செவ்வாய், 22 ஜூன், 2010

செம்மொழியான தமிழ்மொழியாம்.....

செம்மொழியான தமிழ் மொழியாம்.. என்ற செம்மொழி தமிழ் மாநாட்டிற்கான மைய நோக்க விளக்கப் பாடல் அனைவரும் கேட்டும் பார்த்தும் இருக்கலாம். தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்..

பிறப்பொக்கும் என்ற அய்யன் வள்ளுவனின் முதல் வரியுடன் தொடங்கும் இப்பாடலை கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க, கெளதம் வாசுதேவ் மேனன் அதற்கு காட்சி வடிவம் கொடுத்து வெளிவந்துள்ளது..

ஒரு மாநிலத்தின் முதல்வர் தனக்குள்ள பணிகளுக்கிடையில் எழுதுவது என்பதே பெரிய செயல். அதிலும் அகவை 86..இந்த வயதிலும் தொடர்ந்து படிப்பதும் எழுதுவதன்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சாதனைக்குரிய செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது..

இந்தப்பாடல் கலைஞரால் எழுதப்பட்டுள்ளது. பாடல் வெளியீட்டின் போது கலைஞர் குறிப்பிட்ட்து போல், தமிழின் பெருமை, சங்ககாலம்,இடைக்காலம்., என எல்லாவற்றையும் தொட்டு இணைத்து எழுதுவதென்பது கொஞ்சம் சிரம்மான பணிதான் .,அப்பணியை அகவை 86-லும் அழகாக செய்துள்ளார். பிறப்பொக்கும் என்ற வள்ளுவனின் வார்த்தைகளுடன் தொடங்கும் இப்பாடலில்,பின்னர் கணியனின் பெருமைமிகு “யாதும் ஊரே., யாவரும் கேளிர்..தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரிகளுடன், சிலம்பு, தொல்காப்பியம், வளையாபதி, மேகலை போன்றவற்றிற்கு மரியாதை செய்து ஆதி அந்தமில்லா தமிழ் மொழியை அழகு படுத்தி உள்ளார்.

கலைஞரின் மொழி ஆளுமையையும் அறிவுக்கூர்மையையும் அடி தொழ வணங்குகிறேன்..


ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய அன்புக்குரிய ஏ.ஆர்.ரகுமான் இசை வடிவம் கொடுத்துள்ளார். தமிழ் மொழி உலகளாவிய மொழி என்பதால், ஒரே விதமான இசைவடிவம் கொடுக்காமால், தமிழ் நாட்டுபுறம், தமிழ் இசை, கர்நாடக இசை,மேற்கத்திய இசை என பல தளங்களிலும் விரிந்து இப்பாடலுக்கு ஒரு புதிய வடிவம் அமைத்துக் கொடுத்துள்ள ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.. மூன்று தலைமுறையையும் பாட வைக்க முடிவெடுத்தோம் என்று மேடையில் சொன்னார் ரகுமான்..எங்களின் முதல் மரியாதைக்குரிய அய்யா டி.எம்.எஸ் அவர்களின் குரலோடு தொடங்கும் இப்பாடல் அடுத்த வரிகளிலேயே மூன்றாம் தலைமுறைக்கு நகர்ந்து விடுகிறது, இதில் இரண்டாம் தலைமுறைப் பாடகர்களான எஸ்.பி.பி, ஏசுதாஸ், எஸ்.ஜானகி சித்ரா, ஸ்வர்ணலதா, மனோ, ம்லேஷியா என எவரையுமே காணவில்லை.. ஒரு ஐந்து நிமிடப்பாடலில் எல்லோரையும் பாடவைக்க முடியாது என்பது நன்கு புரிகிறது..ஆனால் இரண்டாம் தலைமுறைப் பாடகர்கள் யாருமே இல்லை என்ற சின்ன ஆதங்கம்..வேறு ஒன்றுமில்லை.. செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற வரி அடிக்கடி வந்தாலும்.. கடைசியில் “நாக்க முக்க’ சின்னப்பொண்ணு குரலில் வரும் “ தமிம் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்’ என்ற வரிகள் தான் என் காதுகளில் நிரம்பி வழிகிறது...நாட்டுப்புற இசைக்கு பழகிய காதுகள்...

வாழ்த்துக்கள் ரகுமான்..புறநானுற்று வரிகளுக்கு ஒரு நவீனம் கொடுத்ததற்காக.. தமிழ் ஆர்வம் உள்ள இளைஞர்கள் செல்பேசியில் வைத்துக் கொள்ளலாம்..

ஒளிவடிவம் கொடுத்தவர் கெளதம் வாசுதேவ் மேனன். திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலில் ஏராளமான தமிழர்கள் உண்டு. இயக்குநர், எடிட்டர், விளம்பர வடிவமைப்பாளர் என் எல்லாத்துறைகளிலும் என்பது கலைஞருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்..அப்படி இருக்கும் போது செம்மொழி தமிழுக்கான பாடலை ஒரு மலையாளியிடம் கொடுத்தது தான் கொஞ்சம் நெருடலைத் தருகிறது..தமிழின் சிறப்பு கெடாமல் ஒரு மலையாளியால் எடுக்க முடியுமா ? என்ற தேர்வில் கெளதம் ஒரளவு வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழ் எழுத்துக்களை எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரிப்பதைத் தான் காணச் சகிக்க முடியவில்லை.. அந்தக் காட்சி அமைப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..மற்றபடி கெளதமிடம் ஒரு செய்முறை நேர்த்தி இருக்கிறது என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும்.. அது நன்கு இப்பாடலில் தெரிகிறது..


கலைஞர். ஏ.ஆர்.ரகுமான், கெளதம் மூவரும் இணைந்து தமிழன்னைக்கு அழகான தமிழ்ப் பாமாலை நெய்து கொடுத்துள்ளார்கள் ., செம்மொழி மாநாடு என்ற காரணத்தை முன்னிறுத்தி..நன்றியும் வாழ்த்துக்களும்..
நாளை கோவையில் தொடங்கும் செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

பின் குறிப்பு: classical language என்பதற்கு செவ்வியல் மொழி என்பது தானே சரியான பதம்..செம்மொழி என்பது சரிதானா? தமிழ் படிக்காதவன் தவறு என்றால் மன்னிக்கவும்..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

4 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

தமிழ் எழுத்துக்களை எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரிப்பதைத் தான் காணச் சகிக்க முடியவில்லை.. அந்தக் காட்சி அமைப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை../

அருமையா கேட்டு இருக்கீங்க..

அபி அப்பா சொன்னது…

தமிழறிஞர் மனவை முஸ்தபா அவர்களும் செவ்வியல் மொழி என்றே குறிபிடுகின்றார். ஒருவேளை செம்மொழி என்பது சரிதானோ என்னவோ?

அது போல கௌதம்மேனன் இயக்கம் என்பது எனக்கும் மிகப்பெரிய நெருடல். தமிழ் எழுத்துகளை பொரிப்பது பற்றி இப்போது தான் யோசித்து பார்க்கின்றேன். தவறு என்றே உணர்கின்றேன்.

அது போல பரிசல்காரன் பதிவிலும் சில குற்றங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஒரு சின்ன பெண் குழந்தையை அதன் அப்பா கூப்பிடும் காட்சியில் Come என கூப்பிடுவார்.(அப்படித்தான் வாயசைப்பு இருக்கின்றது)

அது போல சில குறைகள் இருந்தாலும் பாடல் மிக நன்றாக இருக்கின்றது. நல்ல கட்டுரை. நன்றி!

அபி அப்பா சொன்னது…

\\ஒருவேளை செம்மொழி என்பது சரிதானோ என்னவோ?\\

செம்மொழி என்பதும் சரிதானோ என்னவோ என படிக்கவும்

விஜய் சொன்னது…

தாளகட்டுகளில் ஸ்வரங்களில் நுழைய முடியாத ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை வெற்றிபெற வைத்திருப்பதே ரஹ்மானின் வெற்றி.

Hats off to Rahman

விஜய்

கருத்துரையிடுக