சனி, 10 ஜூலை, 2010

1984/2009—சாதி அழிப்புக்கான அறிகுறி

1984

”என்னடா புள்ளை வளத்துருக்கா சிவாமி? ரவுடிப்புள்ளையை பெத்துப் போட்டுருக்கா? இவங்க கண்னுல படக்கூடாதுண்ணுதான் , சிவகங்கையில் இருந்து அம்புட்டு தூரம் தள்ளி சிதம்பரத்துல போய் படிக்க வைச்சா, அங்க போய் என் பேத்தியைப் பாத்துருக்கானே இந்த வெற்றிப் பய... இஞ்சினீயருக்கு படிச்சான்னு சொன்னாங்க..இதைத் தான் படிச்சு கிழிச்சான் போல.. பொம்பளைபுள்ளை எங்கே இருக்குன்னு?, தூத்தேறி. இப்படி புள்ளை வளக்கிறதுக்கு, அவனை கொன்னு போட்டுருக்கலாம்..”

என் அம்மாவைப் பெற்ற அப்பா, அம்மா வழித்தாத்தா, 1984-ல் என்னை, என் அம்மாவை நோக்கி வீசிய குற்றச்சாட்டுக்கள்..

நான் ஒன்றும் பெரிய குற்றம் பண்ணவுமில்லை.. என் முக லட்சணம் கூட ரவுடி சாயலில் இல்லை..ஆரம்பத்தில் இருந்து முதல் மாணவனாக தேறியே வந்ததால், என்னைப் பிடித்த பள்ளி ஆசிரியர்கள், என்னைப் பார்த்து முகத்துலே அறிவுக்களை சொட்டுதே என்று சொல்லி அதை என் அம்மா இன்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்..


நான் செய்தது இது தான்.. புதிதாக பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பொழுது. Scientific Instruments என்று சொல்லப்படும் ஆராய்ச்சிக்கான கருவிகள் விற்பதும் அதனை Install and Maintenance பண்ணுவதும் தான் என் வேலை. இன்றுவரை அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறேன். அதன் காரணமாக நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் போய் அங்குள்ள வேதியியல் மற்றும் பௌதிகப் பேராசிரியர்களைச் சந்தித்து என் பணி முடித்தபின், அப்பொழுது அங்கு என்னுடன் பள்ளியில் படித்த ஒரு தோழர், அங்கு படிப்பதை அறிந்து அவரைப் பார்க்க சென்றேன். அவர் சொன்னார்.. என் மாமா மகள் ( என் அம்மாவின் அண்ணன் மகள்) , எனக்காக பிறந்த பொண்ணு என்று சின்ன வயசில் சொல்லி விளையாடிய பொண்ணு..இப்ப குடும்பத் தகராறில் மூன்று ஆண்டுகளாக பெரியவர்கள் பேசிக்கொள்வதில்லை. அங்கு படிப்பதாக சொல்லி அதைப்பாக்காமயா போறேன்னு ஆசையை கிளப்பிவிட்டான். ஆசை யாரை விட்டது.. ( முதல் தவறு) வயசு அப்படி..படித்து முடித்து நல்ல வேலை கூட..என் மாமன் மகள் முதலாம் ஆண்டு M.Sc (Phy) படித்துக் கொண்டு இருப்பதாக சொல்லி அவர்கள் படிக்கும் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றான்.. அங்கு போய் என்னை வெளியில் நிறுத்திவிட்டு இரண்டு பெண்களை அழைத்து வந்தான்.அவர்கள் ரெண்டு பேரும் என் மாமன் மகள் பேரைச் சொல்லி “அவ உடம்புக்கு முடியாம ஊருக்கு போயிருக்கு, என்னமும் சொல்லனுமா?”எனக் கேட்டார்கள். நானும் ஒண்னும் இல்லை. வந்த இடத்தில் பாக்கலாம்னு வந்தேன்..வந்ததா சொல்லுங்கள் என்று சொல்லி என் பெயரைக் கேட்க என் business card ஐ கொடுத்து வந்தேன் ( இது இரண்டாவது தவறு) அவ்வளவுதான் நடந்தது.. இதற்கு வந்த எதிர்வினை தான்.. மேலே குறிப்பிட்ட வார்த்தைகள்.


பெண்களுடன் பேசுவது என்றாலே கூச்சப்படும் எனக்கு என் மாமன் மகளைப் பார்க்கப் போனது பெருத்த அவமானத்தைக் கொண்டு வந்து சேர்த்த்து. அதிலும் என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் மீது வருத்தம் தான் அவர்களிடம் நான் சொல்லாமல் போனது. அப்ப எங்கள் இல்லத்தில் தொலைபேசி கிடையாது.கடிதம் போட்டு அனுமதி வாங்கிச் செல்கிற அளவுக்கு திட்டமிட்டு செய்ததும் கிடையாது. என் நண்பன் அங்கு வைச்சு சொன்னதால் அப்ப ஏற்பட்ட ஆசை ..பார்க்கலாமேன்னு அவ்வளவுதான்..

இந்த வயசிலேயும் பெண்களுடன் பேசுவது என்றால்..கொஞ்சம் பயம் தான்.

நமக்கும் பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம்!!!!

2009.

நானும் என் மனைவி இரண்டு பையன்களுடனும் , மதுரையில் என் வீட்டில் பொங்கல் கொண்டாடிவிட்டு பொஙகல் அன்றே என் மாமனார் வீட்டிற்கு ராமநாதபுரம் சென்றோம். நானும் என் மனைவி இரண்டாவது மகன் என்னுடன் சவூதியில் இருக்க, பெரியவன் என் மாமனார் இல்லத்தில் தங்கித்தான் 9, 10 வகுப்புகள் படித்தான்.. என் மகனுக்கு இரண்டு மாமன் மகள்கள்.அந்த இரண்டு பெண்களில் இளையது என் மகன் வயது. ஆகவே இரண்டு பேருமே ஒன்றாகத்தான் படித்தார்கள். இரண்டு பேருமே நல்ல மதிபெண்கள் வாங்கி என் பையன் பொறியியலும், அந்தப் பெண் மருத்துவமும் படிக்கிறார்கள். நாங்கள் ஊர் போய்ச் சேருமுன்னர், என் மகனை வரவேற்க என் மச்சினன் மகளும் , அவன் வகுப்புத் தோழிகள் நாலைந்து பேர்களும் எங்களுக்காக, மன்னிக்க.. என் பையனுக்காக காத்து கிடந்தார்கள். காரில் இருந்து இறங்கியதுதான் தெரியும்.. அதற்குப் பிறகு என் பையன், அவன் வகுப்புத் தோழிகளும் மாடிக்குச் சென்றவ்ர்கள் தான் , ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு ஒரே சத்தம் தான்.. ஒரே அட்டகாசம் தான்..இவ்வளவிற்கும் என் பையன் பேசுவதே வெளியே கேட்காத அளவில் மெல்லத்தான் பேசுவான்..அன்று நான் பார்த்த்து புதிய திலீபனை. ஒரெ கிண்டலும் கேலியும் தான்..

நானும் என் மனைவியும் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவும் சாப்பிட அழைக்கவும் மாடிக்குச் சென்று பார்த்தால் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக உட்கார்ந்து கொண்டு ஏதேதோ சினிமா பாட்டு என்று பேசிக் கொண்டு இருந்தார்கள்..அவ்வளவு பேர் முகங்களிலும் மலர்ச்சி குடிகொண்டிருந்த்து..சந்தோஷ அலைகள்.

எனக்கு மிகவும் சந்தோசமான தருணங்கள் அவைகள்..


அங்கு நான் பார்த்த பெண்களில் கிறிஸ்துவம், இஸ்லாம் பெண்களும் இருந்தார்கள். 5 பேர்கள் ,அனைவரும் எந்த மதம் எந்த சாதின்னு என் மகனுக்கு தெரியாது..

இந்த மாதிரி ஆண் பெண் உறவுக்கான சூழல் தமிழகத்தில் அமைந்துள்ளது ஆரோக்கியமானதாக எனக்குப் பட்டது

கடந்த இரண்டு வருடங்களில் என் குடும்பத்து உறவுகளில் நடந்த திருமணங்கள் அனைத்துமே காதல் திருமணம் தான்..அதுவும் சாதிவிட்டு சாதி மாறித்தான்..

ஆகவே நாம் பெரியவர்கள் சாதியை ஒழிப்பது பற்றி கவலைப் பட்டுக் கொண்டு இருக்க இளைய தலைமுறை , எதைப்பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை..

காதல் திருமணங்களை ஊக்குவித்தாலே, சாதி கொஞ்சம் கொஞ்சமாக மறைய வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்.

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

மிக நல்ல மாற்றம்தான் வெற்றி..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//இந்த மாதிரி ஆண் பெண் உறவுக்கான சூழல் தமிழகத்தில் அமைந்துள்ளது ஆரோக்கியமானதாக எனக்குப் பட்டது//

உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்..

கருத்துரையிடுக