வெள்ளி, 24 டிசம்பர், 2010

சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியார்..


1969-71 க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். சிவகங்கை சண்முக ராசா கலையரங்கில் தந்தை பெரியாரின் உரை கேட்டது தான் எனக்கும் பெரியாருக்கும் உள்ள முதல் தொடர்பு..அய்யப்பன் வரலாறு பற்றி சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..அப்போது நான் காலையில் 4 மணிக்கு எழுந்து கோயில் கோயிலாக சுற்றி வந்த காலம் என்பதால் அவர் உரை என்னை அவ்வளவாக கவரவில்லை..அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்..ஆனால் அடுத்த இரண்டு வாரம் அவர் பேசியதையே கிண்டலும் கேலியுமாக நணபர்கள் மத்தியில் பேசி வந்த போது தான் அவர் என்னையும் அறியாமல் என் மனதில் விதை ஊன்றிப் போயுள்ளார் என்று பின்னர் அறிந்து கொண்டேன்..


என் வரலாற்று அறிவுக்கு எட்டிய வரை மதங்களை முதன்முதலில் கேள்விக்குள்ளாக்கியர் சித்தார்த்தன். இந்திய வரலாற்றில் மாற்றுச் சிந்தனையை தொடங்கி வைத்தவர் புத்தர்.அவர் தொடங்கி வள்ளலார் வரை ஒரு நீண்ட பராம்பரியத்தின் கடைசிக் கண்ணி நம்மை சிந்திக்கச் சொன்ன தந்தை பெரியார்..

உங்களுக்காக சிந்திக்கிறேன்..உங்களுக்காக உழைக்கிறேன் என்று சொல்லி 92 வயது வரை மூத்திரப் பையுடன் ஊர் ஊராக சுற்றி வந்து உண்மையிலேயே நமக்காக உழைத்தவர் தந்தை பெரியார்..

போன நூற்றாண்டில் அவர் அளவுக்கு சாதித்துக்காட்டியவ்ர் வேறு ஒருவரும் இருக்க முடியாது..

சாதி ,மதம், இனம்,மொழி, தேசீயம் என்ற எல்லா நிறுவன மையங்களையும் கேள்வி கேட்டவர்.

அவர் மறைந்து 37 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சாதித்ததில் எது என்னைப் பொறுத்தவரையில் எது முக்கியமானதாகப் படுகிறது என்று அவர் சாதித்துக் காட்டிய அனைத்து சாதனைகளையும் எடுத்து வைத்துப் பார்க்கிறேன்..

சுயமரியாதை என்ற சொற்றொடர் பெரியாருக்கு முந்தைய காலகட்ட்த்தில் இருந்து இருக்கலாம்.. ஆனால் அந்தச் சொற்றொடருக்கான உண்மையான அர்த்தத்தை தமிழர்களின் மனங்களில் ஊன்றி விட்டுப் போனது தான் மிக முக்கியமானதாகப் படுகிறது. தமிழர்களின் சிந்தனையில் மிகப் பெரும் தாக்கத்தை இந்த மந்திரச்சொல் உண்டு பண்ணியுள்ளது என்பது வரலாறு.

சுயமரியாதையுடன் எந்த விசயத்தையும் அணுக வேண்டும் என்று சொல்லி சுயமரியாதை என்பதை ஒவ்வொரு தமிழனின் கூறுகளில் ஒன்றாக்கி வைத்தவர் தந்தை பெரியார்..

இன்று சுயமரியாதை என்பது என்ன என்று தெரியாத ஒரு தமிழனும் இருக்க மாட்டான். ஆனால் சுயமரியாதையோடு வாழ்கிறானா என்பது வேறு பிரச்சனை.. அப்படி சுயமரியாதை இழந்து வாழும் ஒருவனுக்கும் , நாம் வாழ்வது சுய மரியாதியுடன் உள்ள வாழ்வா என்று அவன் மனதை அவனைப் பார்த்தே கேள்வி கேட்க வைத்தவர் தந்தை பெரியார்..

அப்படிப் வாழ்பவனைப் பற்றியும் தந்தை பெரியார் மிக அழகாக தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.“ஒண்ணும் தெரியாதவன் மடையன். தெரிந்திருந்தும் அதில் நமக்கு ஆதாயம் கிடைக்குமா என்று யோசிப்பவன் அயோக்கியன்”

இன்று தந்தை பெரியாரின் நினைவு தினம்..பெரியாரை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறோம் என்று நம்மை நாமே உரசிப் பார்த்துக் கொள்ளும் தினமாக இந்நாளை மாற்றிக் கொள்வோம்..

படம் உதவி: ஜீவா,கோவை

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

5 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

சுயமரியாதை என்றால் என்ன என்று யோசிக்கத் தெரியாதவர்களே இன்று சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள் என்றால் அது பெரியாரின் சாதனை.இதை நன்றியுள்ளத் தமிழர்கள் நினைத்துப் பார்க்கட்டும்.ஒரு பொடியன் தனது தாத்தாவைப் பார்த்து "டேய் ! ராமா !அதைக் கொண்டா" என்று சொன்னதைக் காதால் கேட்ட தமிழினம் இன்று அது நடந்தது என்று சொன்னால் அதை நம்பக்கூட ஆள் இருக்க மாட்டார்கள்.

உமர் | Umar சொன்னது…

சிறப்பான கட்டுரை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

சிறப்பான கட்டுரை.

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி..தமிழன்,கும்மி சே.குமார்,., வந்ததற்கும் வாழ்த்தியமைக்கும்

arrawinth yuwaraj சொன்னது…

அருமை...
பகுத்தறிவுப் பகலவனுக்கு வீர வணக்கங்க்கள்...

கருத்துரையிடுக