செவ்வாய், 5 ஜனவரி, 2010

இலவு காத்த கிளி- வைகோவின் அரசியல்

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., முதலவராகவும் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த நேரம். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நான் நான்காம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டு இருந்தேன் கல்லூரியின் தமிழ் மன்ற அமைப்பின் செயலர். 1979 என்று நினைக்கிறேன். காரைக்குடியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் சித.சிதம்பரம் இல்லத்திருமண விழாவுக்கு தலைவர் கலைஞர் வர, அவரை கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கவேண்டி அழையா விருந்தாளியாக அத்திருமணத்திற்கு சென்று இருந்தேன்.. நான் சென்ற அமர்ந்த சிறிது நேரத்தில் வை.கோபால்சாமி அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். அசந்து போனேன்.அமர்ந்திருப்போர் அனைவரையும் ஒரு நிமிடத்தில் தன் வயப்படுத்திய பேச்சு.அழகான உச்சரிப்புடன் ஏற்ற இறக்கங்களுடன் அவர் மேற்கோள் காட்டிய ஒவ்வோன்றும் இன்றும் என் காதில் ரீங்காரமிடுகின்றன. அது நாள்வரை திருமணத்தம்பதிகளை வாழ்த்தப் பயன்படும் அடுக்குமொழி வாக்கியங்களான “நிலவும் வானும், மலரும் வாசமும்,பூவும் தேனும் என்று தொடர்ந்து சொல்லி, இவைகளைப் போல் இருங்கள் என்று வாழ்த்த மாட்டேன். ஏனென்றால் இவைகள் பிரிந்தும் காணக்கிடைக்கின்றன. ஆகவே மணமக்களை, கலைஞரும் தமிழும் போல, கலைஞரும் அரசியலும் போல, கலைஞரும் தொண்டர்களும் போல ..என்று பல்வேறு வசனங்களால் கலைஞர் புகழ் பாடி அம்மணமக்களை வாழ்த்தினார்.அதுவரை கலைஞருடைய பேச்சுக்கு மட்டுமே அடிமையாகி இருந்த நான் அன்று முதல் சிவகங்கை மாவட்டத்தில் எங்கு பேசினாலும், பின்னாளில் சென்னையில் எங்கு பேசினாலும் வைகோவின் கூட்டங்களில் என்னைப் பார்க்க முடியும்.1988 – நாடாளுமன்றத் தேர்தலில் “எனது போர்வாள்” என்று கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டு, சிவகாசித் தொகுதி மூலமாக தேர்தலில் முதன் முதலாக வைகோ, காளிமுத்துவை எதிர்த்து போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் காளிமுத்துவிடம் தோல்வி அடைந்தார். அத்தேர்தலின் பரப்புரையின் போது ஆலங்குளம் அரசு சிமிண்ட் தொழிற்சாலையின் விருந்தினர் விடுதியில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் அது சமயம் காளிமுத்து , வைகோவைப் பார்த்து “ உனக்கென்னப்பா..தோத்தாலும் ஜெயித்தாலும் நீ எம்.பி.. நான் ஜெயித்தால் தான் எம்.பி என்று சொன்னதாக தகவல்.அதே மாதிரி தோற்றபின்பும் கலைஞரால் , மாநிலங்களவை எம்.பியாக பதவி பெற்றார்.
குறைந்த நாளே ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ஆட்சியில்,அந்நாளைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கிட்ராமன், ஆளுநர் பரிந்துரை இல்லாமலே தி.மு.க ஆட்சியை கலைக்க, 1991 தமிழக மக்கள் மீது ஒரு சட்டசபைத் தேர்தல் திணிக்கப்பட்டது.ராஜிவின் மரணம்,அதை தொடர்ந்து ஜெ. முதல் முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் தி.நகரில் வைகோ கூட்டம். அங்கும் இருந்தேன். கூட்டத்தைப் பார்த்து ஏதோ கேள்வி கேட்க, பொது மக்கள் “தேவடியா” என்று உரக்கச் சொன்னதையும், அந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒரு அமைதி காத்து, பின்பு பேச்சைத் தொடர்ந்ததும் எனக்கு நன்கு நினைவில் உள்ளது.


92-ல் நான் சவூதி வந்தபோது இணைய வசதி, கைபேசி வசதி எல்லாம் கிடையாது.இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப்பின்னர் தான் தினமணி கிடைக்கும். 93-ல் வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பொழுது கலைஞர் தவறு செய்கிறார் என்றுதான், எனக்குக்கிடைத்த முதல்கட்ட தகவல்படி நான் யோசித்தேன் ஆனால் தொடர்ந்து வைகோ நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றத்தை தந்தன. தி.மு.கவின் சில மாவட்டச் செயலர்கள் உதவியோடு தி.மு.கவின் சின்னத்தை முடக்கத் திட்டமிட்டது என்று வீணாய்ப் போன காரியங்களில் ஈடுபட்டது அவர் மேல் அவநம்பிக்கையையை உண்டு பண்ணியது. அப்படி இப்படி என்று தனியாக கட்சி ஆரம்பித்து, தமிழகமெங்கும் சுற்றி வந்தார். அதன்படி 94-ல் ஒருமுறை அவருடய நடைபயணத்தில் திருமங்கலம் முதல் மதுரை வரை நானும் வந்தேன். அவருடைய மக்கள் செல்வாக்கு அறிவதற்காக.. ஜெ.வின் முதல் கட்ட ஆட்சியில் அவருக்கு எதிராக மக்களைத் திரளச்செய்ததில் வைகோவிற்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் 96 சட்டமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை தானே பெரிதாக நினைத்துக் கொண்டு பா.ம.கட்சியை விலக்கிவிட்டு மார்க்ஸிஸ்டோடு கூட்டணி வைத்துக்கொண்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். தி.மு.க.,ம.தி.மு.க என்று தொகுதிப் பங்கிட்டிற்காக அலைந்து கலைஞரை “பெரிய அண்ணன்” என்றும் வைகோவை “சின்ன அண்ணா” என்று ராமதாஸ் நொந்து போய் பேட்டி கொடுத்தது உண்டு.தமிழ் மாநிலக் காங்கிரஸ் மூப்பனார் தந்த தெம்பினால் பா.ம.கவை கலைஞர் உதாசீனப்படுத்தினார் என்றால், வைகோ எந்த நம்பிக்கையில் அப்படிச் செய்தார் என்று இன்றுவரை தெரியவில்லை.


தி.மு.க ஆட்சிப்பொறுப்புக்கு வந்து ஜெ.மீது பல வழக்குகளை போட்டு,ஜெ-சசிகலாவுடன் உடல் முழுதும் நகை அணிந்த புகைபடங்களை பத்திரிக்கைக்கு வெளியிட்டு ஜெ.யை முடக்கி வைத்த நேரத்தில்,தமிழகத்தில் ஒரு பொறுப்பான எதிர்கட்சி இல்லாத நல்ல வாய்ப்பை, ஒரு வெற்றிடத்தை, தி.மு.கவிற்கு மாற்று ம.தி.மு.க என்று மக்களிடையே ஒரு நம்பிக்கையை கட்டி எழுப்பாமல் போனதுதான் வைகோவின் எதிர்காலம் சூன்யமானதற்கு முக்கிய காரணம். இதுவரை எந்த ஜெ.வை எதிர்த்து அரசியல் பண்ணி வந்தாரோ, அவர் காலிலே 98 நாடாளுமன்றத் தேர்தலின் போது மண்டியிட்டது வைகோவின் மிகப்பெரும் சறுக்கல்.
முடங்கிக் கிடந்த ஜெ.விற்கு மறுவாழ்வு கொடுத்தது 98 நாடாளுமன்றத் தேரதல்.மைய அரசுக்கு கொடுத்து வந்த வாய்ப்பை ஜெ. விலக்கிக் கொள்ள, அணி மாற்றங்களால் தி.மு.க அணியில் ம.தி.மு.க..இணைந்தது. கலைஞருக்குப் பிறகு தி.மு.க என்ற கட்சி இல்லாமல் போய்விடும் என்ற பார்வையில், அடுத்து வந்த ஜெ.ஆட்சியில் வைகோ தான் தன் முதல் எதிரியாகப் பார்க்கப்பட்டார். தேவையில்லாமல் ஏதோ காரணங்களைக் காட்டி “பொடா” சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


முரசொலி மாறன் மறைவை அடுத்து தலைநகர் டெல்லியில் தி.மு.கவிற்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நாம் நிரப்பிக்கொள்ளலாம்,கலைஞர் அந்த வாய்ப்பை தனக்கு வழங்குவார் என்ற வைகோவின் நம்பிக்கையை கலைஞர் துடைத்தெறிந்து விட்டார், தயாநிதி மாறனை அறிமுகப்படுத்தியதன் மூலம். டெல்லியில் மறுபடி ஆட்சி செய்யலாம் என்ற அந்த நம்பிக்கையும் பொய்த்துப்போனதுமே, கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கழன்று கொண்டார்கள். பின்னர் வேறு வழி தெரியாமல் தன்னை கைது செய்து சிறையில் அடைத்த ஜெ.வுடன், தமிழ் ஈழம் என்றாலே வெறுப்பைக்கக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்த ஜெ.வுடன் கூட்டணி, ஜெ.வை மறுபடி முதல்வராக்கிக் காட்டுவோம் என்ற வைகோவின் அந்தர்பல்டிகள் அவரை ஒரு அரசியல் கோமாளியாக்கியது.


இதற்கு மேலும் அவருடைய ஒரே நம்பிக்கை கலைஞருக்குப் பிறகு தன் பின்னால் , தி.மு.க தொண்டர்கள் வருவார்கள், தமிழக அரசியலில் தனக்கு மிகப்பெரிய இடம் கலைஞர் காலத்திற்குப்பிறகு கிடைக்கும் என்பதுதான். அதிலும் நடந்து முடிந்த 10 இடைத்தேர்தல்களை வைத்துப் பார்த்தால்,பாவம் ஒரு இலவு காத்த கிளி உருவாகிக்கொண்டுள்ளது என்றுதான் தெரிகிறது. கலைஞர் தேர்தல் பொறுப்புகளை ஸ்டாலினிடமும்,அழகியிடமும் ஒப்படைத்த பின்பு, ஜெ.விற்கே எதிர்காலம் இல்லை எனபது தான் உண்மை. தேர்தல்,ஜனநாயகப்படி நடந்தாலும் முடிவு என்னமோ பண ஆட்சிதான். கலைஞர் அவ்வளவு எளிதில் பணம் செலவிழிக்க மாட்டார்,ஜெ.வால் அதிகமாக செலவழிக்க முடியும் என்ற ஒரே காரணம் தான் ஜெ.இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம்.


ஆனால் , இப்பொழுது உள்ள சூழ்நிலையே வேறு. ஸ்டாலினின் நிர்வாகம் அதற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் அழகிரியின் தேர்தல் களப்பணிகள் ( அதிகம் பணம் செலவழிப்பது என்பது தான் தேர்தல் களப்பணியில் முக்கியமானது), இத்துடன் தற்போதைய தி.மு.க ஆட்சியின் மக்கள் நலத்திட்டப் பணிகள் எல்லாம் சேர்ந்து , இன்றைய நிலையில் தி.மு.கவிற்கு மாற்று எந்தக்கட்சி என்று தேடவேண்டியுள்ளது. இதே நிலை நீடித்தால், கலைஞருக்குப்பிறகு, தொண்டர்கள் அணி மாறுவதற்கு வாய்ப்பு எதுவும் இருப்பதாகப் படவில்லை.அதில் ஜெ.வை முதல்வராக்க சபதம் எடுத்து தெருத்தெருவாக சுற்றி வந்த வைகோ, இனிமேல் என்ன சொல்லி தனக்கு வாக்குகேட்பார், தனது கட்சியான ம.தி.மு.கவை, தன்னை நம்பி வந்த தொண்டர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கே விடை தெரியாத ஒரு பெரும் கேள்விக்க்குறி.
ஸ்டாலினின் அமைதியான அடக்கமான அரசியலுக்கும், அழகிரியின் அதிரடியான அரசியலுக்கும் கிடைத்துள்ள மக்கள் வரவேற்பை புரிந்து கொண்டால், கலைஞருக்குப் பின்னால் தன் பின்னே தி.மு.கவின் தொண்டர்கள் வருவார்கள் எனபது ஒரு நப்பாசை தான் என்பதும்,தான் ஒரு இலவு காத்த கிளிதான் என்பது வரப்போகும் காலம் வைகோவிற்கு உணர்த்தும்.

பின் குறிப்பு: வைகோவின் அரசியல் எதிர்காலம் பற்றியே இக்கட்டுரை. மற்றபடி கலைஞரின் குடும்ப அரசியலுக்கு நான் என்றுமே ஆதரவாளன் அல்ல.
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

8 கருத்துகள்:

முத்தரசன் சொன்னது…

கலக்கல் கட்டுறை தல... சிறுவயதில் நானும் வைகோவின் பேச்சை கேட்டு அசந்து போயிருக்கிறேன்... அவர் கோமாளி ஆனதில் எனக்கும் வருத்தமே... வைகோ...... ராமதசு... விசயகாந்த் யாருமே மாற்று சக்திக்கான நம்பிக்கையை நமக்கு அளிக்கவில்லை என்பதும் உண்மை... கலைஞரின் பிள்ளைகளிம் ஸ்டாலின் சிறத்த நிர்வாக திறமை உள்ளவர் என்பது என் கருத்து.. கடிசியையும் மதுரைகாரரையும் எப்டி சமளிக்க போகிறார் என்பதி பொருத்தே எதிர்காலம்...

rgds
muthu

குப்பன்.யாஹூ சொன்னது…

அருமையான கட்டுரை.

ஆனால் அழகிரி மீது அநியாயமாக குற்றம் சுமத்துகிறோம் நாம்.

ஆர்குட் விவாத குழுமத்தில் ஒரு நண்பர் அருமையாக சொல்லி இருந்தார்.

எம்ஜியார் ஆட்சியில் கலைஞரோ அழகிரியோ, ஒரு வாக்காளரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் கூட, இரட்டை இலை தவிர வேறு எந்த சின்னத்திற்கும் வாக்கு அளிக்க மாட்டார்.

அப்படி இருந்த அதிமுக வாக்களர்களை இன்று திமுக பக்கம் திருப்பியது அழகிரியின் பணம் மட்டும் அல்ல, அம்மாவின் கொட நாட்டு கோமாளித் தன அறிக்கைகளும் தான். பொறுப்பற்ற எதிர்கட்சி பணியும் கூட.

பணம் மட்டுமே வாக்குகள் பெரும் என்றால், ஜார்கண்டில் காங்கிரசால் வாக்குகளை விலைக்கு வாங்கி இருக்க முடியுமே. ஏன் ஜெயலலிதாவிடம் இல்லாத பணமா, இன்றைய சூழ்நிலையில் அதிமுக கட்சி ஒரு வாக்கிற்கு முப்பதாயிரம் கொடுத்தாலும் அதிமுக விற்கு வாக்கு அளிக்க மாட்டார்.


வைகோவின் தோல்விக்கு மிக முக்கிய காராணம், கண்மூடி தனமான விடுதலை புலி ஆதரவு கொள்கை. உள்ளூர் பிரச்னைகள் ஆயிரம் இருக்க, அதை விடுத்து மக்களை மொழி அடிப்படையில் உசுப்பு எத்தி விட நினைத்தார், அது என்றுமே ஜெயிக்காது

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

நிறைய விஷயங்களை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.ஆனால் இன்றும் வைகோவிற்கென தனி வாக்குவங்கி உண்டு. அவர் ராமதாஸ் அளவிற்கு கெடவில்லை.

அ.வெற்றிவேல் சொன்னது…

வலத்தளத்திற்கு வந்ததற்கு நன்றி இளங்கோ அவர்களே! உண்மையில் அவர் கோமாளியாகிப் போனது வருத்தமே. தி.மு,கவிற்கு மாற்று ம.தி.மு.க என்று இருந்திருந்தால்,தமிழக உரிமைகள் (முல்லைப் பெரியார்) மீட்டெடுக்க இரண்டு கட்சிகளுக்கும் போட்டி வரும்.இப்பொழுது போட்டியே காங்கிரஸுடன் யார் கூட்டணி வைப்பது என்பதில் இருக்கிறது.அது தான் இன்றைய அவல நிலைக்கு காரணம்

அ.வெற்றிவேல் சொன்னது…

அன்புள்ள குப்பன் அவர்களுக்கு., உங்கள் கருத்தோடு 100 விழுக்காடு எனக்கு உடன்பாடு உண்டு. ஜெ.விடம் இல்லாத பணமா?நீங்கள் சொன்னது போல் முப்பதாயிரம் குடுத்தால் கூட அ.தி.மு.கவிற்கு யாரும் வாக்களிக்க‌
மாட்டார்கள் என்பது தான் உண்மை.ஜெ.விற்கு உள்ள ஒரே நம்பிக்கை..தனது ரத்த உறவுகளைக் கொண்ட ஊடகங்கள்,பொதுத் தேர்தல் நேரத்தில் தம்மைப் பெரிதாகக்காட்டுவத்ன் மூலம்,அப்போது அமையப்போகும் கூட்டணி மிகப் பலம் வாய்ந்தது என ஊடகங்கள் காட்டுவது மூலம், தனது வாக்கு வங்கியினை மீட்டெடுக்கலாம் என்பது தான்.அதற்கு இப்பொழுது வாய்ப்பிலை என நினைக்கிறேன்.ஊடகங்கள் தனக்கு துணைக்கு வரும் என்ற நம்பிக்கையில் தான் மகாமகக் குளியல் ஆகட்டும், கொடநாடு கோமாளித்தனம் ஆகட்டும்.எல்லாம் நடப்பது.எனக்குத் தெரிந்து சரத்குமார் மட்டும் தான் இவ்வளவு ரிலாக்ஸ்யாக‌ கட்சி நடத்துவது என்று நினைக்கிறேன்.

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ராம் அவர்களே!வைகோவின் வாக்கு வங்கியில் மிகப் பெரும் சரிவு என்பது தான் உண்மை.ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கூட போன தேர்தலில் ஜெ.யை ஆதரித்ததன் மூலம் , ஈழப் பிரச்ச்னையை அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்ற எண்ணம் வந்துள்ளது. ஒரு பக்கம் பிரபாகரன் என்றும், இன்னொரு பக்கம் ஜெ.யை முதல்வராக்குவோம் என்பதும் எக்காலத்திலேயும் ஒத்துப்போகாத விஷயஙகள் அல்லாவா?

Thenammai Lakshmanan சொன்னது…

வெற்றிவேல் சார் உங்க இலவு காத்த கிளி என்ற இடுகையும் அருமை
வைகோவை பற்றிய அருமையான பதிவு

அவரிடம் மிக எதிர் பார்த்தோம் ஆனால் நாம் தான் ஏமாந்துவிட்டோம் எனக் கூற வேண்டும்

Unknown சொன்னது…

வணக்கம்.நண்பரே.நானும் அழகப்பா பொறியியல் கல்லூரி மாணவன் தான்.உங்களை இனையத்தின் மூலம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.மற்ற படி வைகோ பேசும்போது நான் ரிமோட் டை இப்போதும் தேடியதில்லை.அது எதனால் என்று தெரியவிலை.அரசியல் கொள்கைகள் வேறு.
அப்படியே என்னோட பதிவையும் பாருங்க.

கருத்துரையிடுக