செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ஊடகங்களில் குடும்ப ஆதிக்கம்

சமீபத்தில் என் நண்பருடைய முகநூலில் நிலைத்தகவல் (ஃபேஸ்புக் ஸ்டேடஸ் மெசெஜ்) படித்தேன். தன் ஊருக்குச் சென்றவர் அங்கு இருக்கும் நான்கு திரையரங்களிலும் ஒரே குடும்பத்தைச் சேரந்தவர்களின் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக.. கலைஞரிடம் கேட்டால் அது அவர்கள் தொழில் என்பதாகச் சொல்வார். சன் குழும தொலைக்காட்சி மட்டுமின்றி கலைஞர் குழுமம் மொத்தமாக 10 சானல்கள் , அது மட்டுமின்றி, தற்பொழுது, மூன்று மகன்களின் நிறுவனங்களும் தமிழ்ப் படத்தயாரிப்பிலும், விநியோக வியாபாரங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். கூடியவிரைவில் கனிமொழியும், கௌதம்மேனன் இயக்கதில் தமிழ்ப்படம் தயாரிக்க உள்ளதாக ஒரு செய்தியும் படித்தேன். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.


பத்திரிக்கை திரைப்படம் இரண்டுமே கலைஞர் அவர்களால் மிக விரும்பிச் செய்யப்படும் பணி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.கலைஞர் அவர்கள் இந்த இரண்டு துறைகளையுமே தன் அரசியல் பணிக்கு ஒரு பிரச்சாரமாகப் பயன்படுத்தியது தமிழக வரலாறு. ஆதலால் இன்று அவர்கள் வாரிசுகள் இத்தொழில் இறங்கி இருப்பது எனக்கு ஆச்சர்யமில்லை.அது அவர்கள் தொழில் என்பதால், அதை அவர்கள் லாபகரமாகச் செய்வதிலும் நமக்கு ஏதும் வருத்தமில்லை.


நம் வருத்தம் எல்லாம் ,ரசனை சார்ந்த விஷயங்களை, பொது நலன் சார்ந்த விஷயங்களில் கருத்துக்களை தீர்மானிக்கும் சக்தியாக ஒரு குடும்பம், அதன் ஊதுகுழலாக பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களும் ஒரே அணி என்று இருந்தால், அது மக்களாட்சிக்கு எந்த விதத்தில் உதவும் என்பதுதான். இது தவிர இப்பொழுது தினமலரும், இந்து நாளிதழுமே ஆளுங்கட்சியின் அதிகாரபூரவமற்ற செய்தி நிறுவனங்களாக மாறிப் போய்விட்டதாகத் தெரிகிறது.மக்கள் பிரச்னைகளில் தி.மு.க என்ற கட்சி எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் கருவியாகத்தான் இந்த ஊடகங்கள் பயன் படும் என்பதைத் தவிர அவர்கள் எடுத்த அந்த முடிவு சரியா தவறா என்ற பொது விவாதத்திற்கு இங்கு இடமிருக்காது. மாற்றுக் கருத்துக்கே இடமில்லாத சூழல் மக்களாட்சிக்கு விரோதமானது என்ற கருத்தை கலைஞர், கனிமொழி என்ற இரண்டு எழுத்தாளர்களுமே ஆதரிப்பார்கள்.


மாற்றுச் சிந்தனைக்கு இடங்கொடுக்க இந்த நேரத்தில் நம் முன்னர் உள்ள தொலைக்காட்சிகள், மக்கள் தொலைக்காட்சியும் ஜெயா வுமே..விஜய் டிவி அரசியல் சார்ந்ததல்ல. மேலும் அது காங்கிரஸ் கட்சி மாதிரி தமிழகத்தை தாண்டி வேறு இடத்தில் இருந்து நிர்வகிக்கப்படுவது..அவர்களுக்கு தமிழக அரசியலோ, தமிழ் மக்கள் பிரச்னைகளோ முக்கியமாகப் படுவது இல்லை. அதனால் தான் அவர்கள் லைவ் ஷோக்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.


மக்கள் தொலைக்காட்சியின் ஆரம்ப கால நிகழ்ச்சிகள் கண்டு நான் மிகவும் மகிழ்வுற்று திண்ணை இணைய இதழில் அதை வரவேற்று கட்டுரை ஒன்று கூட எழுதியுள்ளேன். ஆனால் மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் அவர்கள் தோற்றுவிட்டதாக அறிகிறேன்.

ஜெயா தொலைக்காட்சியால் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க முடியும்.ஆனால் இன்றுவரை அது ஒரு கட்சி சார்பான தொலைக்காட்சி என்ற அளவில் தான் இருக்கிறதே தவிர, அந்த வட்டத்தை விட்டு இன்று வரை வெளிவரமுடியவில்லை.வரும் காலத்திலும் ஜெயா டிவி நிர்வாகத்தால் அந்த புதைகுழியில் இருந்து வெளிவரமுடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

இந்த நேரத்தில் தான் வலைப்பதிவர்களின் பணி முக்கியமாக எனக்குப் படுகிறது.

ஒரு திரைப்படம் வெளிவந்த உடனேயெ சுடச்சுட தன் கருத்துக்களை பதிந்துவிடத் துடிக்கும் எண்ணற்ற வலைப்பதிவர்கள் மத்தியில், ஒரு 10 விழுக்காடு வலைப்பதிவர்கள் பொது விஷயங்களில் மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான கருத்தை திரட்ட தம் வலைப்பதிவுகளை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.


சென்ற மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அடைக்கப்பட்ட சவுக்கு இரண்டே நாளில் வெளிவந்ததற்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் தற்காலிக இடைநீக்கம்,திரும்பிப் பெறப்பட்டதற்கும் வேறு ஏதும் அரசியல் காரணங்கள் இருந்தாலும், வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..
ஆகவெ பொது நலன் சார்ந்து சிந்திக்கும் அனைத்து வலைப்பதிவர்களும், அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாகவும், மக்கள் விரோதமாக இருந்தால் அதை எதிர்த்தும் துணிச்சலுடன் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..


இது மட்டுமின்றி, ஃபேஸ்புக்,ஆர்குட்,டுவிட்டர் போன்ற பொதுத் தளங்களிலும் தங்களது கருத்துகளை ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் பதிவிட வேண்டுகிறேன்

இது ஒன்று தான் இப்பொழுது நம்முன் உள்ள ஒரே வழி..

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

21 கருத்துகள்:

Ravichandran Somu சொன்னது…

//சென்ற மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அடைக்கப்பட்ட சவுக்கு இரண்டே நாளில் வெளிவந்ததற்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் தற்காலிக இடைநீக்கம்,திரும்பிப் பெறப்பட்டதற்கும் வேறு ஏதும் அரசியல் காரணங்கள் இருந்தாலும், வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.//

நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

மற்றுமொரு நல்ல கட்டுரை....

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ரவிச்சந்திரன்! உங்கள் கருத்துகள் என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றன

பெயரில்லா சொன்னது…

பலர் குடும்பம்,குடும்பம் என்று எழுதுவதைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும்.கலைஞருக்கு நாட்டின் மீதுள்ள அதிகாரம் அவர் குடும்பத்தினரிடம் இல்லையென்பது தான் "உலகறிந்த உண்மை!".அருகில் உள்ளவர்களிடம் அவர் படும் பாட்டைக் கேட்கவும்.

சன் "தொல்லைக் காட்சி"யும் அந்தக் குழுமமும் பணம் செய்வதற்காக எதையும் செய்வார்கள்.ஆரம்பத்தில் அவர்கள் பட்ட பாடும்,உழைப்பும் உண்மையானது.பலரை எதிர்த்து,தாஜா செய்து இன்னும் என்ன செய்தார்களோ தெரியாது.பணம் ஒன்றுதான் அவர்களது குறிக்கோள்.விலை மாதிடம் கற்பை எதிர்பார்ப்பது போல அங்கே தமிழையோ,இனவுணர்வையோ,நல்லதையோ எதிர் பார்ப்பது வடிகட்டிய மடத்தனம்.

சினிமா நடிக,ந்டிகையரின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்.நேரு பெருமானின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்.அவர்களுக்குத் தெரிந்தத்தும்,எளிதானதும் அது தான்.பல மருத்துவ்ர்களின் குழந்தைகள் மருத்துவர்கள் அவ்வளவுதான்.அந்தக் குழுமத்தின் ஆசிரியர்கள் இருந்தால் கூட மாணவர்களை நாம் அனுப்ப மாட்டோம்.

இணையம் ஒரு அற்புதம்.அதை நாம் நன்கு பயன்படுதலாம்.ஆனால் பெரும்பாலும் சினிமாவும்,உருப்படாதவையுந்தானே இணையத்தை நிரப்புகின்றது.அதை மாற்ற நம்மால் முடியுமா?இத்தனைக்கும் நிறைய பேர் படித்தவர்கள், சிந்தனையாளர்கள். "எந்திரனை"ப் பற்றி வரும் பதிவுகளைப் பாருங்கள். எண்ணங்களைப் பற்றி வரும் பதிவுகளைப் பாருங்கள். நாம் யாரைக் குறை கூறுவது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழக வரலாற்றில் அனைத்து திறனும் அமையப்பெற்ற உங்களைப் போன்ற ஆளுமை..
மொத்தத்தில நீங்கள் தமிழகத்திற்கு ஒரு பெருமிதம்..//

இது இந்த ஜூன் மாதத்தில் எழுதிய உங்கள் பதிவு ஒன்றில் இருந்தவை. அதுக்குள்ள காலம் மாறிப் போச்சா ?

:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

சரியான கண்ணோட்டத்தில் அனுகியிருக்கிறீர்கள்.

வலைப்பதிவுகள் ஊடகங்கள் செய்யத் தவறும் விசயத்தைக் கண்டிப்பாகச் செய்யும்.

உங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள் வலைப்பதிவுகள் எழுதுவது ஆரோக்கியமான விசயம். வாழ்த்துகள். நன்றி.

பெயரில்லா சொன்னது…

//வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..//

GOOD JOKE.... JOKE OF THE CENTURY...

பார்வைகள் சொன்னது…

அன்புள்ள வெற்றிவேல் அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் பதிவைப் படித்தேன். சிறப்பாக அமைந்திருந்தமைக் கண்டு மகிழ்ந்தேன்.
தந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம் என்ற தங்களின் முழக்கம் வெற்றுமுழக்கமல்ல..... என்பதைத் தங்களின் பதிவு உணர்த்தியது. நன்றி
வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப் பேராசிரியர்
ஏவிசி கல்லூரி - மயிலாடுதுறை.
ஆசிரியர் www.tamilthinai.com,www.tamilthinai.blogspot.com

ஜமாலன் சொன்னது…

குடும்ப ஆட்சி. வாரிசு ஆட்சி போன்றவை விவாதத்திற்குரிய விடயமல்ல. ஆட்சிக்கான தகுதி என்ன என்பதுதான் பேச வேண்டிய ஒன்று. ஆனாலும், ஊடகங்கள் அதிகாரத்தில் குவிவது என்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தானது. சரியான தருணத்தில் உங்கள் பதிவு வந்துள்ளது.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

உங்களின் நல்ல எண்ணத்திற்கு/ஆசைக்கு எனது வணக்கம். ஆனால் நடைமுறையில் வேறு மாதிரியாக இருக்கிறது.
வலைப்பதிவு எழுதுவதில்/வாசிப்பதில் தொண்ணூறு சதம் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே.

தமிழக அமைச்சர்களில், தலைமை செயலக அதிகாரிகளில் வலைப்பதிவுகள் பற்றிய அறிவு உள்ளவர்கள் கூடிப் போனால் இருபது பேர் இருப்பார்கள்.
இன்னும் சொல்லபோனால் சென்னையில் எனது தெருவில் இருநூறு வீடுகள் (நானூறு நபர்கள்) இருக்கிறோம், வலைப்பதிவு/Orkut பற்றிய விவரம் அறிந்தவர்கள் பத்து பேர்களேஇருப்பர்.

அ.வெற்றிவேல் சொன்னது…

@கோவி.கண்ணன்: கலைஞர் என்ற ஆளுமை இன்றும் என்னை வியக்க வைக்கக்கூடியதுதான். நண்பர் ஜமாலன் சொல்வது போல் குடும்ப ஆட்சி,வாரிசு ஆட்சி என்பது விவாதத்திற்குரியது அல்ல.ஆட்சிக்கான தகுதி போதும்.. இங்கு நான் கவலை கொள்வது மாற்றுச் சிந்தனைக்கான களம் முடங்கிப் போய்க் கிடப்பதே.. அதற்கான களத்தை அமைக்க வேண்டியது மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட நம்மைப் போன்றவர்களே..

அ.வெற்றிவேல் சொன்னது…

@ராம்ஜி_யாஹூ: தாங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். வேறு என்ன வழி!மாற்றுக் கருத்துக்கான களத்தை அமைக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட நாம் தானே செய்யவேண்டும்..இது ஒரு விவாதத்திற்கான தொடக்கமே..வேறு ஏதாவது வழி இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழ் இலக்கிய வாதிகள் 99 பேர் கவிதை எழுதினால் போதும், இலக்கியம் படைத்தால் போதும் என்று இருந்து விடுவார்கள்..அப்படி வலைப்பதிவர்களும் இருந்து விடக்கூடாதென்ற எண்ணத்தில் எழுதப்பட்டது இது.. மிக்க நன்றி ராம்ஜி

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி கோவி கண்ணன்,ஜமாலன்,ராம்ஜி யாஹூ,
முனைவர் நெடுஞ்செழியன்,பெயரில்லா சொன்னது,
ச.செந்தில்வேலன்,ரவிச்சந்திரன்..வந்ததற்கும் கருத்துக்களை தெரிவித்ததற்கும்

raja சொன்னது…

வெற்றிவேல் ஸார்...இங்கு திரைபடத்தொழிலில் தயாரிப்பாளர்கள அனுபவிக்கும் வேதனை சொல்லி மாளாது.. தன் முதலீட்டையெல்லாம் பந்தயம் கட்டியிருக்கும் சிறு தயாரிப்பாளர்கள்.. கேன்ஸர் வந்தவர்களைபோல நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.. AVM இப்பொழுதைக்கு சினிமா தயாரிப்பு இல்லையென ஒதுங்கிக்கொண்டது.. அதுவும் இந்த சன் டி.வி. பண்ணும் ஏகபோகம் எழுத்தில் சொல்லிமாளாது.. நூறு நாட்கள ஒடவேண்டிய.. ஒடிக்கொண்டிருந்த களவாணி.. இவர்களது அராஜகத்தால் தியேட்டரை விட்டு எடுக்கபட்டது...மிக நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ்சினிமா உள்ளது தான் இப்பொழுதைய உண்மை.

ramalingam சொன்னது…

//குடும்ப ஆட்சி. வாரிசு ஆட்சி போன்றவை விவாதத்திற்குரிய விடயமல்ல//எப்படி?

பா.ராஜாராம் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் சார்!

ரமதான் வேலைப் பளுக்கள் சார். வாழ்த்து தாமதமாகிப் போச்சு. அறிமுக இடுகை தொட்டு இதுவரையில் வாசித்து விட்டேன். கலக்குறீங்க.

நிறைய எழுதுங்க சார். எவ்வளவு அருமையான ஃப்ளோ!

அ.வெற்றிவேல் சொன்னது…

@ராமலிங்கம்:///குடும்ப ஆட்சி. வாரிசு ஆட்சி போன்றவை விவாதத்திற்குரிய விடயமல்ல/// நண்பர் ஜமாலன் சொல்வதைப் ப்டியுங்கள். ஆம் ஆட்சிக்கான தகுதி இருந்தால் போதும்.வாரிசு ஆட்சி என்பது உலககெங்கும் இருப்பது தான்,.இந்தியாவில் ராகுலுக்கும்,ப்ரியங்காவின் மகனுக்காக காத்திருக்கும் காங்கிரஸை வைத்துக் கொண்டு தி.மு.க மீது மட்டும் பழி சுமத்துவது எனக்கு உடன் பாடல்ல.. மு.க.ஸ்டாலினுக்கு முழுத் தகுதி உண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை..

அ.வெற்றிவேல் சொன்னது…

@பா.ரா;நன்றி ராஜாராம்.. தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
தாங்கள் சொல்வது போல் ஃப்ளோ நன்றாக இருநதால் மிக்க சந்தோஷம்

PB Raj சொன்னது…

சினிமா எடுக்கட்டும் ஆனால் யாருடைய பணத்தில் எடுப்பது...நீங்கள் சொன்னது மாதிரி வலைபதுவளர்கள் சும்மா விளையாட்டுக்காக எழுதாமல் கொஞ்சம் பொது உணர்வு கொண்டு எழுத வேண்டும்.

வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

சென்ற மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அடைக்கப்பட்ட சவுக்கு இரண்டே நாளில் வெளிவந்ததற்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் தற்காலிக இடைநீக்கம்,திரும்பிப் பெறப்பட்டதற்கும் வேறு ஏதும் அரசியல் காரணங்கள் இருந்தாலும், வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..
ஆகவெ பொது நலன் சார்ந்து சிந்திக்கும் அனைத்து வலைப்பதிவர்களும், அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாகவும், மக்கள் விரோதமாக இருந்தால் அதை எதிர்த்தும் துணிச்சலுடன் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்//

அருமையான கருத்து வெற்றி.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!

மதிபாலா சொன்னது…

நீங்கள் சொன்னது வரவேற்க வேண்டி கருத்து. ஆனால் நிதர்சனத்தில் அனேக வலைப்பதிவுகளும் , பதிவர்களும் பொழுது போக்கிலேயே கவனம் செலுத்துகிறார்கள். அல்லது ஒரு குழுமம் வைத்துக்கொண்டு இயங்குகிறார்கள். அப்படி குழுமம் இல்லாது இயங்குபவர்களின் பதிவுகள் பத்துப் பேரையேனும் அடைவதில்லை என்பதுதான் உண்மை.

Sundararajan P சொன்னது…

//ஒரு திரைப்படம் வெளிவந்த உடனேயெ சுடச்சுட தன் கருத்துக்களை பதிந்துவிடத் துடிக்கும் எண்ணற்ற வலைப்பதிவர்கள் மத்தியில், ஒரு 10 விழுக்காடு வலைப்பதிவர்கள் பொது விஷயங்களில் மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான கருத்தை திரட்ட தம் வலைப்பதிவுகளை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.//

சார் நீங்க காமெடி, கீமெடி பண்ணலையே!

கருத்துரையிடுக