( இது மதம் சம்பந்தமான கட்டுரை அல்ல.. தமிழக மக்கள் மனநிலை குறித்து ஒரு அலசல்..அது மட்டுமே..)
1967 பொதுத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் வீடு வீடாக மிட்டாய் கொடுக்க, அதனைப் பெற்றுக் கொண்டவன் அவர்கள் பின்னாலே போக , அவர்கள் கடைசியில் போய் நின்றது “ அண்ணா படிப்பகம்” அந்த கால கட்டத்தில் சிவகங்கை முழுதும் தெருவுக்கு ஒரு படிப்பகம் இருந்தது. இப்படித்தான் வீட்டுக்குள் இருந்தவன் வெளியில் வந்தேன். 3வதில் அல்லது 3 முடித்து கோடைகால விடுமுறையாக இருக்கலாம்.அன்று ஆரம்பித்த பழக்கம் தான்.. வீடு தாண்டி, தெரு,நகரம், மக்கள், அரசியல், சினிமா என்று ஒவ்வொன்றையும் பார்ப்பதும், பார்த்து வியப்பதும் இன்றுவரை ..
இந்த 40 ஆண்டுகளில் தான் என்னென்ன மாற்றங்கள்..தினசரி அம்மா கொடுக்கும் 2 காசு வாங்கிப் போய் கமர்கட்..சூட மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டேன் என்பது நம்புவதற்கு கடினம். 5 காசுக்கு கீரைக்கட்டு வாங்கி வருவேன்..
வளர்ந்தது முழுக்க முழுக்க அக்கிரஹாரத்தில்..எங்கள் வீட்டின் நேர்பின்புறம் கவியோகி சுத்தானந்த பாரதியின் வீடு..சிவகங்கையில் ஒரு கோயில் விடுவது கிடையாது..கோயில் விஷேங்கள் எல்லாவற்றிலும் எங்கள் சிறுவர் குழாமுக்கு முக்கிய பங்குண்டு. நவராத்திரி என்றால் அக்கிரஹாரத்தில் எங்கள் இல்லம் தவிர பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என அனைவரது இல்லங்களிலும் அற்புதமான கொலுவும் , தினம் தினம் வித்தியாசமான சுண்டலும்..மார்கழி மாதம் முழுதும் அதிகாலை எழுந்து, கோலம் போடும் அக்காவிற்கு துணையாக போர்வை போர்த்திக் கொண்டு இருப்பதும், வெளிச்சம் வருமுன்னர் குளிரில் குளித்துவிட்டு , கோயில் கோயிலாகப் போய் வருவதும் ,திருப்பாவை, திருவெம்பாவை எனப் பாடிக்கொண்டு, பஜனை கோஷ்டியுடன் ஒத்த அக்கிரஹாரம், ரெட்டை அக்கிரஹாரம் சுற்றி வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று.பெரும்பாலும் டிசம்பர் 15 மார்கழி பிறக்கும் போது அரைப்பரீட்சை முடிந்திருக்கும்..மார்கழி கொண்டாட்டங்கள் எனபது அரைப்பரீட்சை (அரையாண்டுத் தேர்வு) விடுமுறையைக் கொண்டாடும் ஒரு விழா...
இப்படித்தான் எனக்கு சைவமும் வைணவமும் சின்ன வயசிலே அறிமுகம். சைவ , வைணவ சண்டையில் தான் கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் அத்தியாயம் ஆரம்பிக்கும்..அது கொடுத்த தூண்டுதல்,நெல்லை சைவசித்தாந்தக் கழகம் வெளியிட்ட சைவ சமய கையேடு ( நாம தான் பொட்டலம் மடித்துக் கொடுக்கும் காகிதத்தையும் விடுவது கிடையாதே)..திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிரசங்கம் என சிறு வயதில் ஒரே ஞானப்பால் தான்..அது மட்டுமின்றி கோயில்களில் தொடர் சொற்பொழிவுகள்..என அன்னைத் தமிழையும் சைவத்தையும் திகட்டதிகட்ட கொடுத்தார்கள்..
அதே சமயத்தில் அரசியலில் காமராஜர், சிவாஜி ஒரு அணியாகவும், கருணாநிதி எம்.ஜி.ஆர் ஒரு அணியாகவும் மற்றும் எம்.கல்யாணசுந்தரம் வலதாகவும்,பி.ராமமூர்த்தி இடதாகவும் அணி வகுத்து வந்த காலம்.தமிழ் திரையுலகிலோ சிவாஜி., எம்.ஜி.ஆர்., ஜெமினி என மூவேந்தர்களின் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்தது. திரை உலகுக்கு வேண்டுமானல் மூவேந்தர்கள் ..ஆனால் ஆன்மிகத்தில்..இன்று போல் அதிகளவில் கஞ்சா சாமி, கார்ப்பரேட் சாமி என யாரும் கிடையாது.கோயில் கருவறைக்குள் இருக்கும் சாமி மட்டும் தான்.
அங்கேயோ..
ஒரே ஒரு கொடிதான் உயரப் பறந்து கொண்டு இருந்தது. “சேவற்கொடி”. அந்தக் காலத்தில் எங்கு நோக்கினாலும் முருகன் தான். பக்திப்பாடல்கள் அனைத்தும் முருகனைப் பற்றியதே. சீர்காழி,டி.எம்.எஸ், சூலமங்கலம் சகோதிரிகள், கே.பி.சுந்தராம்பாள்,பெங்களூர் ரமணி அம்மாள் என முருகனைப் பற்றி மட்டுமே பெரும்பாலான பாடல்கள்.
அது மட்டுமல்ல..முருகருக்கு பரப்புரை அணித்தலைவராக ஆன்மிகத்தில் திருமுருக வாரியார் சுவாமிகளும், திரைஉலகத்தில் தேவர் அவர்களும் இருந்தார்கள்.தமிழ் சொல்லிக் கொடுத்த தமிழாசிரியர்கள் அனைவரும் அந்தக் காலத்தில் திராவிட இயக்கப் பின்ணனியில் இருப்பவர்கள்.கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்கள் .இருந்தும் தமிழ்க்கடவுள் எனவும் , குறிஞ்சித் தலைவன் எனவும் முருகனைத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.டி.வி. இல்லாத அந்தக்காலங்களில் எந்தக் கோயில் திருவிழாக்களிலும் வள்ளி திருமணம் இல்லாத விழாக்களே கிடையாது..
உட்காரவும்,எழுந்து நிற்கவும் எந்த வேலை தொடங்கினாலும் “ முருகா, ஞானபண்டிதா’ என்பதுதான் மூச்சுக்கு முன்னால் வந்து நிற்கும் முதல் வார்த்தை.அப்பா, அம்மா, அப்பத்தா, தாத்தா ,மாமா பாட்டி என என் வீட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தெருவில் யாரைச் சந்தித்தாலும் முருகா தான்.
இப்ப நிலைமையே வேற..எப்ப என்ன நடந்தது என்றே தெரியவில்லை.ஏதோ சிவாஜிக்கு மார்க்கெட் போய், ரஜினிகாந்த் வந்த மாதிரி..அபூர்வ ராகங்களில் முதல் முறையாக ரஜினியைப் பார்த்தவர்கள் இன்னும் பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இவர்தான் என்றால் யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க முடியாது..அதே நிலை தான்..இன்று சூப்பர் ஸ்டாராக உள்ள பிள்ளையாருக்கும். வருடத்தில் ஒரு நாள் பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபட்டு அடுத்த நாள் அதையும் கிணற்றிலோ குளத்திலோ கரைத்து விட்டு பிள்ளையாரை மறந்துவிடுவது தான் எனக்கும் என்னையொத்த சிறுவர்களுக்கும் எங்களது மூதாதையர்கள் சொல்லிக்கொடுத்த வழிபாடு.வீட்டில் பெரும்பாலும் பிள்ளையாரை வணங்குவதற்கென்று ஒன்றும் இருக்காது.அதன் காரணமாகத்தான் வெளியில் இருந்து பிள்ளையாரை காசு கொடுத்து வாங்கி வரும் வழக்கம் தமிழர்களுக்கு இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
இது இப்படி என்றால்., அன்று சிவகங்கையில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு மலையாளி கறுப்பு வேட்டி சட்டை கட்டி அய்யப்பன் கோவில் போவார். அன்று சிவகங்கை நகர் முழுவதற்கும் ஒருவரோ இருவரோ அய்யப்பன் கோவிலுக்கு போனதாக எனக்கு ஞாபகம். அது மனதில் தங்கி இருக்கும் படியான நிகழ்வும் இல்லை. என் ராசாவின் மனசிலெ படத்திலே “போடா போடா புண்ணாக்கு” என்று ஒரிரு காட்சியில் வந்து போன வடிவேலு மாதிரி.
இன்று தமிழர் வாழ்வில் அய்யப்பனுக்கும் பிள்ளையாருக்கும் உள்ள இடம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் ரஜினிக்கும் வடிவேலுக்கும் உள்ள இடம் மாதிரி. இவர்களை உதாரணம் காட்டுவது, சினிமாவில் இருந்து காட்டினால் நான் சொல்ல வந்த கருத்து மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகவே அல்லாமல் ரஜினியின் உழைப்பைபோ,வடிவேலு என்ற கலைஞனின் அபாரத்திறமையையோ குறைத்து மதிப்பிட இல்லை.
ஒரு திருமணப்பத்திரிக்கை வாங்குவதற்காக திருமண அட்டைகள் விற்கும் கடைக்குள் நுழைந்தால், மருந்துக்கு ஒன்றுகூட தமிழக்கடவுள் முருகன் படம் போட்டது இல்லை..ஏன் என்றால் அதுக்கு ஒரு லாஜிக்..முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி என..அதுனால அதை யாரும் வாங்க மாட்டாங்க..அப்ப பிள்ளையார் யாருக்கும் தெரியாமல் வட இந்தியாவிலோ எங்கேயோ சித்தி புத்தின்னு ரெண்டு பொண்டாட்டியோட இருக்கறதா ஒரு கதை இருக்கே..அது மாதிரி யாருக்கும் தெரியாமல் வைச்சுக்கலாமா?ன்னு கேட்டால் என் மனைவியே என்னைத் திட்டுகிறார்கள் எனக்கு இன்று உள்ள டிரெண்ட் ஒன்றுமே தெரியவில்லை என்று பொது இடம் என்றும் பாராமல்.. சாமிக்கும் டிரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என எனக்குத் தெரியவில்லை. இது என்ன சினிமாவா? தமிழ் மக்கள் எல்லாவற்றையும் சினிமாவாகத்தான் பார்க்கிறார்களா? இன்னொரு காரணம் சொல்கிறார்கள்.. பிள்ளையாரை கும்பிட்டால் நல்ல செல்வம் வருமாம்..அப்ப தகப்பன் சாமி எனவும், ஞானபண்டிதன் என அறிவுக்கும் அழகுக்கும் கடவுளாக உள்ள முருகனிடம் இருந்து அறிவும் அழகும் தேவையில்லையா?
இது எப்படி நடந்தது? 40 வருடங்களில் தமிழர் வாழ்வில் ஏனிந்த மாற்றம்?
நல்ல வியாபாரத்தந்திரத்துடன், ஒரு நிறுவனம் பலப்பல வியாபார நுணுக்கங்களுடன் விளம்பரப்படுத்தி மக்களை சென்றடைந்தால் அந்தப் பொருள் நன்கு விற்பது போல் அல்லவா இருக்கிறது இது? தமிழர்களிடம் எதையும் எப்படியும் கொண்டு போய் சேர்த்துவிடலாம் என்று.. அக்ஷ்ய திரிதியையாகட்டும், வாஸ்தாகட்டும்,Laughing Buddha வாகட்டும்.... கிரிக்கெட்டாகட்டும் . எல்லாவற்றையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்வார்கள் போல..அதுவும் சரிதான் ..அதுதான் அறிவே வேண்டாம் என முருகனை ஒதுக்கி வைத்து உள்ள சமுதாயம் தானே..
மனவியல் நிபுணர் மருத்துவர்.ருத்ரன் அய்யா தான் இது குறித்து தமிழர்கள் மனநிலை மாற்றங்கள் பற்றிச் சொல்ல வேண்டும் அல்லது சமூகவியல் அறிஞர்கள் தான் இது குறித்து கருத்துச் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் சினிமாவைப் பார்க்கிற அதே கண்ணோட்டத்தில் தான் தமிழர்கள் பார்ப்பர்களா?
இது எல்லாவற்றையும் விட இதற்கான காரணங்களாக நான் நினைப்பது தமிழ் மொழியை,அதன் தொன்மையை ,தமிழர்களின் வேர்களை அவர்களின் பண்பாட்டினை தொடர்ந்து அழிக்கும் அழித்துக்கொண்டிருக்கும் திட்டமிட்ட வேலையாகத்தான் நான் பார்க்கிறேன்..அதற்கு அறிவை கடன் கொடுத்துவிட்ட தமிழர்கள் தன்னை அறியாமல் இடங்கொடுத்து வருவதாகவே எனக்குப் படுகிறது.
இதைப்படிக்கும் நண்பர்கள் யாராவது இந்த விவாதத்தை முன்னெடுத்து கொண்டு சென்றால் அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com
6 கருத்துகள்:
நல்லாயிருக்கு!!!ஜமாலனிடம் கேட்டால் சொல்வார்.இந்த லின்க் அனுப்பி காமெண்ட் நேரமிருந்தால் போடசொல்கிறென்.
please remove remove word verification
Like riding on the same boat Dude.
இது 1967 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. அரசியலும் சினிமாவும் கூடி காதல் செய்ய ஆரம்பித்த கணங்களில் இவைகளுக்கான கரு உண்டாக ஆரம்பித்து விட்டது. அரசியலும் சினிமாவும் இணைந்ததால் வியாபார நுணுக்கங்கள் மிக எளிதாக போய்விட்டன. காலப்போக்கில் தொலைக்காட்சியும் வந்து அதுவும் அரசியல் சினிமா பிள்ளைகளிடம் பத்திரிக்கைகளிடம் அடைக்கலாமானதால் இந்த மாற்றங்கள், நிகழ்வுகள் மிக மிக எளிதாக நிகழ்திகாட்டப்பட்டன.
இன்று அதுவே வாழ்கை முறையாகி விட்டுள்ளது.
பாவனையாக வாழவே மதங்களும், அரசியலும், சினிமாவும் , விளம்பரங்களும் நமக்கு போதிக்கின்றன. உழைத்து சம்பாதிப்பதாக பாவனை ஆனால் ஊரை அடித்து உலையில் போடுவது தான் இன்று உழைப்பு அதுபோல.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சார். நிறைய எழுதுங்கள் என்று மீண்டும் ஒரு முறை அன்புடன் வேண்டுகிறேன்.
விநாயகர் வருகைப்பற்றி ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட இணைப்பை பாருங்கள். அரசும், அரசாங்க அதிகாரமும் இல்லாமல் எந்த கடவுளும் உயிர்வாழ முடியாது. முருகனின் நிலையும் பிள்ளையார் எழுச்சியும் இந்திய அரசியலின் ஒரு பக்க விளைவாக உருவானதே. மேலதிக விவாதத்திற்கு இந்த இணைப்பையும் அதன் பின்னோட்டங்களையும் படியுங்கள். நன்றி.
http://naayakan.blogspot.com/2007/09/blog-post.html
அன்புடன்
ஜமாலன்.
விநாயகரை சூப்பர் ஸ்டாராகவும் வடிவேலுவை ஐயப்பனாகவும் சொல்வது ஒரு எடுத்துக்காட்டாக இருந்தாலும் உண்மைதான் வெற்றிவேல் சார்
நாம செகுலார் ..அதாவது மதச்சார்பற்ற நாடு ஆனா எல்லா மதமும் நம்ம நாட்டுலதான் வெறியோடு பின்பற்றப் படுது
இதுல பிள்ளையார் ஒரு துரும்பு ..
கடைந்திருக்கிறீர்கள் வெற்றி சார்!
அமுதம் பொங்கட்டும்.
கருத்துரையிடுக