வியாழன், 15 ஜூலை, 2010

சிவகாமியின் செல்வன்

அரசியல் என்னவென்று தெரியாத காலத்திலேயே எனக்குப் பிடித்த தலைவர் பெருந்தலைவர் காமராஜ் தான்..காரணம் ஒன்றுமில்லை.. எங்க அம்மா பெயரும் சிவகாமி...அதுனாலே பள்ளித் தோழர்கள் எல்லாம் ‘சிவகாமியின் செல்வன்” என்று என்னைக் கிண்டலடித்தே, எனக்கு அவர் மீது ஈடுபாடு வரக் காரணம்..அது தவிர சிவாஜிதான் என் கதாநாயகன். அவருக்கும் இவர் தான் தலைவர்., தலைவரைப் புடிக்க வேறு காரணம் வேண்டுமா என்ன? நான் சொல்வது 1969..நான் ஐந்தாவது படிக்கும் பொழுது இருந்த மயக்கம்.

அப்படிப் பட்ட ஒரு நாளில் தான் அவரை நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி முடித்து சிவகங்கை செட்டி ஊரணியில் தவளைக்கல் எறிந்து விளையாடிவிட்டு அப்ப்டியே மேலூர் ரோடுக்கு வந்தால் ஒரே கூட்டம். கொஞ்ச தூரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் காமராஜ் வந்து இருப்பதாக அந்த முக்கில் உள்ள விடுதியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் என் வகுப்புத்தோழர்களும் அவரைப்பார்த்து விடுவதென்று விர்ரென்று விருந்தினர் மாளிகை நோக்கி ஒடினோம். உள்ளே ஒன்றும் அவ்வளவு கூட்டம் இல்லை..எங்களை யாரும் தடுக்கவும் இல்லை..


காமராஜ் புகைபிடித்து யாரும் பார்த்துண்டா எனத்தெரியாது. நான் பார்க்கும் போது அவர் புகை பிடித்துக் கொண்டு இருந்தார். மாளிகை வராந்தாவில் சாய்ந்த இருக்கையில் சாய்ந்து கொண்டு, சுற்றி இருந்தவர்களிடம் பேசிகொண்டு இருந்தார்.. நாங்கள் அங்கு போய் நின்றதும்,பேச்சை நிறுத்தி விட்டு,எங்களை அருகில் வருமாறு அழைத்தார். புத்தகப்பையுடனே அவரிடம் சென்றோம்..எங்களைப் பற்றி, என்ன பெயர் என்று கேட்டுவிட்டு என் பெயர் நல்ல பெயர் என்று சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.. என்ன படிக்குறே என்று ஒவ்வொரு பையன்களையும் கேட்டார்..

“இங்கே எதுக்கு வந்தீங்க..?
”உங்களை பாக்கத்தான்..”
எதுக்கு என்னையப் பாக்கணும்?
”சும்மாதான்..ஆட்டோகிராப் வாங்க ”என் பக்கத்தில் இருந்த கார்த்தி பயப்படாமல் பொய் சொன்னான்..
அப்படியா..எதுல போட? அப்படின்னு சொன்னதும் எங்களுக்கு வந்த குஷி ...சொல்ல முடியாது ..விறுவிறுவென்று எங்கள் புத்தக்ப்பைக்கட்டை தொறந்து ,கையில் கிடைத்த நோட்டை எடுத்துக் கொடுத்தோம்.. எங்கள் எல்லோர் நோட்டிலும் கையெழுத்து போட்டார்..

”இங்கேல்லாம் வரக்கூடாது படிக்கிற புள்ளைக ஒழுங்கா படிக்கணும்..கூட்டம் நாட்டத்துக்கெல்லாம் போகக்கூடாது. ஒழுங்கா வீட்டுக்கு ஓடுங்க..” என்றார்..

வீட்டுக்கு ஆசையாய் ஆசையாய் வந்து சொன்னா..அப்பாவின் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அவன் கிடக்குறான்.....பைய..... என்றார்கள்..அப்பாவிற்கு சிவாஜியைப் பிடிக்கும்..காங்கிரஸைப் பிடிக்கும். ஆனால் காமராஜைப் பிடிக்காததின் காரணம் பின்னால் கல்லூரிக்காலத்தில் தான் தெரிந்தது


1971 பொதுத்தேர்தல்..சிவாஜி,கண்ணதாசன்,ஜெயகாந்தன் எல்லொரும் ஸ்தாபனக் காங்கிரஸை ஆதரித்தார்கள்.நானும் தான்..கலைஞர் இந்திரா காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்..
அந்த்த் தேர்தலில் தான் நான் காமராஜைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டேன்..

கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்

மதிய உணவு கொண்டு வந்த மகாத்மா..

இரண்டு முறை பாரதத்தை வழி நடத்த தகுந்த தலைமையை தேர்ந்தெடுத்தவர்.நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும்.

அரசு அதிகாரத்தை குடும்ப நலனுக்கு தவறாகப் பயன்படுத்தாதவர்.

திருச்சி பாரத மிகுமின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி டாங்க் உற்பத்தி தொழிற்சாலை.,கிண்டி, அம்பத்தூர் தொழில் பேட்டைகள், தமிழகத்தில் தொழிற்சாலைகள்..நீர் நிலைகள் என தமிழகம் மிகப் பெரும் வளர்ச்சி அடைந்த்தும் அவர் ஆட்சியில் தான். மொத்தம் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றி இருக்கிறார்.


1971 தேர்தலில் அவரைப்பற்றி எவ்வளவு அவதூறுகள்..இன்று நினைத்துப் பார்க்கும் போது, இன்றைய நிலையில் கனவிலும் நினைக்க முடியாத,ஒரு எளிமையான வாழ்வை வாழந்தவர் காமராஜர், அவரைப் பற்றியா இத்த்னை அவதூறுகள்!!!

அந்த உத்தமத் தலைவனுக்கு எமனாக வந்தது தான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என வரலாற்றில் வர்ணிக்கப்படும் “எமெர்ஜென்ஸி’ -நெருக்கடி நிலைக்காலம். நாடு முழுதும் தன்னையொத்த தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் வாட, கலைஞர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரே காரணத்தால், கைதாகாமல் வெளியில் இருந்தாலும், ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலைதான் அவரது அகால மரணத்திற்கு முழு முதல் காரணம்.

1976 அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளில் தென்னகத்து காந்தி நம்மை விட்டுப் பிரிந்தார்..

அய்யா நீங்கள் என்னிடம் நேரில் சொன்ன மாதிரி நான் நல்லா படிச்சுட்டேன்.. உங்களால் தான் எங்களால் படிக்க முடிந்தது. இன்று நான் இருக்கும் இந்த இடத்திற்கு தந்தை பெரியாரும் நீங்களும் தான் காரணம் என்ற நன்றியுடன் உங்களை வணங்குகிறேன்

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

6 கருத்துகள்:

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

வணக்கம் நண்பரே!

///இன்று நான் இருக்கும் இந்த இடத்திற்கு தந்தை பெரியாரும் நீங்களும் தான் காரணம் என்ற நன்றியுடன் உங்களை வணங்குகிறேன்.//

நீங்கள் கூறுவது உண்மை.

எனது புதிய பதிவு:

கருணாநிதி ஹிந்தி படிக்க விட்டு இருந்தால் மூணு வேளை பிரியாணியும் ஒரு குவார்ட்டரும் ஒவ்வொரு தமிழனக்கும் தினமும் கிடைத்து இருக்கும்!

http://tamilkadu.blogspot.com/

or

http://tamilkadu.blogspot.com/2010/07/blog-post.html


என்றும் அன்புடன்,

ஆட்டையாம்பட்டி ஆம்பி!?

ISR Selvakumar சொன்னது…

//அய்யா நீங்கள் என்னிடம் நேரில் சொன்ன மாதிரி நான் நல்லா படிச்சுட்டேன்.. உங்களால் தான் எங்களால் படிக்க முடிந்தது. இன்று நான் இருக்கும் இந்த இடத்திற்கு தந்தை பெரியாரும் நீங்களும் தான் காரணம் என்ற நன்றியுடன் உங்களை வணங்குகிறேன்//

இந்த வரியை படிக்கும்போது நீங்களே அவரின் மடியில் அமர்ந்து கொண்டு சொல்வது போல நெகிழ்வாக இருந்தது.

எளிமையான ஆனால் வலிமையான ஒரு தலைவனைப் பற்றி அருமையான நினைவு கூறல்.

அவரை சந்தித்திருக்கின்றீர்கள் என்ற முறையில், நீங்கள் கொடுத்து வைத்தவர். வாழ்க காமராஜர் புகழ்!

sen சொன்னது…

விருதுப்பட்டி வீரன் பற்றி எனக்கு சொன்னதுக்கு நன்றி. விழிகள் நனைந்தது உண்மையில்.

அ.வெற்றிவேல் சொன்னது…

@செல்வகுமார்.. வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றிகள்.. உண்மையிலே நான் கொடுத்து வைத்தவன் தான்.

@ஆட்டையாம்பட்டி அம்பி & creasen .. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

பொன். வாசுதேவன் சொன்னது…

மிகவும் அருமையான கட்டுரை. யாரை நாம் கதாநாயகனாக வரித்துக் கொள்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையின் உயர்விற்கு காரணமாகிறது.

Mangaldasan Pandian சொன்னது…

வெற்றி சார்....நடிகர்திலகம் சிவாஜிகணேசன் திரைப்படங்களை எங்களுக்கு அறிமுகபடுத்தியதே தாங்கள்தான். சமீப காலங்களாகத்தான் கர்மவீரர் காமரஜர் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகத்தெரிகிறது. அதுவும் சமூக வலைதளங்களில் மிகவும் சிறப்பாக விவாதிக்கப்படுகிறது.இப்படிப்பட்ட தலைவரை அப்போது இருந்த தமிழ் சமுதாயம் ஏன் கைவிட்டது? தங்களின் இந்த பதிவு அவரது புகழுக்கு மேலும் பகழ் சேர்க்கிறது. நன்றி !

கருத்துரையிடுக