வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நடிகர் திலகம்-இன்றைய இளைஞர்களுக்காக

சிவாஜி பற்றி சில வரிகள்

எதை எழுதுவது எதை விடுவது ?
இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக்
காட்டும் உன்னத நடிப்பைச்சொல்வேனா ?.. கவியரசர் கண்ணதாசன்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு வலையுலக நண்பர் நடிகர் திலகம் பற்றி இளைஞர்கள் பார்வை என்ற ஒரு கட்டுரை எழுதி இருந்தார்..சிவாஜியின் முகபாவனைகள் யதார்த்த்தை காண்பிப்பதில்லை என்று.(?) அந்த நண்பர் மீது குற்றம் சொலவதற்கோ, பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதோ என் நோக்கம் இல்லை.ஏனென்றால் என் மகன்களும் அதே தான் சொல்கிறார்கள்..இது அவருக்காக எழுதியது இல்லை..என் மகன்களைப் போன்று உள்ள எண்ணற்ற இளைஞர்கள் நடிகர் திலகத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் , அனைத்து இளைஞர்களுக்குமான கட்டுரை..


சிவாஜி என்பது ஒரு சரித்திரம்..அதன் சில பக்கங்களை மட்டும் புரட்டிவிட்டு விமர்சனம் செய்வது. அந்த மகா கலைஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்காது..


இன்றைய இளைஞர்கள் சிவாஜியை , யானையை பார்த்த குருடர்கள் கதையில் வருவது போல பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வது போல் சொல்வது எந்த வகையிலும் ஒரு உயர்ந்த மனிதனுக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியாது.. அவர் யாதர்த்தமான படங்கள் அதிகம் கொடுக்கவில்லை என்றும் உங்களால் ஈடுபாட்டுடன் பார்க்க முடியாத படங்களில் அதிகம் நடித்துள்ளார் என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கலாம்.ஏனென்றால் அந்தக் காலம் வேறு..இன்று SMS காலம்..இந்தக் காலக் கண்ணோட்டத்தில் பழைய 50 வருஷங்களுக்கு முன்னர் வந்த படங்களை பார்க்காதீர்கள்..


பராசக்தியில் தொடங்குகிறது அந்த மகா கலைஞனின் திரைப்பிரவேசம். கமல் சொல்வது மாதிரி அன்றே முடிவு செய்து கொள்கிறார்..தாம் வளர வேண்டிய கலைஞன் அல்ல..நாம் செய்யவேண்டியது தனது திறமைகளை வெளிப்படுத்துவது மட்டும் தான் என்று முடிவெடுத்துக் கொண்டு தான் பல்வேறு கதாபாத்திரங்களை தெரிந்தெடுத்து 150 படங்கள் தொடர்ந்து வித்தியாசமான தோற்றத்தில் ,வித்தியாசமான உடல்மொழியில் ,திரையில் வாழந்து காட்டியுள்ளார்..


எனக்கு படத்துணுக்குகளை இணைக்கத் தெரியாது..இல்லை என்றால் அதை உங்கள் பார்வைக்கு வைத்து இருப்பேன்.. இருந்தாலும் சில படங்களில் சில காட்சிகளை இங்கு தருகிறேன்..


முதல் படம்..பராசக்தி..எல்லொருக்கும் பராசக்தி என்றால் கோர்ட் சீன் தான் ஞாபகத்திற்கு வரும்..அதே பட்த்தில் தான் “நானே ராஜா,நானே மந்திரி ‘ என்று ஒரு காட்சி பைத்தியமாக பண்ணியிருப்பார்.. மற்றொரு காட்சி..பிளாட்பாரத்தில் தூங்குபவரை எழுப்பி, ஏன் முழிக்கிறாய்? என்ற காவல்காரனின் கேள்விக்கு தூங்குபவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான் என்பார்...இந்தக் காட்சியினைப் பாருங்கள்..முதல் பட நடிகனா? முந்நூறு படங்களில் நடித்தவரா என்ற கேள்வி உங்களுக்கு கண்டிப்பாய் வந்துவிடும்..


காட்சிக்கு தேவையானதை . இயக்குநர் கேட்பதை மட்டும்செய்து கொடுப்பவன் நடிகன்.. எம்.ஆர்.ராதா, சிவாஜி இருவரும் கலைஞர்கள்.. இருவரும் சின்னஞ் சிறிய நகாசு வேலைகள் செய்து அந்த ஒரு சில நொடி வரும் காட்சியினை ஆயுளுக்கும் மறக்க முடியாமல் செய்து விடுவார்கள் ..

அந்த வரிசையில்..

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரக்கச்சேரி நடந்து கொண்டு இருக்கும். வாசித்துக்கொண்டு இருப்பார். அந்த சமயம் அழகான பெண் வந்து கூட்டத்தில் அமரவே பக்கதில் இருக்கும பாலையா அண்ணனைப் பார்த்து ஒரு கண் அடிப்பார் பாருங்கள்.. அங்கே தான் சிவாஜி என்ற கலைஞன் உயிர்போடு இருப்பான்..

இதே படத்தில் ரெயிலில் பயணம் செய்யும் போது பத்மினியும் அவரும் கண்களால் பேசிக் கொள்வது மிகை நடிப்பாகுமா என்ன?


ஆண்டவன் கட்டளையில்..ஆறுமனமே ஆறு என்ற பாடல்.. அறுபடை வீடுக்கும் சென்றுவிட்டு பாட்டு முடியும் போது ஒரு சின்ன பிட் மியுசிக் வரும்..அதுக்கு எந்த நடன இயக்குநரும் நடகர் திலகத்திற்கு தேவை இல்லை..கையில் நிலக்கடலையை வைத்து கொண்டு அதை ஊதிக் கொண்டே ஒரு ஆண்டிப்பண்டார நடை நடப்பதை பாருங்கள்.அப்ப தெரியும் அவன் ஒரு யுகக் கலைஞன் என்று..

உத்தமபுத்திரன் ..யாரடீ நீ மோகினி பாடல் பாருங்கள் இன்றைய சூப்பர் ஸ்டார் நடக்கும் side walk க்கை அன்றே நடந்திருப்பது ஆச்சர்யத்தை தரும்.


பாகப்பிரிவினை படத்தில் சரோஜாதேவி தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டவுடன், தான் ஊனமானவன், தன்னை நன்றாக பார்த்துச் சொல் என்று சொல்லிக் கொண்டு அவர் முன் வலமும் இடமுமாக காலை இழுத்துக் கொண்டு ஒரு ஊன நடையை நடந்து காட்டுவதை அவதானியுங்கள்


பாசமலர்..முதலிரவுக்காட்சி..ஆண் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து வெட்கப்பட்டு, அந்தப் புகைப்படத்தை திருப்பிவைக்கும் போது அவர் முக பாவங்களை கவனியுங்கள்..


நவராத்திரி ..நவரசங்களையும் காட்டும் மாதிரி ஒன்பது வகையான பாத்திரங்கள். ஒவ்வொரு வேடத்திற்கும் வேறு வேறு உடல் மொழி..அதில் ஒன்று தான் மனநோய் மருத்துவர்.. சாவித்திரியை வார்டுக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லிவிட்டு, ஒரு நடை நடந்து கதவு வரை சென்றவர் , திரும்பி வந்து மறந்து போன ஸ்டெத் தை எடுத்து திரும்பிச் செல்வார் ..அந்தக் காட்சியைப் பாருங்கள்..


பாலும் பழமும் படத்தில் மருத்துவருக்குரிய வெள்ளை உடை அணிந்து மருத்துவமனையில் ஒரு நடை நடந்து வருவார் .அதைப் பார்த்து டாக்டராக வேண்டும் என்று டாக்டராக ஆனவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியும்


திருவருட்செல்வரில் அப்பராக..காற்றில் பறக்கும் காவி உடையை கையில் பிடித்துக் கொண்டு அவர் எழுந்து வருவதாக ஒரு காட்சி ..பாருங்கள்..


உயர்ந்த மனிதன் பாருங்கள். அதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத உயர்ந்த மனிதனுக்குரிய வித்தியாசமான உடல் மொழி கையாண்டு இருப்பார்..


ஞானஒளி படத்தில் இடைவேளைக்கு முன்னர் மணி அடிக்கும் ஆண்டனியாகவும், பின்னால் பணக்கார்ராகவும் இரண்டு வேடங்களுக்கும் ஒட்டுமொத்த வித்தியாசம் காண்பித்து இருப்பதை கவனியுங்கள்..


பார்த்தால் பசிதிரூம் படம் பாசமலர் வந்து வெற்றி பெற்றவுடன் அதே குழுவினர் பங்கேற்று வெளிவந்த படம்.. பாசமலர் பார்த்துவிட்டு பா.பசிதீரும் பாருங்கள்.. பாசமலருக்கும் இப்படத்திற்கும் 100 விழுக்காடு வித்தியாசம் காட்டி இருப்பார்.ஒரு காலை விந்தி விந்தி அப்படம் முழுக்க ஒரு புதிய உடல் மொழி காட்டி இருப்பார். படம் பார்க்க நேரம் இல்லை என்றால்..உள்ளம் என்பது ஆமை.என்ற பாடலாவது கேட்டுப் பாருங்கள்...அந்த இமயத்தின் சில கூறுகளை அறிந்து கொள்வீர்கள்

புதியபறவை கிளைமாக்ஸ் காட்சியை தமிழ் திரைப்பட வரலாற்றில் மறைக்க முடியாத காட்சியாக மாற்றி அமைத்து அவரின் அபார நடிப்புத் திறமைதானே..


இது மாதிரி அவர் படங்கள் முழுதும் சின்னச் சின்ன மறக்க முடியாத காலத்தால் அழியா காட்சிகள் இருக்கும்..


இப்படிப் பட்ட அற்புத திறமைக்காகத் தான் அவரை பல்கலைக் கழகம் என்றார்கள்..


மிகை நடிப்பு என்று சொல்லப்பட்ட பாசமலரில் தான் ஜெமினியோடு ஒரு ஆக்ரோசமான விவாத்த்திற்குப் பிறகு வசனமே பேசாமல் ” கெட் அவுட்” என்று சொல்வார்..


எந்தவித முன்னுதாரணங்களும் இல்லாமல், தான் பார்த்த, பழகிய நபர்களின் ஆளுமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, திரைவடிவமாக்கியவர்..


கப்பலோட்டிய தமிழன் பாருங்கள்.. கொஞ்சம் கூட மிகை நடிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் அபார வெற்றிக்குப் பிறகு அதே நிறுவனம், அதே விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்..கட்டபொம்மனில் கர்ஜித்தவர் , அந்த வெற்றியைச் சுவைத்தவர், அதே மாதிரி க.தமிழனிலும் கர்ஜித்திருக்கலாம்.. செய்யவில்லை..அடக்கமான, சாந்தமான முகத்துடன் வ.உ.சியாக வாழ்ந்து காட்டி இருப்பார்.

வாழும் மனிதர்களை மட்டுமா திரையில் காண்பித்தார்?

புராண கதாபாத்திரங்களான சிவன், நக்கீரன், நாரதர்,கர்ணன், பரதன், அரிச்சந்திரா எனப் பல்வேறு பாத்திரங்கள்..


உங்கள் பார்வைக்கு என்னால் நடிகர் திலகம் நடித்த 50 படங்களாவது வரிசைப்படுத்த முடியும்
பாருங்கள்..நடிகர் திலகத்தை திறந்த கண்ணோடு பாருங்கள்.. வேண்டுமென்றால் எனக்கு மின்ன்ஞ்சல் அனுப்பவும். நல்ல படங்கள் அல்ல.. அவர் நடித்த நடிகர்களுக்கான பாடங்கள் வரிசை தருகிறேன்..

இதையும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=da89d7irDO0&feature=related

அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

30 கருத்துகள்:

Sridhar சொன்னது…

Oh it was excellent, NO one can be like Shivaji, excellent work. Your post was really really excellent.

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ஸ்ரீதர் வந்ததற்கும் கருத்து தெரிவித்தமைக்கும்

Amudhavan சொன்னது…

வெற்றிவேல் மிக அழகான அருமையான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவைப் படித்து வருத்தப்பட்டேன். கவியரசர் சொல்லியிருப்பதுபோல் நடிகர்திலகம் என்பவர் ஒரு பெரிய மாமலை; ஒரு பெரிய கடல். கடலின் ஏதோ ஒரு ஓரத்திற்குச் சென்று பார்த்து அங்கே ஒரு தக்கை மிதந்து கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு இது ரொம்ப சாதாரணம் என்று சொல்லிவிட்டுப்போகிறவர்களின் கதையாக ஆகிவிட்டது.எதனை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற சுதந்திரம் இருப்பதால் வரும் வினைகளில் இவற்றைப் போன்றும் இருக்கின்றன. புதுமைப்பித்தன் ஒருமுறை சொன்னதுதான் நினைவு வருகிறது.'உன்னிடம் இருக்கும் ஸ்கேலை எடுத்துக்கொண்டு என்னை அளக்க வராதே. அது காணாது' என்று.திரையில் வெற்றிபெறும் நடிகனை விமர்சிப்பதற்கும் சிவாஜி போன்ற வரலாற்று மேதைகளை அணுகுவதற்கும் உள்ள நுட்பமான வேறுபாடுகள் தெரியாததால் வருகின்ற விபரீதங்களில் இதுவும் ஒன்று. ஹாரிபாட்டரைப் படித்து ரசித்துவிட்டதாலேயே 'ச்சே இந்த ஷேக்ஸ்பியரை எல்லாம் எப்படித்தான் ரசிக்கிறார்களோ' என்று அங்கலாய்க்கும் பிரகஸ்பதிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. தங்களின் கட்டுரைக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள். என்னுடைய தளத்தைப் பார்வையிட-http://amudhavan.blogspot.com/

பானு சொன்னது…

Great observation,of a great Legend.

சீ.பிரபாகரன் சொன்னது…

எந்தவொரு துறையை பற்றியும் அடிப்படை அறிவு இல்லாமல் கருத்துரைப்பது தவறு. நடிகர் திலகத்தை மட்டம் தட்டி பேசுபவர்களுக்கு நடிப்பு பற்றி அடிப்படை அறிவு இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும் மலையாளிகளும், வங்காளிகளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடிகர் திலகத்தை கிண்டல் செய்கிறார்கள்.

ஒரு இயக்குநர் என்ன கேட்கிறாரோ அதைத்தான் நடிகன் கொடுக்க முடியும். “நடிப்பு என்ற யானைப்பசியோடு அலைந்த சிவாஜி என்ற கலைஞனுக்கு நாம் தயிர் சாதம் கொடுத்து வீணடித்துவிட்டோம்” என்று கமலகாசன் ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையும் அதுவே.

உலகப் புகழ்பெற்ற “மார்லின் பிராண்டோ” அவர்களை உலகம் தலையில் வைத்து கொண்டாடியபோது “சிவாஜிகணேசன் என்ற என்னைவிட மிகச்சிறந்த நடிகர் இந்தியாவில் இருக்கிறார்” என்று மார்லின் பிராண்டோவே குறிப்பிட்டுள்ளார்.

நடடிகர் திலகம் அவர்களின் பன்முகத்தன்மையை ஒரு பதிவில் நிச்சயமாக பதிவு செய்யமுடியாது. இருப்பினும் தங்கள் முயற்சி சிறப்பு.

ஆறு.ச.மூர்த்தி சொன்னது…

எனக்கு இன்றும் நினைவில் ஆடுகிறது...எனது தாயின் கரம் பிடித்துக்கொண்டு பக்கத்தூர் டென்ட் கொட்டகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்க்கையில் தூக்குக்கயிற்றில் தொங்கவிடப் பட்டபோது..நான் கதறி அழுதது...வெற்றிவேல் அவர்கள் கூறியதுபோல் இவர்கள் யானையைத் தடவும் குருடர்கள்...நடிப்பு இலக்கியத்தின் சுவை அறியாதவர்கள்..

சே.குமார் சொன்னது…

//சிவாஜி என்பது ஒரு சரித்திரம்...//

unnmaiyana varikal.
nalla pathivu.

செ.சரவணக்குமார் சொன்னது…

மிக அருமை. சிவாஜி என்னும் மகா கலைஞனைப் பற்றிய உங்களின் பார்வை வியக்க வைக்கிறது.

சிவாஜி நாயகனாக நடித்த காலம் தவிர்த்து பிற்காலத்தில் அப்பா, தாத்தா வேடங்களைச் செய்தபோது நமது இயக்குனர்கள் அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இப்போது ஹிந்தியில் அமிதாப் செய்வதுபோல அற்புதமான பாத்திரங்களைச் செய்து தன்னை இயல்பாக நிரூபித்திருப்பாரேயெனில் எங்களைப் போன்ற இளைய தலைமுறையினரும் அவரைக் கொண்டாடியிருப்போம்.

தேவர் மகன் படம் மட்டும்தான் விதிவிலக்கு. மிகச்சிறப்பான நடிப்பை அதில் காணலாம். நடிகர் திலகம், தேவர் மகனைப்போல ஒரு 20 படமாவது செய்திருக்கவேண்டும் என்பது எனது ஆதங்கம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

மிக அருமையான பகிர்வு..
பிறவிக்கலைஞனை எல்லாம் விளக்கிச் சொல்ல வேண்டியிருப்பது .. காலம் செய்த குற்றம்தான் வெற்றி..

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி அமுதவன் என்னைவிட அழகாகச் சொல்லியுள்ளீர்கள்..வெற்றி பெற்ற நடிகனை விமர்சிபதற்கும் சிவாஜி போன்ற வ்ரலாற்று மேதைகளை அனுகுவற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள் இன்றைய இளைஞ்ர்கள்..

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி சீ.பிரபாகரன்..நடிகர் திலகத்தின் பன்முகத்தன்மையை ஒரு பதிவில் பதிவு செய்யமுடியாதுதான்.. இருந்தாலும் என்னால் முடிந்தது..நானே சேர்க்க வேண்டும் என்று நினைத்த பல காட்சிகள் பெரிதாகிவிடும் என்று சேர்க்கவில்லை

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி சே.குமார்., வந்ததற்கும் கருத்து சொன்னதற்கும்

அ.வெற்றிவேல் சொன்னது…

உண்மைதான் சரவணகுமார்..சிவாஜியும் ஒதுங்கி இருந்துவிட்டார்..தமிழ்ப் பட இயக்குநர்களும் அவரிடம் இருந்து விலகிவிட்டார்கள்..நன்றி சரவணகுமார்..

ஜோ/Joe சொன்னது…

வெற்றிவேல் அண்ணா,
உங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள் .முன்பெல்லாம் இது போன்று சிவாஜியை ஜஸ்ட் லைக் தட் யாராவது சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும் ..இப்போது ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என போய்க்கொண்டிருக்க பழகியாகி விட்டது .சாரு நிவேதிதா என்ற சுயசொறிதல் மேதை சொல்கிறார் ”சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது.”

அவரின் உளறல் குறித்து நான் இட்ட பதிவு ஒன்று
http://cdjm.blogspot.com/2009/03/blog-post.html

இப்போதுள்ள தலைமுறை நிறைய பேருக்கு ஒரு திரைப்படத்தை அது வெளியான காலகட்டத்தை மனதில் வைத்து மதிப்பிடத் தெரியவில்லை ..வீர பாண்டிய கட்ட பொம்மன் நடிக்கும் போது நடிகர் திலகத்துக்கு 30 அல்லது 31 வயது ...இன்றைக்கு 40-தை நெருங்கிக்கொண்டிருக்கும் அஜீத் ,விஜய் அல்லது சூர்யா யாராவது கனவில் கூட அந்த சாதனையை செய்ய முடியாது .இது போல சொல்லிகொண்டே போகலாம் .

இப்போதெல்லாம் ஒரு பேஷன் அண்ணே .. சிவாஜிக்கு நடிக்க தெரியாது ..இளையராஜாவுக்கு இசையே தெரியாது இப்படி ஏதாவது அதிர்ச்சி குடுத்தாத் தான் அறிவுஜீவின்னு ஒத்துக்குவாங்க ..நீங்க சுத்த பாமரனா இருக்கீங்க :)

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ஜோ..தங்கள் கருத்தைப் படித்தவுடன் தான் தோன்றியது..அவர் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தோடு அவர் வயசையும் சேர்த்து சொல்லி இருக்கலாம் என்று.. நன்றி ஜோ.. வருகைக்கும் கருத்துக்கும்

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி தேனம்மை..பிறவிக்கலைஞனை விளக்கிச் சொல்ல வேண்டி இருப்பது குறித்த தங்கள் ஆதங்கம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

NTFans சொன்னது…

வெற்றி வடிவேலனே, வெற்றிவேல் வீரவேல், வெற்றிவேல் வெல்லுமடா, நடிகர் திலகத்தின் படங்களில் இடம்பெற்ற இப்பாடல்களில் தங்கள் பெயர் உள்ளதாலேயோ என்னவோ, தங்களிடமிருந்து இந்த பதிவு வந்துள்ளது. மெத்த மகிழ்ச்சி.

பல உலகத் திரைப்படங்கள் நம்நாட்டில் பல்லாண்டுகளாக திரையிடப் பட்டு வந்துள்ளன. இவற்றில் எந்த படங்களிலாவது அந்நியர்கள் நம் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து வாழ்வதாக சித்தரிக்கப் பட்டிருக்கிறதா. இல்லை வாழ்ந்து தான் இருக்கிறார்களா. நமக்கு என கலாச்சார அடையாளம் உண்டு, தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அதற்கோர் குணம் உண்டு. அந்த தமிழ் இனம், அந்த தமிழ்குணத்தை அடையாளம் காட்டியவை நடிகர் திலகம் ஏற்று நடித்த பாத்திரங்கள், அதன் மூலம் அவர் கொண்டு வந்த பரிணாமங்கள். திரைப்படங்கள் காலச் சுவடுகளாகக் கருதப் படும் போது தமிழனை அடையாளம் காண உதவக் கூடியவை எதிர் காலத்தில் நடிகர் திலகத்தின் பாத்திரங்களே. அந்நிய நடிப்புக்கு சிவாஜி தேவையில்லை. ஒரு வெளிநாட்டுக் காரன் நடித்து விட்டுப் போகிறான். நம் நாட்டுக் கலாச்சாரத்தை அந்நியர்கள் மிகவும் வியப்போடும் மலைப்போடும் பார்ப்பதால்தான் அவர்களிலே கூட சிலர் நம் கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க விழைகிறார்கள். இதை சித்தரித்த படம் மேல் நாட்டு மருமகள்.
தற்போதைய கால கட்டத்திலேயே எடுத்துக் கொண்டால் சமீபத்தில் ஒரு ஆங்கில நடிகை நமது இந்திய நாட்டின் ஒரு மதத்தின் பால் மிகுந்த பற்று கொண்டு அதைத் தழுவ முற்பட்டிருக்கிறார்.

இப்படி காலத்தின் பிரதிபலிப்பாய், கலாச்சாரத்தின் அடையாளமாய் நடிகர் திலகம் என்கிற உன்னத கலைஞனை மேம்போக்காக பார்த்து விமர்சிப்பவர்களை என்ன சொல்ல...

அருணோதயம் படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

மயிலைப் பார்த்து கரடி என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
அதையும் சில பேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன் - சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்

அன்புடன்
ராகவேந்திரன் (www.nadigarthilagam.com)

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ராகவேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும்.. இதே கருத்தைத்தான் நான் என் நணப்ர்களிடமும் சொலவ்து..தமிழனுக்கு உரிய குணாதிசியங்களை அவர் திரையில் காட்டினார் என்று நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

மிக பிரமாதமாக எழுதப்பட்ட இடுகை சார். சிவாஜியோடவே கைகோர்த்துக் கொண்டு நடந்த மாதிரி ஒரு பிரமையை ஏற்படுத்தியது உங்கள் பதிவு. சிவாஜி எனும் அந்த உன்னத கலைஞ்சனுக்கு இன்னும் எத்தனை பதிவு போட்டாலும் தகும். தொடருங்கள் சார்!!! வாழ்த்துகள்.

அ.வெற்றிவேல் சொன்னது…

Ramakrishnan Vasudevan ‎@Vetrivel- hello sir! excellent article! my father is a die hard sivaji fanatic, and i would make sure he reads this, so that he would once again praise about his idol. Till now, my father and my uncle would say about the way he flicks his... cigarette before starting to sing the song yaar andha nilavu in the movie santhi. I can picturise every scene you said because i was force fed those movies during childhood!
The reason today's youngsters feel Sivaji did overacting( oru roobaa kudutha 110 rubaiku nadikkaravar appadinu oru parvalaana karuthu vundu!) is sivaji himself! Who can forget Mudhal mariyaadhai, devar magan where he has just re-defined restrained acting? the one scene where sivaji and kamal discuss about kamal going away from the village is enough to show the gap between sivaji and kamal as actors, its like a champion playing against an unseeded player in tennis, kamal is just flogged around! It is not anyone's duty to make sure they understand how great an actor sivaji is...bad acting and recent tamil movies are making your job very easy! See More

அ.வெற்றிவேல் சொன்னது…

Arunachalam Vetrivel Thanks Vasudevan. I am sorry I thought of writing that "yaar antha nilavu"in my article and while writing it skiped from my mind.. Thanks for sharing ur thoughts abt that genius in a wonderful way. Plz ask your peopel to read my article.. once agains tx

அ.வெற்றிவேல் சொன்னது…

Ramakrishnan Vasudevan you thanked the right person, vasudevan thats my dad, and through him only i came to know about sivaji! oh..and i too forgot deiva magan!! absolute genius!

அ.வெற்றிவேல் சொன்னது…

Jeeva Nanthan Thank you...I have written a chapter on Sivaji too in my book on the allegations he usually faces....Nice to read yours...fantastic!!

Babu சொன்னது…

Anthakaalam black&white picture-ku appadi nadithaal thaan reach akkum. sivaji sir padathila Oru scene-la minimum 3 short-avathu closeup irukkum.
Eppo vara padathila mothamay 3 short thaan close-up short irukkum. Yeanna eppo nadikiravanuka kuttu veli pattudumai

லீபாப்பா சொன்னது…

வ‌ண‌க்க‌ம். இந்த‌மாதிரி ஒரு ப‌திவைத்தான் எதிர்பார்த்தேன்.வாழ்த்துக்க‌ள். நான் ஒன்றும் சிவாஜியின் தீவிர‌ ர‌சிக‌னில்லை,இருந்தாலும் ஆங்கில‌ப் ப‌ட‌ங்க‌ள் அதிக‌ம் வ‌ராத‌ என் ப‌ள்ளி,க‌ல்லூரி நாட்க‌ளில் சிவாஜியின் ந‌டிப்பு,உட‌ல்மொழி,ஸ்டைல் இதெல்லாம் விய‌ப்பாயிருந்த‌து.தெலுங்கு ந‌டிக‌ர் நாகேஷ்வ‌ர‌ராவ் ஒரு பேட்டியில்,சிவாஜியால் ஒரு பாத்திர‌த்தை Overஆக‌வும் ப‌ண்ண‌ முடியும், Underஆக‌வும் ப‌ண்ண‌ முடியும்,ஆனால் எங்க‌ளுக்கெல்லாம் ஒரு Method of acting இருக்கு அதுக்குள்ளேதான் ப‌ண்ணுவோம்,சிவாஜி ஒரு முழு ந‌டிக‌ர்ன்னு சொன்னார்.சிவாஜிக்கு பிடித்த‌ திலீப்குமார்,ந‌டிக‌ர்க‌ளில் இர‌ண்டு வ‌கை,ஒன்று எந்த‌ க‌தாபாத்திர‌த்தையும் எடுத்து த‌ன் பாணிக்கு மாற்றி ந‌டிப்ப‌து(உதார‌ண‌ம்: அப்போ ந‌ம்ம‌ ர‌ங்க‌ராவ் இப்போ ஊர்வ‌சி)இர‌ண்டு, அந்த‌ க‌தாப்பாத்திர‌மாக‌வே மாறி வாழ்வ‌து,இதில் நான் முத‌ல் வ‌கை, சிவாஜி இர‌ண்டாம் வ‌கைன்னு சொன்னார்.இதை இங்கே ப‌திவு செய்கிறேன்.ம‌றுப‌டியும் உங்க‌ளுக்கு என் வாழ்த்துக்க‌ள்.

லீபாப்பா

பெயரில்லா சொன்னது…

ந‌ல்ல‌ ப‌திவு, ந‌ன்றி.ந‌டிக‌னை,அர‌சிய‌ல்வாதியை க‌ட‌வுளாக்குவ‌து, ந‌டிக‌னின் ந‌டிப்பை ர‌சிப்ப‌தை விடுத்து அவனுக்கு பாலாபிஷேக‌ம் செய்வ‌து, ந‌டிக‌னிட‌ம் எதிர்பார்ப்ப‌தை அர‌சிய‌ல்வாதியிட‌ம் எதிர்பார்ப்ப‌து,அர‌சிய‌ல்வாதியிட‌ம் எதிர்பார்ப்ப‌தை ந‌டிக‌னிட‌ம் எதிர்ப்பார்ப்ப‌து,க‌ட‌வுளின் ம‌றுஅவதார‌ம்ன்னு சொல்ப‌வ‌ரின் காலைக்க‌ழுவி குடிப்ப‌து,ப‌க்தி என்ற‌ பெய‌ரால் அல‌கு குத்துவ‌து,த‌ரையில் சாப்பிடுவ‌து,உருண்டு பிறழ்வ‌து,சின்ன‌ விஷ‌ய‌துக்கெல்லாம் கொலைவ‌ரை போவ‌து,இற‌ந்த‌வ‌ருக்காக‌ கூலிக்கு அழுவ‌து,
பெற்றோர் பிள்ளைக‌ளிட‌ம் அதிக‌ம் எதிபார்ப்ப‌து,எத‌ற்கெடுத்தாலும் அதிக‌ சென்டிமெண்ட் பார்ப்ப‌து,இன்னும் வ‌ரிசைப்ப‌டுத்த‌லாம்,எல்லாமே மிகை.
இப்ப‌டி மிகைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ந‌டிப்ப‌தை எப்ப‌டி மிகை ந‌டிப்புன்னு சொல்ல‌முடியும்,
இந்த‌ கால‌ இளைஞக‌ர்க‌ளுக்கு,ராம‌ராஜ‌ன்தான் ந‌ல்ல‌ ந‌டிக‌ர்

பெயரில்லா சொன்னது…

ந‌ல்ல‌ ப‌திவு, ந‌ன்றி.ந‌டிக‌னை,அர‌சிய‌ல்வாதியை க‌ட‌வுளாக்குவ‌து, ந‌டிக‌னின் ந‌டிப்பை ர‌சிப்ப‌தை விடுத்து அவனுக்கு பாலாபிஷேக‌ம் செய்வ‌து, ந‌டிக‌னிட‌ம் எதிர்பார்ப்ப‌தை அர‌சிய‌ல்வாதியிட‌ம் எதிர்பார்ப்ப‌து,அர‌சிய‌ல்வாதியிட‌ம் எதிர்பார்ப்ப‌தை ந‌டிக‌னிட‌ம் எதிர்ப்பார்ப்ப‌து,க‌ட‌வுளின் ம‌றுஅவதார‌ம்ன்னு சொல்ப‌வ‌ரின் காலைக்க‌ழுவி குடிப்ப‌து,ப‌க்தி என்ற‌ பெய‌ரால் அல‌கு குத்துவ‌து,த‌ரையில் சாப்பிடுவ‌து,உருண்டு பிறழ்வ‌து,சின்ன‌ விஷ‌ய‌துக்கெல்லாம் கொலைவ‌ரை போவ‌து,இற‌ந்த‌வ‌ருக்காக‌ கூலிக்கு அழுவ‌து,
பெற்றோர் பிள்ளைக‌ளிட‌ம் அதிக‌ம் எதிபார்ப்ப‌து,எத‌ற்கெடுத்தாலும் அதிக‌ சென்டிமெண்ட் பார்ப்ப‌து,இன்னும் வ‌ரிசைப்ப‌டுத்த‌லாம்,எல்லாமே மிகை.
இப்ப‌டி மிகைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ க‌லாச்சார‌த்தை ப‌ற்றி ந‌டிப்ப‌தை எப்ப‌டி மிகை ந‌டிப்புன்னு சொல்ல‌முடியும்,
இந்த‌ கால‌ இளைஞக‌ர்க‌ளுக்கு,ராம‌ராஜ‌ன்தான் ந‌ல்ல‌ ந‌டிக‌ர்

கமலேஷ் சொன்னது…

உண்மைதான் வெற்றி சார்,
படத்தின் காலம் நிகழ்ந்த வருடத்தில் அமர்ந்து போது பல முறை நான் பிரமித்திருக்கிறேன்.
இது மிகவும் அவசியமான பதிவுதான்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

அடுத்த பதிவு எப்ப ?

அம்பிகா சொன்னது…

அருமையான பகிர்வு .
எனக்கும் இதே ஆதங்கம் உண்டு.
`தெய்வமகன் ’ படத்தில் அப்பாவுக்கு பயந்த, வெகுளியான இளைஞராக வரும் அந்த பாத்திரம், மிகவும் அருமையாக செய்திருப்பார்.

கருத்துரையிடுக