சமீபத்தில் என் நண்பருடைய முகநூலில் நிலைத்தகவல் (ஃபேஸ்புக் ஸ்டேடஸ் மெசெஜ்) படித்தேன். தன் ஊருக்குச் சென்றவர் அங்கு இருக்கும் நான்கு திரையரங்களிலும் ஒரே குடும்பத்தைச் சேரந்தவர்களின் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக.. கலைஞரிடம் கேட்டால் அது அவர்கள் தொழில் என்பதாகச் சொல்வார். சன் குழும தொலைக்காட்சி மட்டுமின்றி கலைஞர் குழுமம் மொத்தமாக 10 சானல்கள் , அது மட்டுமின்றி, தற்பொழுது, மூன்று மகன்களின் நிறுவனங்களும் தமிழ்ப் படத்தயாரிப்பிலும், விநியோக வியாபாரங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். கூடியவிரைவில் கனிமொழியும், கௌதம்மேனன் இயக்கதில் தமிழ்ப்படம் தயாரிக்க உள்ளதாக ஒரு செய்தியும் படித்தேன். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
பத்திரிக்கை திரைப்படம் இரண்டுமே கலைஞர் அவர்களால் மிக விரும்பிச் செய்யப்படும் பணி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.கலைஞர் அவர்கள் இந்த இரண்டு துறைகளையுமே தன் அரசியல் பணிக்கு ஒரு பிரச்சாரமாகப் பயன்படுத்தியது தமிழக வரலாறு. ஆதலால் இன்று அவர்கள் வாரிசுகள் இத்தொழில் இறங்கி இருப்பது எனக்கு ஆச்சர்யமில்லை.அது அவர்கள் தொழில் என்பதால், அதை அவர்கள் லாபகரமாகச் செய்வதிலும் நமக்கு ஏதும் வருத்தமில்லை.
நம் வருத்தம் எல்லாம் ,ரசனை சார்ந்த விஷயங்களை, பொது நலன் சார்ந்த விஷயங்களில் கருத்துக்களை தீர்மானிக்கும் சக்தியாக ஒரு குடும்பம், அதன் ஊதுகுழலாக பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களும் ஒரே அணி என்று இருந்தால், அது மக்களாட்சிக்கு எந்த விதத்தில் உதவும் என்பதுதான். இது தவிர இப்பொழுது தினமலரும், இந்து நாளிதழுமே ஆளுங்கட்சியின் அதிகாரபூரவமற்ற செய்தி நிறுவனங்களாக மாறிப் போய்விட்டதாகத் தெரிகிறது.மக்கள் பிரச்னைகளில் தி.மு.க என்ற கட்சி எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் கருவியாகத்தான் இந்த ஊடகங்கள் பயன் படும் என்பதைத் தவிர அவர்கள் எடுத்த அந்த முடிவு சரியா தவறா என்ற பொது விவாதத்திற்கு இங்கு இடமிருக்காது. மாற்றுக் கருத்துக்கே இடமில்லாத சூழல் மக்களாட்சிக்கு விரோதமானது என்ற கருத்தை கலைஞர், கனிமொழி என்ற இரண்டு எழுத்தாளர்களுமே ஆதரிப்பார்கள்.
மாற்றுச் சிந்தனைக்கு இடங்கொடுக்க இந்த நேரத்தில் நம் முன்னர் உள்ள தொலைக்காட்சிகள், மக்கள் தொலைக்காட்சியும் ஜெயா வுமே..விஜய் டிவி அரசியல் சார்ந்ததல்ல. மேலும் அது காங்கிரஸ் கட்சி மாதிரி தமிழகத்தை தாண்டி வேறு இடத்தில் இருந்து நிர்வகிக்கப்படுவது..அவர்களுக்கு தமிழக அரசியலோ, தமிழ் மக்கள் பிரச்னைகளோ முக்கியமாகப் படுவது இல்லை. அதனால் தான் அவர்கள் லைவ் ஷோக்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மக்கள் தொலைக்காட்சியின் ஆரம்ப கால நிகழ்ச்சிகள் கண்டு நான் மிகவும் மகிழ்வுற்று திண்ணை இணைய இதழில் அதை வரவேற்று கட்டுரை ஒன்று கூட எழுதியுள்ளேன். ஆனால் மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் அவர்கள் தோற்றுவிட்டதாக அறிகிறேன்.
ஜெயா தொலைக்காட்சியால் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க முடியும்.ஆனால் இன்றுவரை அது ஒரு கட்சி சார்பான தொலைக்காட்சி என்ற அளவில் தான் இருக்கிறதே தவிர, அந்த வட்டத்தை விட்டு இன்று வரை வெளிவரமுடியவில்லை.வரும் காலத்திலும் ஜெயா டிவி நிர்வாகத்தால் அந்த புதைகுழியில் இருந்து வெளிவரமுடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.
இந்த நேரத்தில் தான் வலைப்பதிவர்களின் பணி முக்கியமாக எனக்குப் படுகிறது.
ஒரு திரைப்படம் வெளிவந்த உடனேயெ சுடச்சுட தன் கருத்துக்களை பதிந்துவிடத் துடிக்கும் எண்ணற்ற வலைப்பதிவர்கள் மத்தியில், ஒரு 10 விழுக்காடு வலைப்பதிவர்கள் பொது விஷயங்களில் மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான கருத்தை திரட்ட தம் வலைப்பதிவுகளை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.
சென்ற மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அடைக்கப்பட்ட சவுக்கு இரண்டே நாளில் வெளிவந்ததற்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் தற்காலிக இடைநீக்கம்,திரும்பிப் பெறப்பட்டதற்கும் வேறு ஏதும் அரசியல் காரணங்கள் இருந்தாலும், வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..
ஆகவெ பொது நலன் சார்ந்து சிந்திக்கும் அனைத்து வலைப்பதிவர்களும், அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாகவும், மக்கள் விரோதமாக இருந்தால் அதை எதிர்த்தும் துணிச்சலுடன் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..
இது மட்டுமின்றி, ஃபேஸ்புக்,ஆர்குட்,டுவிட்டர் போன்ற பொதுத் தளங்களிலும் தங்களது கருத்துகளை ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் பதிவிட வேண்டுகிறேன்
இது ஒன்று தான் இப்பொழுது நம்முன் உள்ள ஒரே வழி..
நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com