..

மனிதம் தான் முக்கியம்..பழி வாங்குவது என்பது பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியாது

அன்புடன் வெற்றி

அ.வெற்றிவேல் சொன்னது…

@தேனம்மை..இந்த மாதிரி விஷயங்களை பெரும்பாலான பெண்கள் கண்டு கொண்டு இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். வெளி உலகப் பார்வை தங்களுக்கு இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது..வாழ்த்துகள் தேனம்மை இந்த அளவு பிரச்னையின் தீவிரத்தை தாங்கள் உணர்ந்ததற்கு

சீ.பிரபாகரன் சொன்னது…

இன்றைக்கு இந்தியாவை தவறாக வழிநடத்திக்கொண்டிருப்பவர்கள் மலையாளிகள்தான். தமிழ்நாட்டுத் தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்களாக இருக்கும் வரை சிங்களன் கூட தமிழ்நாட்டுக்கு வந்து தமிழனை அடித்துவிட்டுப் போவான். கருணாநிதியும் சிங்களனிடம் காசு வாங்கிக்கொண்டு சொக்கத்தங்கம் சோனியாவிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருப்பார்.

subra சொன்னது…

உங்கள் உணர்வோடு ஒன்றுபடுகிறேன்

Ravichandran Somu சொன்னது…

உண்மையை உரக்கமாக சொல்லியிருக்கீர்கள்...

பெயரில்லா சொன்னது…

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் அறிக்கையை பார்க்க சொன்ன நீங்கள் அங்கே பதியப்பட்ட புலிகளால் படுகொலை செய்யபட்ட ஏராளமான பொதுமக்கள், தமிழ் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், பற்றி பொருடபடுத்தாதது கவலையானது.

அ.வெற்றிவேல் சொன்னது…

@பெயரில்லா சொன்னது.. இங்கு நான் பேச வந்தது புலிகளின் செயற்பாடுகள் பற்றி அல்ல..பிரச்னையை அது வேறு பக்கம் செலுத்திவிடும்.அது விடுதலைப் புலிகள் இல்லை என்றாலும், இந்திய வெளியுறவுத் துறை இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதைத் தான் இங்கு பேசும் பொருளாக வைத்துள்ளேன். ஆக்வே தான் புலிகளின் மேல் எனக்கும் விமர்சங்கள் உண்டு என்று தெளிவு படுத்தி உள்ளேன்

அ.வெற்றிவேல் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ரவிச்சந்திரன்,சுப்ரா,சீ.பிரபாகரன் பெயரில்லாத சொன்னது,வருகை புரிந்ததற்கும், வாழ்த்தியதற்கும்..

பெயரில்லா சொன்னது…

aRivarntha katturai nanri

raja சொன்னது…

காஷ்மீரில் பாதிக்கப்படுபவர்களும் நம்மைப் போன்ற சகோதரர்கள் தானே......காஷ்மீர் மட்டுமல்ல.. செர்பியா,பாலஸ்தீனம்,ஆப்கானிஸ்தான், ஈரான்..இருக்கும் விடுதலைவீரர்கள் எவரும் என் சகோதரர்களே.. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உரக்க கூவியதே என் சமுகம்..எங்கள் இனத்தின் குண்டுபோட்டபொழுது.. காஷ்மீர் முதல் பக்கத்தில் இருக்கும் கேரளா வரை மௌனம் காத்தன.. அப்புறம் எப்படி அவர்கள் எங்களுக்கு சகோதரனாக முடியும்.. குறைந்தபட்ச கருத்துரைக்கே நீங்கள் பதில் சொல்கிறீர்கள்... எங்கள் மக்கள் குண்டு விழுந்து சாகடிக்கபட்டபொழுது ஒரு சிறு கண்டனம் கூட .. இந்தியமுஸ்லிம் அமைப்புகளிலிருந்தோ..மற்ற மொழி பேசுபவர்களிடமிருந்தோ எழவில்லை.. ஆனால் எங்களுக்கு மட்டும் இந்திய சகோதரத்துவம் வேண்டும்.. இன்னும் இந்த இந்தியா நம்ப சொல்றீங்க.. பெரியார் தலைப்பாட அடிச்சிகிட்டாரு.. வெள்ளைக்காரன் கிட்ட .. எங்களுக்கு தனியா நாட்ட கொடுத்திடுங்கன்னு...அந்த பரங்கி எல்லாத்தையும் மொத்தமா கட்டி பார்ப்பானர்களுக்கு எழுதிகொடுத்துட்டு போயிட்டான் இப்பொழுது மொழி,தன்மானம்,பண்பாடு,தொன்மைகள் எல்லாவற்றையும் இழந்து தலை இல்லா முண்டமாக அலைகிறது.. தமிழ்சமுகம்.

vanathy சொன்னது…

ஈழப்போரின் முடிவும் மக்களின் அழிவும் துயரங்களும் ஈழத்தமிழரின் உள்ளங்களில் ஆறாத வடு.உலகத் தமிழருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இயலாமையின் உச்சக்கட்டம், உலக நாடுகளுக்கும் மனித உரிமை பேசும் நிறுவனங்களுக்கும் ஐ நா சபைக்கும் மனச்சாட்சியை உலுக்கும் சம்பவம்.
நவீன உலக வரலாற்றில் ஒரு இனம் , ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட்ட போது சொல்லணா துயரத்தில் மிதந்த போது கொத்து கொத்தாக உயிர்கள் பறிக்கப் பட்டபோது உலகமே அதை தடுக்க ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது என்பது மனிதத்தின் தோல்வி.
மலையாளிகளின் வெளியுலக கொள்கை மட்டும்தான் இதற்க்கு காரணமா?
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அதை விட இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.
இன்னொரு இனத்துக்கு இப்படி நடந்திருந்தால் அந்த இனத்தின் மக்களும் தலைவர்களும் இதை ஒரு வேளை தடுத்திருக்க முடியும் விடுதலை பெறத் தகுதி இல்லாத இனமாக ,அசமந்த மனிதர்களாக நாங்கள் மாறிவிட்டோமா என்று எனக்கு தோன்றுகிறது...
தோல்வி அடைந்த நாடுகள் என்று ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் இடுவார்கள் தோல்வி அடைந்த இனங்கள் என்ற பட்டியல் போட்டால்
தமது தாய் மொழியையே பேச கூச்சப்படும் ,தன்னம்பிக்கை இல்லாத, போராட்ட குணம் மழுங்கிய ,சுய நலத்தில் ஊறிய சுரணை கெட்ட எமது தமிழ் இனத்தை அந்தப் பட்டியலில் முதலில் போடலாம்.போரின் தோல்வி பற்றி நான் சொல்லவில்லை ஒட்டுமொத்த இனத்தின் தார்மீகத் தோல்வியை நான் சொல்கிறேன்.
இந்த இனத்துக்காக உயிரை விட்ட போராளிகள் , போரில் உயிர் இழந்த மக்கள் ,முத்துக்குமரன் போன்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் எல்லோரும் தகுதியற்ற இந்த இனத்துக்காக தங்கள் வாழ்க்கையையே கருக்கி விட்டார்களே என்று மனம் வேதனையில் தவிக்கிறது.
--வானதி

raja சொன்னது…

வானதி உங்களது ஒவ்வொரு வார்த்தைக்கும்..எழுத்துக்கும் எனது மரியாதைகள் வானதி...மிக சரியாக துல்லியமாக கூறியிருக்கிறீர்கள்.

Aarthi சொன்னது…

I am very ashamed Chithappa to be saying this but I come from a generation that can hardly understands or reciprocate your emotions. Yes, what happened in Sri Lanka is horrible.It's sad that I know very little about Eelam's history but am pretty sure most people my age know even less. Well...only time can heal...and bring justice to the affected Tamils.If there is anything you think we can do please let me know.

Bibiliobibuli சொன்னது…

@ Aarthi,

//If there is anything you think we can do please let me know.//

தந்தை பெரியார் சொன்னது, அடிமைகள் அடிமைகளுக்கு உதவ முடியாதாமே?

ம.தி.சுதா சொன்னது…

ஐயா எங்கள் உள்ளத்தை வெளிச்சத்தில் காட்டியிருந்திர்கள்... நன்றி.. உங்கள் துணிச்சல் பாராட்டத்தக்கது... இதை நான் உரைக்கக் காரணம் இறுதிவரை வன்னியில் இருந்து வந்தவன்... கறுப்பு யூலையின் பொது தங்கள் வயது சொன்னீர்கள்... அந்த வயதில் தனி நாட்டு உணர்வு வராத சிலர் இதை சாக்காக வைத்து வெளிநாட்டில் தஞ்சம் கோரி சொகுசாக உழைத்து விட்டு ஊடு பார்த்து இங்கு வந்து ஒரு கல்யாணம் செய்து விட்டுப் போய் தம் பிள்ளைகளை வளர்த்தெடுக்க.. அடுத்த சந்ததியான நாம் ஒருவரின் உணர்வை மதித்து போய் இன்று வாழ்விழந்து நடு வீதியில் நிற்கிறோம். இப்போதும் விட்டார்களா போர் வேண்டுமாம்.. ஆனால் தம்பிள்ளைகளை விடமாட்டார்கள்... ஈழத்தில் நாங்கள் சாக வேண்டியது சிலர் அதில் குளிர்காய வேண்டியது... அவர்களின் விமர்சனப் பொருள் தான் நாங்கள்... இன்னும் முகாமில் இருக்கும் என் சகோதரர்களை இவர்களுக்கு தெரியாதா..?... இப்படியானவர்கள் ஒரு உதவி செய்யட்டும் என் மருத்தவ மேற்படிப்பிற்கு 45 லட்சம் இருந்தால் போதும்... அதை கடனாகத் தரட்டும் பார்ப்போம். அப்போது இவர்களின் ஈழப்பற்றை நம்புகிறேன்... மேலும் அறிய என் தளத்திற்கு வந்து வன்னி என்பதை சொடுக்குங்கள்....
என் ஓடையில் நனைவதானால் என்மேல் சொடுக்கவும்

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ராஜா வானதி ஆர்த்தி ரதி & மதி சுதா ..வருகை புரிந்ததற்கும் கருத்து தெரிவித்தமைக்கும்

வெற்றி

அ.வெற்றிவேல் சொன்னது…

@ ரதி & ஆர்த்தி//தந்தை பெரியார் சொன்னது, அடிமைகள் அடிமைகளுக்கு உதவ முடியாதாமே?//// அதுதானே உண்மை. அதுதானே ஈழப் போரின் போது நடந்த்து..

Bibiliobibuli சொன்னது…

///அடிமைகள் அடிமைகளுக்கு உதவ முடியாதாமே?//// அதுதானே உண்மை. அதுதானே ஈழப் போரின் போது நடந்த்து..//

நன்றி. இந்த பதிலைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். இந்த உண்மை பலருக்கு கசப்பானது. தமிழ்மாட்டு தமிழர்கள் அடிமைகளா என்று சண்டைக்கு வரலாமில்லையா?

அண்ணாமலை..!! சொன்னது…

தங்களுக்கு நன்றிகள்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை
உண்மையை உரக்கச் சொல்லுங்கள்.

கருத்துரையிடுக