ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

தொட்டுத் தொடரும் என் எழுத்துலகம்
நான் ஒன்றும் பிரபலமான பதிவர் இல்லை..அனைத்து தளங்களுக்கும் சென்று படிப்பதோடு சரி. பின்னூட்டங்களும் அதிகமாகப் போட்டது கிடையாது.. ஒரு வருடம் கூட நிறையாத வலைப்பதிவர் நான். இந்த 8 மாதங்களில் நான் எழுதியது மொத்தமே 21 கட்டுரைகள் தான். இருந்தும், எந்தப் பின்புலமும் இல்லாத என்னை நடசத்திரப் பதிவராக தேர்ந்தெடுத்து என்னையும் என் எழுத்தையும் கௌரவப்படுத்தியுள்ள தமிழ் மணத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளோடு ஒரு வாரம் என் கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..ஆதரவிற்கு நன்றிகள்.

வலைப்பதிவுக்குத் தான் நான் சின்னவன்., புதியவன்..ஆனால் தமிழ் அச்சு ஊடகங்களுக்கும் எனக்குமான தொடர்பு 30 வருஷங்களுக்கும் கொஞ்சம் அதிகமானது.. இன்றைய ஆனந்தவிகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்திற்கு முன்னோடியான வார இதழ்,1980-ல் திசைகள் மூலமாக திரு.மாலன் அவர்களால் தழிழ் அச்சு ஊடகத்திற்கு அறிமுகம்..


மிகவும் சின்ன வயதிலேயே எனக்கும் புத்தகங்களுக்குமான உறவு ஆரம்பித்துவிட்டது.பெரிய குடும்பத்தில் 11 குழந்தைகளுக்கு நடுவில் ஏழாவதாக பிறந்ததால், வீட்டில் பேசுவது என்பதே அரிது.. அதனால் பொது இடங்களில் ஏற்பட்ட கூச்சம் காரணமாக புத்தகம் பக்கம் ஒதுங்கினேன்.. அப்பொழுது ஒன்றிணைந்த ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகம் சிவகங்கையில் இருந்தது. அதுதான் என்னை வளர்த்தெடுத்தது.. நண்பர்களுடன் சேர்ந்து எல்லா ஆண்டு விடுமுறையிலும் கையழுத்துப் பிரதிகள் நட்த்துவது தான் எங்கள் பொழுதுபோக்கு..கூட்டல், நண்பன், மணியோசை, கேள்வி ., இவை எல்லாம் நானும் நண்பர்களும் சேர்ந்து நடத்திய கையெழுத்து இதழ்கள்..அன்றைய கல்கண்டு, குமுதம் இதழ்களைப் பார்த்து அதன் பாதிப்பில் எழுதியவை..


என் பள்ளிப்பருவதில் சிவகங்கையில் தெருவுக்கு தெரு படிப்பகங்கள்.. அரசியல் சினிமா பற்றிய பேச்சுகள் இவைதான் என்னை அதிகம் கவர்ந்தவைகள்.. அழகப்பா பொறியியல் கல்லூரியில் சேர்ந்து அங்கு கிடைத்த நண்பர்கள் வட்டம் என் அறிவை விசாலாமாக்கியது..

தமிழ் சினிமாவில் அது ஒரு பொற்காலம்.. பாரதிராஜா, மகேந்திரன்,பாலு மகேந்திரா, ருத்ரய்யா போன்றவர்கள் இயங்கி வந்த பொற்காலம். குடும்ப சென்டிமெண்ட் படங்கள் எடுத்து வந்த பீம்சிங் கூட ஜெயகாந்தன் கதையைப் படமாக்க வேண்டிய கட்டாயம்.. இளையராஜா என்ற மாமேதை மேலே வந்து கொண்டிருந்த காலம். சிவாஜி, எம்.ஜி.ஆருக்குப் பிறகு அடுத்த தலமுறையில் ரஜினி,கமல் பெரும் நடிகர்களாக உருவாகிக் கொண்டிருந்த காலம்..


இலக்கியம், திரைப்படம் இரண்டிலும் ஒரு ஆரோக்கியமான சூழல். உருவாகிருந்த காலகட்டம். இவைகளே என்னை எழுதத் தூண்டின.. கல்லூரி மாணவர்களுடன் உல்லாசப் பயணம் போகும்போதெல்லாம்... பெங்களூர் என்றால் சுஜாதாவைப் பார்க்கப் போவதும், டெல்லி என்றால் தி.ஜானகிராமன், வெங்கட் சுவாமிநாதன் என்றும், சென்னை என்றால் மாலன் , பாலகுமாரன் என்றும் தேடி தேடிப் போய்ப் பார்த்தகாலம்..மோகமுள் படித்துவிட்டு கும்பகோணம் போய், பாபு,யமுனா இருந்த தெருக்களை பார்த்து வரும் அளவுக்கு பைத்தியமாக இருந்தவன்..சென்ற விடுமுறையில் கூட பாளையங்கோட்டை சென்று அய்யா தொ.பரமசிவம் அவர்களைச் சந்த்திது வந்தேன்.


மதிப்பிற்குரிய மாலனோடு எனக்கு கிடைத்த அறிமுகம் அச்சு ஊடகங்களுடான கதவைத் திறந்துவிட்டது.. கதவு திறந்து கிடநதாலும். என்னால் தான் முழுதாகப் பங்கு பெற முடியவில்லை..அடிப்படையில் நான் ஒரு படிப்பாளி.. எழுதுவது என்பது எப்போதுதாவது தான்...ஆகவே ரொம்பவும் கொஞ்சமாகத் தான் எழுதினேன்

1983-ல் மதிப்பிற்குரிய சுந்தரராமசாமி அவர்களின் அறிமுகம். ஜே.ஜே.குறிப்புகள் படித்துவிட்டு நாகர்கோவில் சென்று அவரைப் பார்த்து, அவருடனான அறிமுகம் எனக்குப் புதிய திசைகளை எனக்கு காட்டியது. சிறுபத்திரிகை எழுத்தாளர்களுடான பழக்கம் அது மூலம் ஏற்பட்டது..பெங்களுர் மகாலிங்கம், தமிழினி வசந்தகுமார், பஷீர், சி.மோகன், திலீப்குமார்,கவிஞர் சுகுமாரன்,பாதசாரி, ஷேசையா ரவி,பௌத்த அய்யனார் எனப் புதிய அறிமுகம்.. புதிய எழுத்தாளர்கள்., புதிய பார்வைகள்.. எழுதுவதை மூட்டை கட்டி வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தேன்.. 1994- என் முதல் சிறுகதை குமுதம் இதழில் வந்தது. அதைத் தொடர்ந்து சில சிறுகதைகள் குமுதத்தில் வந்தன..அது கொடுத்த உற்சாகம்..தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரைகள்.. அதன் பின்னர் இந்தியா டுடேவில் என் கட்டுரை..
2001-க்குப் பிறகு திண்ணை இணைய இதழில் தான் நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்..

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதிக்கொண்டிருந்த எனக்கு கவிஞர் தேனம்மை லெக்‌ஷ்மணனோட ஏற்பட்ட நட்பு.. அவர் தனது வலைத்தளத்தை (சும்மா) எனக்கு அறிமுகப்படுத்தினார்.அது நாள்வரை வலைத்தளம் எனக்கு அறிமுகம் இல்லை. என் எழுத்துகளைப் பற்றி அறிந்த அவரும் என் மச்சினன் தினேஷ் பாபுவும் (எண்ணங்கள்) என்னையும் வலைத்தளம் தொடங்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தவே சென்ற ஆண்டு 2009,டிசம்பர் 15 அன்று “நறும்புனல்” என்ற என் வலைத்தளத்தை தொடங்கினேன்..

அதன்பின்னர் சவூதியில் இருந்து வலைப்பதிவில் மிகப்பிரபலமாக இயங்கி வரும் என் ஊர்க்காரர் பா.ராஜாராம் தொடர்பு கிடைத்தது அதன் மூலம் மற்ற பதிவர்கள் செ.சரவணகுமார்,ஸ்டார்ஜன்,ஆறுமுகம் முருகேசன் என்ற அறிமுகம்..பா.ராஜாராம் மூலம் ஜமாலன் அறிமுகம்..ஜமாலன் வீடு ஒரு அற்புதப் புதையல்..

இப்படித்தான் எனக்கும் வலைத்தளங்களோடு வலைப்பதிவரோடும் அறிமுகம்..

தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக இன்று முதல் எழுத இருக்கிறேன்..
உங்கள் மேலான கருத்துகள் என் படைப்புகளை(?) இன்னும் செழுமையாக்க உதவும்

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

14 கருத்துகள்:

Ravichandran Somu சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்!

அட்டகாசமான அறிமுகம்...

raja சொன்னது…

வாழ்த்துக்கள் வெற்றிவேல்.. தங்களது வலைதளத்தை நான் முதன்முறையாக கண்டது.. ஷாஜியின் இசை அரசியல் பார்வையை வைத்து தாங்கள் எழுதிய கட்டுரையின் வழியாக நல்லதொரு கட்டுரை அது..தொடர்ந்து மற்ற கட்டுரைகளையும் படித்தேன். சரளமான நடை,விரிவான அலசல்.. இன்னும் கொஞ்சம் ஆழமான கருத்துகளை முன்னிறுத்தலாம் என்பது எண்ணம். நன்றி.

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ரவிச்சந்திரன்! 4ஜி பற்றிய தொழில்நுட்ப அறிமுக அட்டகாசம்.அது மாதிரி தொழில்நுட்ப கட்டுரைகள் எழுதும் தகுதி சில பேருக்குத் தான் உள்ளது..அதில் தாங்களும் ஒருவர். தொடர்ந்து எழுதவும்

raja சொன்னது…

அந்த புகைப்படத்தை பற்றிய விபரங்களை கொஞ்சம் எழுதுங்களேன்.. காத்திருக்கிறேன். இளையராஜா.. மகேந்திரன் எனும் மேதைகளின் இளையத்தருணம் என்று நிணைக்கிறேன்...

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி! ராஜா!!! தளம் கிடைத்தால் இன்னும் ஆழமாக எழுதலாம்..நானே எழுதி நானே படிப்பதால் ஒரு சுணக்கம்..வேலைப்பளுவும் இருப்பதால் அதிகம் எழுத இயலவில்லை. கண்டிப்பாக எழுதுகிறேன்.தங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி

அ.வெற்றிவேல் சொன்னது…

ராஜா!! கல்லூரிக் காலத்தில் திரை உலகம் தான் என் இலக்கு. உதிரிப்பூக்கள் வந்த தருணம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வருடந்தோறும் நடத்தும் ACCULFES என்ற கலைநிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க மகேந்திரனும், இளையராஜாவும் வந்திருந்தார்கள்..அவர்கள் இருவருக்கும் நான் வரவேற்பு கவிதை வாசித்தளித்தேன். நிறைவு நிகழ்ச்சிக்கு பாரதிராஜாவையும் பாக்யராஜாவையும் வைகை அணயில் புதியவார்ப்புகள் படப்பிடிப்பில் இருந்து அழைத்துக் கொண்டு சென்றோம்.

Unknown சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் கலக்குங்கள்.

வால்பையன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் தல!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

NICE, WISHES

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி நந்தா ஆண்டாள்மகன்,வால்பையன், ராம்ஜி_யாஹூ,முத்துலெட்சுமி!! வந்ததற்கும் வருகை புரிந்ததற்கும்

ஜமாலன் சொன்னது…

இரண்டு நாட்களாக இணையம் பக்கம் வராததால், நண்பரே தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள்.

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ஜமாலன்!

தருமி சொன்னது…

நேரடியாக இன்று (24.10.10) சந்தித்தபின்னே இதைப் படிக்கும் வாய்ப்பு வந்தது. உங்கள் எழுத்தும் எண்ணமும் மிக்க மகிழ்ச்சி தருகின்றன.
வளர வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக