கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கிரிக்கெட்- சூதாட்டத்தின் உச்சம்

2010 மார்ச் என்று நினைக்கிறேன்.. எனக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாததால், எந்த மேட்ச், யாருக்கு எதிராக என்று தெரியாது.. சச்சின் 200 எடுத்த அன்று..

என் அலுவகத்தில் எனக்கு தனி அறை.. என் கீழே வேலை பார்க்கும் அனைவரும் என் கண் பார்வையில் எனக்கு எதிராக திறந்த வெளியில் இருப்பதாக அலுவலக அமைப்பு.. பாகிஸ்தானிகள் அதிகமாகவும், இந்தியர்கள் 3 பேருடனும் இயங்கிக் கொண்டிருந்த போது, ஒரு இந்திய நண்பர் சச்சின் 200 எடுத்ததாகச் சொல்லவே கை கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள். நான் வெளியில் வந்து விஷயம் கேள்விப்படட உடனேயே நான் சொன்னது..” சினிமாவில் மார்க்கெட் போன நடிகர்கள் அவர்கள் செலவிலேயே படம் எடுத்து , தன் திறமைகளை காண்பித்து வெளியிடுவார்கள்.எம்.ஜி.ஆர் காலத்திலேயே இதுதான் நிலை..நாடோடி மன்னன் படத்தின் போது அவர் சொன்னது போல் வெற்றி பெற்றால் மன்னன் அல்லது நாடோடி.. அதே நிலைதான் சச்சினுக்கு இன்று..அனைத்து விளம்பரங்களிலும் தோனி தான் வருகிறார்..ஆகவே இது ஒரு செட்டப்” என்றும் இதற்காக அலுவல் நேரத்தில் இப்படி பேசிக்கொண்டு இருப்பது எனக்குப் பிடிக்காது என்று எச்சரித்தும் வந்தேன். ஆனால் அதன் பின் வந்த இந்திய முதன்மை லீக் (IPL) ஏலத்தில் சச்சின் கலந்து கொள்ளும் அணி அதிக விலை போகவேண்டும் என்பதறகாக முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் இந்த 200 ரன் என்று தகவல் வந்துள்ளதாகவும் அதே நண்பர்கள் என்னிடம் பின்னால் சொன்னார்கள்..எது உண்மை என்பது பின்னால் யாராவது புத்தகமாகப் போடுவார்கள்..


செப் 8 தினமலரில் , தாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளுமே மேட்ச் பிக்ஸிங் தான் என்று பாகிஸ்தானின் துவக்க வீரர் யாசிர் ஹமீதின் பேட்டி வருகிறது..

ஒரு விவாத்திற்காகத் தான் கிரிக்கெட்டை விளையாட்டு என்று அழைக்கிறேனே தவிர, அதற்கும் விளையாட்டு என்பதிற்கும் எள்ளளவும் சம்பநதம் இல்லை..என்னைப் பொறுத்தவரையில் சூதாட்டம் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்

என் சிறு வயதில் நான் வளர்ந்தது அக்ரஹாரத்தில் தான்.. சிவகங்கையில் இரண்டு விதமான அக்ரஹாரம் உண்டு.. உயர்தர பிராமணர்கள் இருக்குமிடம் கோலே தெரு..கிரிக்கெட் அங்கு மட்டும் தான் விளையாடுவார்கள்..எங்கள் அக்ரஹாரத்திலோ எப்பொதும் போல் அன்றைய கிட்டி, பம்பரம்,கோலி,பட்டம் மற்றும் கால்பந்து விளையாடுவோம்.பிராமணர்களிலே உயர்தர பிராமணர் விளையாடும் விளையாட்டு கிரிக்கெட் எனப்து என் சிறு வயது பாலபாடம்.


இது ஒரு பிரிட்டிஷ் காலணியாதிக்க விளையாட்டு. அடிமை மன நிலையில் இருந்து விடுபடாத இந்திய சமுதாயம் கிரிக்கெட்டை சுலபமாக தத்து எடுத்துக் கொண்டது. அடிமைக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆசைக்கு உதவியது மெக்காலே கல்வி முறையும், கிரிக்கெட்டும் தான்.உயர் ஜாதி இந்துக்கள் தன்னை ஆங்கிலேயர் போல காட்டிக்கொள்ள விருப்பமுடன் எடுத்துக் கொண்டவை மெக்காலே கல்வி முறையும், கிரிக்கெட்டும்.


கிரிக்கெட் எப்போதும் போல் அன்றிலிருந்து இன்று வரை உயர்ஜாதி விளையாட்டாகவே அறியப்படுகிறது.கால்பந்து,ஹாக்கி,கூடைப்பந்து, வாலிபால் போன்ற விளயாட்டுகளுக்கு தேவையான உடல்வலு,ஒன்றரை மணி நேர தொடர்ந்து விளையாடுவதற்கு தேவையான சக்தி (Stamina) கிரிக்கெட்டிற்கு தேவை இல்லை..ஆகவே ஆரம்பத்தில் இது ..ஏன் இன்று வரை கிரிக்கெட் என்பது பார்ப்பனர்களுக்கும் மேட்டுக்குடி முஸ்லிம்களுக்குமான விளையாட்டாகிப் போனது. இந்தியாவில் உள்ள உடல் உழைப்பற்ற சிறுபான்மையினராக உள்ள உயர்ஜாதியினர் எப்படி பெருமான்மை சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அதன் அடிப்படையே கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

அதுமட்டுமல்ல.. மீடியாவின் துணையோடு தூக்கிநிறுத்தப்பட்ட ஒரு விளையாட்டு..


விடுதலை அடைந்தும் இன்றுவரை தமிழர்கள் நீதிமன்றத்திலும் அரசு அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் தமிழர்கள் யாருமே கேட்காமல் மீடியாக்களால் முதன் முதலாகக் கிடைத்த மொழிபெயர்ப்பு எது தெரியுமா? கிரிக்கெட் வர்ணனை ..வானொலி காலங்களிலே , அதைப் பற்றி தெரிந்தவர்கள் 5 விழுக்காடுக்கும் குறைந்து இருந்த போதிலும் கிரிக்கெட்டைப் பரப்ப ஆதிக்க சக்திகள் வர்ணனையை 70களிலேயெ தமிழ்ப்படுத்தி அறிமுகம் செய்தனர்.. இது ஒரு வியாபார உத்தி.. தொலைக் காட்சிகளில் தொகுப்பாளர்கள் என்ன தான் தமிழைக் கொலை செய்தாலும் , விளம்பரம் மட்டும் தமிழில் தான் வரும்..ஏனென்றால் வியாபரம்..காசு.. 90களுக்குப் பிறகு வந்த தொழில் நுட்ப முன்னேற்றத்தால், செயற்கைகோள் உதவியுடன் விடு தோறும் இது திணிக்கப்பட்டது.. தொலைக் காட்சிகளும் கோத்ரா ரயில் எரிப்பை விட அப்பொழுது நடைபெறப் போகும் உலகக் கோப்பை பற்றிதான் அதிகம் கவலைப்பட்டன..அதனால் தான் 7 அல்லது 8 நாடுகளே கலந்து கொள்ளும் ஒரு போட்டிக்கு உலகக் கோப்பை என்று பெயர்..இந்தப் பித்தலாட்டத்தை கேட்கும் நிலையில் யாரும் இல்லை.. ரசிகர்கள் எல்லோரும் ஒரு உன்மத்த நிலையில் இருக்கும் போது என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம்..என்பது தான் இதன் அடிப்படைத் தத்துவம்.

விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..அண்மையில் நடந்த கால்பந்திற்கான உலகக் கோப்பையின் எல்லாப் போட்டிகளையும் அனுபவித்துப் பார்த்தவன் . பாரதியாரின் “ஒடி விளையாடு பாப்பா” என்பது என் தாரக மந்திரம் போன்றது.. ஆனால் அது மாலையிலோ, காலையிலோ ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ வியர்க்க வியர்க்க விளையாடவேண்டும்.. 8X5 நாட்கள் தொடர்ந்து விளையாடி வெற்றி தோல்வி இன்றி முடிந்து நமது காதுகளில் பூக்கள் சுற்றுவது இந்த விளையாட்டு மட்டும் தான்.. இங்கிலாந்தில் வெய்யிலில் நாள் முழுதும் நிற்க கண்டுபிடித்த ஒரு பொழுதுபோக்கை விளையாட்டு என்று நினைத்து நமது தமிழக மக்கள் வெய்யிலில் நிற்பதைப் பார்த்தால் ’நெஞ்சு பொறுக்குதில்லையே” ..டெஸ்ட் போட்டிகளால் நேரம் தான் வீணாகிறது என்று மக்கள் முடிவுக்கு வரும் நிலையில்., கூட்டம் குறைவைதைப் பார்த்து ,ஒரு நாள் போட்டிகள்., அதற்கும் கூட்டம் குறையத் தொடங்கவே 20/20(கூட்டம் என்று நான் குறிப்பது வருமானம்) என்று தமிழ் திரைப்படங்களில் விறுவிறுப்புக்கு எதையாவது சேர்த்து படத்தை ஓட வைக்க விரும்பும் நிலைதான் இங்கும்.. ஏனென்றால் இரண்டுக்கும் வருமானம் தான் முக்கியம்..

Team work என்பது அறவே இல்லாத ஒரு விளையாட்டு..அதனால் தான் இந்தியா தயாரித்த வீரர்களில் கபில்தேவ் , ஸ்ரீகாந்த் தவிர யாருமே இன்றுவரை நாட்டுக்காக விளையாடியதாகத் தெரியவில்லை. எல்லொருமே தனக்காகத் தான் விளையாடுவார்கள்..சமூகத்தில் கால்பந்து போன்ற குழு ஒத்திசைவுடன் இயங்கும் விளயாட்டு ஒதுக்கப்பட்டு, கிரிக்கெட் போன்ற தனிநபர் ஆட்டத்திறனை முன்னிறுத்தும் கிரிக்கெட் வளர்ச்சிக்கும்,கூட்டுக் குடும்ப சிதறல்களுக்கும் தொடர்பு இருக்குமா என்பது சமூக வல்லுநர்களால் ஆராயப்படவேண்டிய ஒன்று..

இத்தனைக்கும் மேலாக, இன்று சூதாட்டம் தான் இதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.இதை யாருமே மறுக்க முடியாது..

அரசு அதிகாரம், அதில் உள்ள உயர்ஜாதி ஆதிக்கம்,உயர்ஜாதி ஆதிக்கத்தின் பிடியில் இன்று வரை உள்ள மீடியாக்கள் இவை அனைத்தும் சேர்ந்து கிரிக்கெட்டை உச்சத்தில் வைத்துள்ளன..மக்கள் சேவை செய்ய வந்த மத்திய அமைச்சர் கூட, இதில் அதிகம் பணம் புழங்குவதால், அமைச்சர் பதவியை விட்டு விலகி, கிரிக்கெட் அமைப்பிற்கு தலைவராகச் செயல்பட விருப்பமாக உள்ளார்.


இந்தக் கட்டுரைக்கு என் வீட்டிலேயெ எனக்கு பலத்த எதிர்ப்பு இருக்கலாம். என் மகன்களே எதிர்ப்பார்கள்.ஆனாலும் நான் எழுதுவதன் காரணம் இந்தியாவை நான் நேசிக்கிறேன் ..அதாவது இந்தியா என்ற தேசத்தை அல்ல.. இந்திய நாட்டின் மக்களை, வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் 60 விழுக்காடு மக்களை.. ஆகவே இந்திய முன்னேற்றதிற்கு தடையாக இருக்கும் பல காரணங்களில் மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது மதத் தீவிரவாதம், கிரிக்கெட் சூதாட்டத்தின் நேரவிரயம்..


இதன் பிடியிலிருந்து தமிழர்கள் வெளிவரவேண்டும் என்பது தான் என் ஆசை.இன்னும் சில வருடங்களில் இந்தியா திரும்பியவுடன் அங்கங்கு உள்ள நண்பர்கள்,உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டவர்களை ஒருங்கிணைத்து தமிழர்கள் மனதில் முன் இருக்கையில் இருக்கும் கிரிக்கெட்டை அந்த இடத்தில் இருந்து பின் இருக்கைக்கு நகர்த்தி ஒரு கால்பந்தோ, வாலிபாலோ, ஹாக்கியோ முன் இருக்கையில் குடியேற்றி வைக்க வேண்டும்., அதற்காக ஒரு இயக்கம் தேவைப்பட்டால் கூட ஆரம்பிக்கலாம்..

ஆதரவு வேண்டி நிற்கிறேன்
நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com