தந்தை பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தந்தை பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 டிசம்பர், 2010

சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியார்..


1969-71 க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். சிவகங்கை சண்முக ராசா கலையரங்கில் தந்தை பெரியாரின் உரை கேட்டது தான் எனக்கும் பெரியாருக்கும் உள்ள முதல் தொடர்பு..அய்யப்பன் வரலாறு பற்றி சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..அப்போது நான் காலையில் 4 மணிக்கு எழுந்து கோயில் கோயிலாக சுற்றி வந்த காலம் என்பதால் அவர் உரை என்னை அவ்வளவாக கவரவில்லை..அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்..ஆனால் அடுத்த இரண்டு வாரம் அவர் பேசியதையே கிண்டலும் கேலியுமாக நணபர்கள் மத்தியில் பேசி வந்த போது தான் அவர் என்னையும் அறியாமல் என் மனதில் விதை ஊன்றிப் போயுள்ளார் என்று பின்னர் அறிந்து கொண்டேன்..


என் வரலாற்று அறிவுக்கு எட்டிய வரை மதங்களை முதன்முதலில் கேள்விக்குள்ளாக்கியர் சித்தார்த்தன். இந்திய வரலாற்றில் மாற்றுச் சிந்தனையை தொடங்கி வைத்தவர் புத்தர்.அவர் தொடங்கி வள்ளலார் வரை ஒரு நீண்ட பராம்பரியத்தின் கடைசிக் கண்ணி நம்மை சிந்திக்கச் சொன்ன தந்தை பெரியார்..

உங்களுக்காக சிந்திக்கிறேன்..உங்களுக்காக உழைக்கிறேன் என்று சொல்லி 92 வயது வரை மூத்திரப் பையுடன் ஊர் ஊராக சுற்றி வந்து உண்மையிலேயே நமக்காக உழைத்தவர் தந்தை பெரியார்..

போன நூற்றாண்டில் அவர் அளவுக்கு சாதித்துக்காட்டியவ்ர் வேறு ஒருவரும் இருக்க முடியாது..

சாதி ,மதம், இனம்,மொழி, தேசீயம் என்ற எல்லா நிறுவன மையங்களையும் கேள்வி கேட்டவர்.

அவர் மறைந்து 37 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சாதித்ததில் எது என்னைப் பொறுத்தவரையில் எது முக்கியமானதாகப் படுகிறது என்று அவர் சாதித்துக் காட்டிய அனைத்து சாதனைகளையும் எடுத்து வைத்துப் பார்க்கிறேன்..

சுயமரியாதை என்ற சொற்றொடர் பெரியாருக்கு முந்தைய காலகட்ட்த்தில் இருந்து இருக்கலாம்.. ஆனால் அந்தச் சொற்றொடருக்கான உண்மையான அர்த்தத்தை தமிழர்களின் மனங்களில் ஊன்றி விட்டுப் போனது தான் மிக முக்கியமானதாகப் படுகிறது. தமிழர்களின் சிந்தனையில் மிகப் பெரும் தாக்கத்தை இந்த மந்திரச்சொல் உண்டு பண்ணியுள்ளது என்பது வரலாறு.

சுயமரியாதையுடன் எந்த விசயத்தையும் அணுக வேண்டும் என்று சொல்லி சுயமரியாதை என்பதை ஒவ்வொரு தமிழனின் கூறுகளில் ஒன்றாக்கி வைத்தவர் தந்தை பெரியார்..

இன்று சுயமரியாதை என்பது என்ன என்று தெரியாத ஒரு தமிழனும் இருக்க மாட்டான். ஆனால் சுயமரியாதையோடு வாழ்கிறானா என்பது வேறு பிரச்சனை.. அப்படி சுயமரியாதை இழந்து வாழும் ஒருவனுக்கும் , நாம் வாழ்வது சுய மரியாதியுடன் உள்ள வாழ்வா என்று அவன் மனதை அவனைப் பார்த்தே கேள்வி கேட்க வைத்தவர் தந்தை பெரியார்..

அப்படிப் வாழ்பவனைப் பற்றியும் தந்தை பெரியார் மிக அழகாக தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.“ஒண்ணும் தெரியாதவன் மடையன். தெரிந்திருந்தும் அதில் நமக்கு ஆதாயம் கிடைக்குமா என்று யோசிப்பவன் அயோக்கியன்”

இன்று தந்தை பெரியாரின் நினைவு தினம்..பெரியாரை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறோம் என்று நம்மை நாமே உரசிப் பார்த்துக் கொள்ளும் தினமாக இந்நாளை மாற்றிக் கொள்வோம்..

படம் உதவி: ஜீவா,கோவை

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

திங்கள், 13 செப்டம்பர், 2010

இறை நம்பிக்கை

கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது—ஐன்ஸ்டீன்

நான் மிகவும் விரும்பிப் படிக்கும் வலைத்தளங்களில் அய்யா தருமி, வால்பையைன், All inAll அழகுராஜா,ருத்ரன் போன்றவர்களின் தளங்கள். எனது விருப்பத்திற்கு முதல் காரணம் இவர்கள் அனைவருமே இறை நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துவது தான்..

சிவகங்கை ஒத்த அக்ரஹாரத்தில் வளர்ந்தவன் நான்.. சிறு வயதில் கோவில் கோவிலாக திரிந்தவன்.மார்கழி மாதங்களில் 4 மணிக்கு எழுந்து எல்லாக் கோவில்களுக்கும் சென்று வந்தவன்.. கல்லூரிப் பருவத்தில் எனக்குள் ஏற்பட்ட கருத்து மாற்றங்கள், பெரியாரிஸம், கம்யூனிஸம் போன்ற சித்தாந்தங்கள் என்னை கவரவே, எப்பொழுது கடவுள் என் மனதில் இருந்து வெளியேறினார் என்று தெரியவில்லை.பகலவனைக் கண்ட பனி விலகுவது போல அதிகம் படிக்கப் படிக்க கடவுள் எப்பொழுது என் மனதில் இருந்து விலகினார் என்று சொல்லத் தோன்றவில்லை.கல்லூரிக்கு நுழைந்த காலத்தில் நான் படித்த ராகுல சாங்கிருத்தாயனின் “வால்கா முதல் கங்கை வரை” , என் சிந்தனைகளைத் திருப்பிப் போட்ட புத்தகம்.


கடவுள் இருக்கிறார் என்று எடுத்துக் கொண்டாலும், கடவுள் இயற்கைக்கு முன்னர் தோற்று, இருந்த இடம் தெரியாமல் போன சந்தர்ப்பங்களை இந்த 50 வருட வாழ்க்கையில் பலமுறை நான் சந்திக்க நேர்ந்தது.. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்து எங்கு இருக்கிறார் என்று விளம்பரப்படுத்தும் நிலையில் நாம் வணங்கும் அனைத்து கடவுள்களும் தோற்றுபோன சம்பவம் சுனாமி ஆகும்..இது கடவுள் இயற்கையிடம் தோற்றுப்போன சம்பவம்.. இரண்டாவது முள்ளிவாய்க்கால் அவலம்..இது அரசு அதிகாரத்தின் முன்னர் கடவுள் தோற்கடிக்கப்பட்ட சம்பவம்.. ஒட்டுமொத்தமாக ஒரு இனமே கடவுளுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன? அப்படி ஒரு இனமே பிடிக்காமல் போன கடவுள் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? அறிவுள்ள மக்களால் கடவுள் தோற்கடிக்கப்பட்ட சம்பவங்கள் இங்கு ஆயிரக்கணக்கில் உண்டு.அறிவியல் கண்டுபிடிப்புகளை மட்டும் சொல்லவில்லை. தான் தான் கடவுள் என்ற பிம்பத்தை கட்டமைத்துள்ள பங்காரு அடிகளார் முதல் நித்தியானந்தா வரை, கடவுளை தோற்கடித்தவர்கள் தான்.


கடவுளே கேள்விக்கும் கேலிக்கும் ஆளான சந்தர்ப்பங்களே அளவிட முடியாமல் இங்கு இருக்கும் போது,கடவுள்களைத் தூக்கி நிறுத்தப் புறப்பட்ட மதங்கள் நிலை இன்னும் கேலிக்குரியதாகி இருக்கிறது..


மனிதனின் இன்றைய வாழ்வே கேள்விகளால் ஆனது.ஆனால் மத நம்பிக்கைகளை மட்டும் கேள்விகள் கேட்கக்கூடாது என்பதே ஒரு பெரிய பித்தலாட்டம்..

அதிலும் எந்த கேள்வியைக் கேட்டாலும் என் முன்னோர்கள் சொன்னார்கள். என் வேதப் புத்தகத்தில் இருக்கிறது..கடவுள் அருளிச் செயத எங்கள் புத்த்கத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதை விட மடத்தனம் எதுவும் இல்லை.கடவுளால் சொல்லப்பட்ட புத்தகம், கடவுள் மறந்து போனதைச் சொல்ல அப்புத்தகத்திற்கு உபநூல் என்று ஏகப்பட்ட தொகுப்புகள். முன்னோர்கள் சொன்னதோ, புத்தகங்கள் சொல்வதோ , உன் அறிவுக்கு அது சரியாகப் படுகிறதா என யோசிக்காதவன் மனிதனாக இருக்கவே தகுதி இல்லாதவன்.


தந்தை பெரியார் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். ””மதம் எப்படி ஏற்பட்டது? மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் , அவரவர் புத்திக்கு தகுந்த படி ”மக்கள் நன்மைக்கு” என்ற கருத்திலே சொல்லப்பட்ட விஷ்யங்கள் தான்.பெரும்பாலும் இதை எந்த மனிதனும் ஒத்துக் கொள்வான். மற்றும் அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் இருக்கிற வித்தியாசம், அந்தக் காலத்து மனிதனுக்கு இருந்த அறிவுக்கும், இந்தக் காலத்து மனிதனுக்குள்ள அறிவுத்திறமை இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தையும் எந்த மனிதனும் ஒத்துக் கொள்வான்.ஆனாலும் அவர்கள் பெரியவர்கள் தெய்வீகத் தனமை கொண்டவர்கள் அவர்கள் சொல்வதை நாம் கண்டிப்பாய் பின்பற்ற வேண்டும் அது எக்காலத்திற்கும் ஏற்றது என்று எதைஎதையெல்லாமோ சொல்லி அதை நிலைநிறுத்த்த் தகுந்த வண்ணத்தில் பேசுவார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் மனிதனும் மதமும் என்றாலே அறிவும் மடமையும் என்று தான் பொருள் கொள்ளவேண்டும்”””தந்தை பெரியார்.

மேலே சொன்ன பெரியாரின் விளக்கம் என் சிந்தனைக்கும் அறிவுக்கும் பொருத்தமாகப்படுவதால் இதை நான் ஏற்றுக் கொண்டேன்.


”மாற்றம் ஒன்று தான் என்றும் மாறாதது”என்பது வாழ்வின் அடிப்படைத் தத்துவம். இந்த அடிப்படைத் தத்துவத்தையே புரிந்து கொள்ள மறுத்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதை, இன்றும் அது நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு, கடவுளையும், மதத்தையும் தூக்கிப்பிடித்துக் கொண்டு இருக்கும் மனிதர்களை நாம் புறந்தள்ளுவோம்.

நட்சத்திரப்பதிவராக முதல் கட்டுரையாக ஏன் இதை அமைத்துள்ளேன் என்றால், உலக மக்கள் முன் உள்ள மிகப்பெரும் சவால் இந்த மதத் தீவிரவாதம் தான். இன்று இக்கட்டுரை எழுதும் தேதி 9/11. அனவருக்கும் தெரியும்..இந்தத் தேதியில் நடைபெற்ற கோரசம்பவம். தம் மதங்களை நிறுவனமாக்கி அதை முன்னிறுத்த சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து மூளைச் சலவை செய்யப்பட்டு இன்று மிகத் திவீரமாக பரவிவரும் கொடிய நோய்’மதத் தீவிரவாதம்”. கலைஞரால் சிவகங்கை சின்னப்புள்ளை என்று செல்லமாக அழைக்கப்பட்ட மைய உள்துறை அமைச்சர் ப.சி. யை நான் பெரிதும் மதிப்பது இல்லை.. இருந்தாலும் சமீபத்தில் அவர் சொன்ன ”காவித் தீவிரவாதம்” என்ற ஒற்றை வார்ததை அவர்மேல் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஆம் தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரால் வந்தாலும் எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை.

இறுதியாக பெரியார் சொல்வதை மேற்கோள் காட்டி இதை முடிக்கிறேன்.
“கடவுளாகட்டும் மதமாகட்டும்,பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்.அது தனிமனிதனுடைய தனிச் சொத்து. உலகத்திற்கான பொதுச் சொத்தல்ல..ஒழுக்கம், நாணயம்,உண்மை இதெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாயிருந்தால் அது சமுதாயத்திற்கு கேடு”


இன்னொரு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமோ, அதைத் தொடர்ந்து நடந்த இந்துத் தீவிரவாதிகளின் வெறியாட்டமோ, செப்டம்பர் 11 சம்பவமோ நடைபெறாமல் காக்க வேண்டியது நம் இளைஞர்கள் கையில் உள்ளது.. கடவுளையும் மதங்களையும் தூக்கிபோட்டு விட்டு மனித நேயம் காக்க வாருங்கள்

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com