வெள்ளி, 15 ஜனவரி, 2010

சாருவும் பில்டர் காபியும்

சாருவின் எழுத்துக்களை நான் தொடர்ந்து வாசித்து வருபவன். அவருடைய எழுத்துக்கள், இணையத்தில் ‘கோணல் பக்கங்கள்” எழுத ஆரம்பித்த பின்பு தான் அதிகமான வாசகர்களை சென்றடைந்தது. 1984 என்று நினைக்கிறேன் .அப்போதே ‘ஜே.ஜே.சில குறிப்புகள்” குறித்து அவர் எழுதிய ஒரு விமர்சனம் மூலம் சாரு எனக்கு அறிமுகம். 1990 –ல், எம்.ஜி.ஆர், சிவாஜி படப்பாடல்கள் என வெளிவரும் ஒரு மட்டமான தரத்தில்,சாருவின் நாவலான “எக்ஸ்ஸிடென்ஸியலும் பேன்ஸி பனியனும்” வாங்கிப் படித்தவன். அது மட்டுமல்ல .. அன்றைய காலகட்டத்தில் அதன் நடை எனக்கு முக்கியமாகப் பட்டதால், பல நண்பர்களுக்கு அற்முகம் செய்தும் வைத்துள்ளேன். சவூதிக்கு 1992 வந்தபின்பு,இலக்கிய அறிமுகம் அதிகம் இல்லாத ஒரு தமிழ் நண்பர், அது ஏதோ ஒரு மாதிரியான புத்தகம் என்று நினைத்து என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டுபோயே போய் விட்டார். புத்தகப் பதிப்பு அப்படி..

சாரு மிக அதிக உத்வேகத்துடன் மிகத்தீவிரமாக இப்பொழுது எழுதிக் கொண்டும், இணையம் மூலம் அதிக வாசகர்களை தன் ரசிகர்களாக மாற்றிக் கொண்டும் இருக்கிறார்.எழுத்தை மட்டுமே நம்பி வாழும் சூழல் “நம் காலத்து நாயகன்” சுஜாதாவிற்கே அமையவில்லை. ஆகவே சாருவுக்கு நல்வாழ்வு கிட்ட எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சவூதியில் புத்தகம் கொண்டு வருவது என்பது ஒரு கடத்தலுக்குச் சமம். ஆகவே நான் சென்னை வரும் போது மட்டுமே,சில புத்தகங்களை எடுத்து, அதையும் முடிந்தவரை மறைத்து வருவது உண்டு. அப்படி சென்ற டிசம்பர் மாதம் என் மதுரை இல்லத்திற்கு வந்த நவம்பர் மாத உயிர்மை இதழ் எடுத்து வந்தேன். அதையும் நேற்றுதான் படிக்க நேரம் கிடைத்தது.

நவம்பர் மாத உயிர்மை இதழில் சாரு எழுதிய “தமிழ் சினிமா பாடல்கள்” பற்றி மிக அருமையான ஒரு கட்டுரை இருந்தது. அதில் ஒரே ஒரு குறை தெரிந்தது. கண்ணதாசன் வரிசையில் வைரமுத்துவை இணை வைத்தது. அது அவர் விருப்பம் என்று இருந்து விட்டேன். இங்கு நான் பேச வந்தது வேறு.

தமிழர்களின் சுரணை கெட்ட மொன்னைத்தனத்திற்கு , தினசரி வாழ்க்கையில் எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். ஆனால் சாருவுக்கு காபியில் பால் ஊற்றிக் குடிப்பது, உலக மகாக் கொடுமையாகத் தெரிகிறது? எங்களைப் போன்ற பில்டர் காபிப் பிரியர்கள் மேல் ஏன் இந்தக் கொலைவெறி?

பெருமைக்காகச் சொல்லவில்லை.1984 முதல் நான் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளேன்.1992 முதல் NRI யாக வளைகுடா நாடுகளில் வாசம். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை சென்றுள்ளேன்.காபி விளையும் பிரேசில் உள்ள தென் அமெரிக்கா மட்டும்தான் பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை. உலகின் பல முன்னணி நட்சத்திர விடுதிகளிலும் , 2000க்கு அப்புறம் பிரபலமாகிய Starbucks போன்ற காபி நிறுவனங்களிலும், பாரிஸ் தெருக்களில் உள்ள நடைபாதைக் காபிக்கடைகளிலும்,பெங்களுரூவில் உள்ள காபிக்கடைகளில் 2/3 என்றும், மற்றும் பல்வேறு நாடுகளில் காபி குடித்துள்ளேன். French, italian, turkish , american, coffe with cream என விதவிதமான காபி தயாரிக்கும் வகைகள். அத்தனையும் குடித்துவிட்டுத் தான் சொல்கிறேன். தஞ்சை, மாயவரம் மற்றும் கோவை அன்னபூர்னா( 1990 களில்) போன்ற உணவு விடுதிகளில் கிடைக்கும் பில்டர் காபிக்கு இணையாக மேலே சொன்ன எந்த வெளிநாட்டுவகை காபியையும் சொல்ல முடியாது என்று என் நாக்கு எனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

1978யில் டெல்லி சென்ற போதுதான் ஒரு இடத்தில் “cold coffee” என்றும் Ice tea கிடைக்கும் என்றும் எழுதி இருந்தது. அப்பொழுதே என்னுடன் இருந்த நண்பரிடம் நான் சொன்னது” ராம்நாடில் இருக்கும் என் அப்பத்தா கேட்டு பார்த்து இருக்க வேண்டும் இந்த விளம்பரத்தை...கடைக்காரனை செருப்பால் அடிக்கக்கூட தயங்கி இருக்க மாட்டார் என” .ஏனென்றால் என் அப்பத்தாவிற்கு காபி கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். என் அம்மா போட்டுக் கொடுத்த காபியை உடனடியாக எடுத்துக் கொண்டு கொடுக்கவில்லை என்று, காபி ஆறிவிட்டது என்பதற்காக பேரன் என்றும் பாராமல் எனக்கு கண்டபடி அர்ச்சனை. சுடச்சுடச் காபி குடிப்பதும் ஒரு பழக்கம் தான்.


சாப்பாடு என்பது நமது பழக்கவழக்கம் சார்ந்தது என்பதை சாரு அறியாதது ஏனோ? டோக்கியோவில் ஒரு இலையில் சுற்றி வெள்ளைவெளேர் என்ற அரிசிச் சோறை வைத்துவிட்டு , ஒரு கோப்பையில் ஒரு சூப் வைத்து சாப்பிடச் சொன்னபோது, உண்மையிலே ஒரு சின்ன தேக்கரண்டி கருவாட்டுக் குழம்பு கிடைக்காதா என மனசு கிடந்து அடித்துக் கொண்டது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.இதுமாதிரி உலகில் பல இடங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் தனிக்கதை.


சாருவுக்காக இந்த கொசுரு செய்தி.. நல்ல கள்ளிப்பால் போன்று திக்கான பாலில் , முதல் டிக்காஷ்னில் செய்த காபியைக் கொடுத்து, எங்கே, 25 வருடங்களாக பாலைவனத்தில் அலைந்து திரிந்து சம்பாதித்த எனது சொத்துக்களை எழுதி வாங்கிவிடுவார்களோ? என்ற பயம் எனக்கு என்றும் உண்டு..அதனால் தான் எல்லாவற்றையும் மனைவி பெயரில் எழுதி வைத்துள்ளேன். அந்தளவுக்கு நான் பில்டர் காபிக்கு அடிமை.


நாக்குக்கு பழகப்படாத வரை எந்த உணவும் நமக்குப் பிடிக்காது.பழக்கம் தான் காரணம்.. ஆக்வே எங்களைப் போன்ற காபிப்பிரியர்களை ,தமிழர்களின் சுரணை கெட்ட மொன்னைத்தனத்திற்கு உதாரணம் காட்ட வேண்டாம். இந்தப் பதிவு கூட எங்களுக்கும் சுரணை உண்டு என்று காண்பிப்பதற்காகவே...

தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

6 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

//நல்ல கள்ளிப்பால் போன்று திக்கான பாலில் , முதல் டிக்காஷ்னில் செய்த காபியைக் கொடுத்து, எங்கே, 25 வருடங்களாக பாலைவனத்தில் அலைந்து திரிந்து சம்பாதித்த எனது சொத்துக்களை எழுதி வாங்கிவிடுவார்களோ? என்ற பயம் எனக்கு என்றும் உண்டு..அதனால் தான் எல்லாவற்றையும் மனைவி பெயரில் எழுதி வைத்துள்ளேன்.//

:-)

நல்ல பகிர்வு வெற்றி சார்!

வால்பையன் சொன்னது…

மேலை நாட்டு மோகத்தில் சாரு அடிக்கடி இப்படி பிதற்றுவதுண்டு!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வெற்றிவேல் சார் , நலமா

நேற்று முன் தினம் உங்களுடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .

பதிவர் சந்திப்பு அருமையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் .

manjoorraja சொன்னது…

காலங்காத்தாலே ஒரு காப்பி கிடைத்து அதை குடிக்கும் போது இருக்கும் சந்தோசமே தனிதான். சாருவுக்கு இதெல்லாம் எங்கே தெரிய போகுது....

Unknown சொன்னது…

I request Mr.Saru sir, Please come to my house and take one cup of filter coffee (I thik then only you will feel the filter coffee taste). My resident is at chennai only. Still in our house we are using filter and filter coffee only. If you want my address contact Mr. Vetrivel and collect from him. Mr. Vetrivel knows me for more than 38 years.

Regards

Dr. A. Nagavel

Paleo God சொன்னது…

சாப்பாடு என்பது நமது பழக்கவழக்கம் சார்ந்தது என்பதை சாரு அறியாதது ஏனோ? டோக்கியோவில் ஒரு இலையில் சுற்றி வெள்ளைவெளேர் என்ற அரிசிச் சோறை வைத்துவிட்டு , ஒரு கோப்பையில் ஒரு சூப் வைத்து சாப்பிடச் சொன்னபோது, உண்மையிலே ஒரு சின்ன தேக்கரண்டி கருவாட்டுக் குழம்பு கிடைக்காதா என மனசு கிடந்து அடித்துக் கொண்டது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.இதுமாதிரி உலகில் பல இடங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் தனிக்கதை.
//

அட உள்ளூர்லயே பல சமயம் அப்படி ஆயிடுதுங்க..:))

கருத்துரையிடுக